Monday 1 June 2020


மனிதனின் வாழ்நாள்
 வாழ விரும்புவோர் படித்துப் பாருங்கள்.........
இந்த உலகில் நீண்டநாள் வாழ வேண்டும், என்ன செய்வது ? எல்லோருக்கும்  இந்த ஆசை உண்டு, இதற்கு யாரும் விதிவிலக்கல்ல..... வாழ்வதற்கான முயற்சி உயிரின் இயற்கை..... நீண்டநாள் வாழவேண்டும் என்பதே அறிவின் முதிர்ச்சி.....

மனிதனின் அதிகபட்ச வாழ்நாள் -
                1997-ல் பிரெஞ்சு பெண் ஜீன் கால்மென்ட் தனது 122 வயதில் இறந்தார். இதுவே  வரலாற்றில் மனிதரின் அதிகபட்ச ஆவணப்படுத்தப்பட்ட ஆயுட்காலம் எனலாம். எனினும், மனித ஆயுட்காலம் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மனிதனின் வாழ்நாளின் முழுமையான வரம்பாக 125 ஆண்டுகள் என கணக்கிடுகின்றனர். அதிகபட்சமாக அறிவிக்கப்பட்டஇறப்பு-தரவைப் பயன்படுத்தி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் சராசரி அதிகபட்ச மனித ஆயுட்காலம் 115 ஆண்டுகளாக வரையறுக்கின்றனர்.  [ Albert Einstein College of Medicine. "Maximum human lifespan has already been reached." ScienceDaily, 5 October 2016. <www.sciencedaily.com/releases/2016/10/161005132823.htm>.]

நூறு வயதை எட்டியவர்கள் -
இந்தியாவில் நூறு வயதை எட்டியவர்கள் எண்ணிக்கை 27,000 (2015) அமெரிக்காவில் 93,927 (2018), ஜப்பானில் 71,238 (2019), என தரவுகள் உள்ளன. தற்போது, அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாமிடத்திலும் உள்ளது. அமெரிக்காவில் மருத்துவ வசதி அதிகம் என்பதை நினைவில் கொள்வோம். ஜப்பான்  தன்நாட்டு மக்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்ய அதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. [111 (1950), 155 (1960), 54,397 (2013),71,238 (2019)].
இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர் என்று நமது பிரதமர் பெருமைபட கூறியதும், "புகை பிடிப்பவர்களுக்கு முதுமை வராது" என்ற நகைச்சுவையும் நினைவுக்கு வந்தது.... கொரானாவினால்      அமெரிக்காவில் அதிக உயிரிழப்பிற்கு காரணம் அங்கு வயதானோர் அதிகமாக உள்ளனர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
எந்த நாடு சிறந்த நாடு என்றால் ..... எந்த நாட்டில் உள்ள மக்கள் அதிகபட்ச வாழ்நாளை கொண்டுள்ளார்களோ, அதற்கான மருத்துவ வசதிகளையும், வாழிட சூழ்நிலையையும் உருவாக்கி தருகிறதோ அந்த நாடுதான் சிறந்த நாடு - என்பதாக தந்தை பெரியார் குறிப்பிட்டார் என்று படித்தாக ஞாபகம். குடிமக்களின் வாழ்நாள் நீட்டிப்பு அரசின் கடமை என்று சிந்தித்தவர்  தந்தை பெரியார் இன்றி யாராவது உள்ளனரா ?

நாமும் நூறு வயதை எட்டலாம் -
நாம், பெற்றோர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்களோ அத்தனை ஆண்டுகள் நாம் வாழ வாய்ப்புள்ளது. அதற்கு மேலும் வாழ்நாளை நீட்டிக்க, நம் உணவுமுறை, உடற்யிற்சி, நற்சிந்தனை போன்றவை உறுதுணையாக உள்ளது. மருத்துவ வாய்ப்பும், இயற்கை சூழலும்  வாய்க்கப் பொற்றால் நாம் அனைவரும் நூறு வயதை எட்டலாம், நல் வாழ்வு வாழலாம்.

மனித வாழ்விற்கு தடையான கருத்துக்கள்
                உணவில் சைவமா, அசைவமா ? என்ற விவாதம் தேவையற்றது. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என கண்டறிந்த பின்பும் இது குறித்து விதண்டாவாதங்ளும் வெட்டிப் பேச்சுக்களும் நிகழ்ந்துக் கொண்டேதானிருக்கின்றன...
உயிர் வாழ உணவு தேவை, அதை அறிவியல் அடிப்படையில் கண்டறிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சாதி, மதம், பழக்கவழக்கம், முன்னோர் மரபு, மரபுவழி ஆகியவற்றை காரணமாக கொண்டு - நல்லதை ஏற்க மறுப்பதும் ஒவ்வாதவற்றை உட்கொள்வதும் அறிவுடைமையாகாது.
                உணவில் தத்துவங்களை இணைத்து,  தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விரைவாக செத்துப்போவதால் என்ன பயன் ? உதாரணமாக சைவம் அதாவது தாவர உணவை மட்டுமே உட்கொள்ளுதால் வைட்டமின் குறைபாடு வரும் என்பது உறுதியான பிறகும் அதை மட்டுமே உட்கொண்டு விரைவாக சாவதால் யாருக்க என்ன பயன் ?
சிலர் மாட்டிறைச்சி உண்பதில்லை, அதற்கு அவர் மதம் தடையாக உள்ளது; சிலர் பன்றிறைச்சி  உண்பதில்லை, அதற்கு அவர் மதம் தடையாக உள்ளது; சிலர்  வெங்காயம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை, அதற்கு அவர் சாதி தடையாக உள்ளது; சிலர் கம்பங்கூழ் கேழ்வரகு கூழ் குடிப்பதை குறைச்சலாக கருதுகின்றனர்; சிலர் நத்தை நண்டு ஈசல் இனங்களை உண்பதை இழிவாக கருதுகின்றனர்;
உதாரணமாக, பாம்புகறி தின்றால் நூறு ஆண்டுகள் உயிர்வாழலாம் என்று கண்டறியப்படுமேயானால் அதை உட்கொள்வதுதான் அறிவுடைமை.....
                இப்படி தேவையற்ற தடைகள், கருத்துகள் அவர்களின் வாழ்நாளை நீட்டிக்க உதவப் போவதில்லை. இந்த கட்டுப்பாடுகள் எந்த பயனையோ, புகழையோ தரப்போவதில்லை... செத்தால் புகழும்கூட நிலைக்கப் போவதில்லை...
               
                மறுபிறப்பு என்பது பொய் ! சாவை ஏற்றுக் கொள்ளாத மனிதமனம் ஏற்படுத்திக் கொண்ட சமாதானம்... இறந்துவிட்டால் அதோடு முடிந்தது வாழ்க்கை என்பதுதான் உண்மை !
                ஆன்மா என்பதும் பொய் ! உடல்தான் அழிகிறது, ஆன்மா அழிவதில்லை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. ஆன்மா என்றால் மனசு, மனம், உள்மனம் என்றெல்லாம் சொல்லப்படுவதெல்லாம் நாம் செத்துப் போகும்போது சேர்ந்தே அழிந்துப் போகும் !
                போர், விபத்து, கலவரம், சண்டை, கொலை, தற்கொலை போன்றவற்றால் ஏற்படும் இறப்புகள் மனித சமூகத்தின் குறைபாடு. இயற்கைச் சீற்றங்களாகிய புயல், வெள்ளம், நிலநடுக்கம், ஆழிப்பேரலை போன்றவற்றால் ஏற்படும் இறப்புகளை மனிதன் அறிவின் துணைகொண்டு, அறிவியல் வழியில் தடுக்க வேண்டும்.

"உணவே மருந்து; மருந்தே உணவு" கோட்பாடு
                தாவர உணவைவிட விலங்குணவு உண்பவர்களே நீண்டநாள் வாழ்கின்றனர் என்று அறிந்த பின்பும் கூட - "உணவே மருந்து; மருந்தே உணவு" - என்று சிலர் கிளம்பி தாவர உணவையே முன்னிலைப்படுத்தினர்.  சமைக்காமல் பச்சைகாய்கறிகளை மட்டுமே உண்ணுதல் என்று ஒரு குழுவினர் ஈடுபட்டனர்..... பழங்களை மட்டுமே உண்ணுதல் என்று ஒரு குழுவினர் ஈடுபட்டனர்.... இன்னும் ஒரு கூட்டம் தேங்காய் மற்றும் வெல்லம் மட்டுமே உயிர்வாழ போதும் என்று கிளம்பினர். இதை தொடங்கிய மூலவர்களே நேய்வாய்பட்டு போய் சேர்த்தாக தெரிகிறது. மற்றவர்கள் எல்லாம் என்னவாயினர் என்று ஒரு தகவலும் இல்லை.

சித்தர்கள் காயகல்பம் கோட்பாடு
                நம் சித்தர்கள் அனைவருமே மனிதர்களின் நோயை தீர்ப்பதற்கும், நீண்டநாள் உயிர்வாழ்வதற்குமான வழிமுறைகளை கண்டறிய முயன்றுள்ளனர். சித்தர்கள் வாழ்நளை நீட்டிக்கும் மூலிகைகளை தேடி அலைந்துள்ளனர். உடல் நலனை பலப்படுத்தும், வாத பித்த சிலேத்துமத்தை சமனப்படுத்தும் மூலிகைகளை காயகல்ப மூலிகைகள் என்றும், சஞ்சீவி மூலிகைகள் என்றும் பட்டியலிடுள்ளனர். இன்றைய அறிவியல் ஆய்வுகள் அவை ஓரளவு உண்மை என நிரூபிக்கின்றன. சித்தர்கள் யாரும் ஐம்பது வயதை கடக்கவில்லை என்று கருதப்படுகிறது. [அதற்குள் "சித்தி" அடைந்தனர் என்றால் இறந்துவிட்டனர் எனறே பொருள்]

 திருமூலர் கோட்பாடு
வாழ்நாளை நீட்டிக்க மூலிகை மட்டுமன்றி மாற்றுவழியை கண்டறிய திருமூலர் முயன்றுள்ளார். உடல் வளர்த்தேன்உயிர் வளர்த்தேனே.. என்கிறார் திருமூலர்.  இறந்துபோனவர் மூச்சற்று இருப்பதால், "மூச்சு" தான் உயிர் என கருதி, மூச்சை கட்டுப்படுத்தினால் - கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் - முறைப்படுத்தினால் நீண்டநாள் உயிர்வாழ முடியும் என்ற தத்தவத்தை வடிவமைத்து தருகிறார்.  "மூச்சு - சுவாசம் - பிராணம் - ஜீவன் - உயிர்" என்றெல்லாம் யோசித்து, மூச்சை பேணும் வழிமுறைகள் மூச்சடக்குதல் [பிராணாயாமம்], வடகலை - தென்கலை மேலும் உடலில்  - பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன்,  நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், மற்றும் தனஞ்செயன் என்ற வாயுக்கள் இயங்குவதாக கூறுகிறார். இவை போன்ற - ஆய்வுக்கு உட்படுத்த இயலாத, அறிவியலுக்கு முரணாக  தன்மையில், வாழ்நாளை நீட்டிக்கும் வழிமுறைகளை கண்டறிவதில்  திசைதிரும்பி விடுகிறார்....

சரிவிகித உணவு கோட்பாடு
                மனித வளர்ச்சிக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் எவையெவை என கண்டறிந்து, அவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஊட்ட சத்துக்களின் அளவீடுகள் அடிப்படையில் உணவை  வடிவமைத்துக் கொள்ளுதல் சரிவிகித உணவு எனப்படும். நம் தினசரி உணவில் ஊட்டசத்துகள் சரிவிகித்ததில் உள்ளனவா என்பதில் கவனம் செலுத்தி, அதை நம் உணவுப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

குகைகால உணவு கோட்பாடு
                தற்போது நிலவும் உணவு முறைகளை அறிவியல் ணுகுமுறை தீர்மானிக்கவில்லை, மாறாக உற்பத்தி, வணிகம், ருசி, போன்றவையே தீர்மானிக்கின்றன. இதனால்தான் மனித வாழ்நாள் கேள்விக்குறியாகிறது. குகைகால உணவுமுறையே  மனித வாழ்நாளை நீட்டிக்கும் என்பதற்கு ஆதரவாக தற்கால ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
இன்னும் புதிய உணவு முறைகளும் வரத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது உணவு, உடற்பயிற்சி, நற்சிந்தனைக்கு பயன்படுத்துங்கள் - "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" [-அவ்வையார்].           



Tuesday 26 May 2020


தொலைந்த புத்தகம்

                "நீங்கள் பேசத் தொடங்கி பத்து நிமிடம்கூட இருக்காது, அதற்குள் பேச்சை முடித்துவிட்டீர்களே.....என்னா ஆச்சு ? உடல்நிலை சரியில்லையா ?" என்றார் புலவர் நல்லூர் கிழார். ஆனால் கைதட்டு மட்டும் ரொம்ப நேரம் ஒலித்து கொண்டேயிருந்தது...

அப்படியா ? ஏதோ நீண்ட நேரம் பேசிவிட்டது போல் உணர்ந்தேன்......."நேற்று இரவு சரியான தூக்கமில்லை" என்று மழுப்பலாக பதில் சொன்னேன்.

                நாலு நகைச்சுவை, ஆறு பாட்டு, ஏழெட்டு துணுக்கு என்று கோர்த்து வைத்துக் கொண்டுதான் மேடையேறினேன்...... எதை சொன்னேன், எதை விட்டேன்..... பேசியதை நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை.

"இன்று இரவே மருத்துவரைப் பார்த்துவிடலாமா? ஆவுடையாரை உடன் அனுப்பவா ?" என்றார் நல்லூர் கிழார்.

பல நாட்களாக சரியான தூக்கம் இல்லை என்று மருத்துவரைப் பார்த்தேன். எதையாவது கருத்துக்கோ மனதுக்கோ ஒவ்வாதவற்றை படித்துவிட்டால் அன்றிரவு முழுவதும் சரியா தூக்கம் இருப்பதில்லை என்றேன் - கொஞ்சநாள் புத்தகங்களைப் படிக்காமல் இருங்கள் என்றார்.

                   அனிதா தற்கொலை, இசைப்பிரியா வன்கொடுமை, முத்துக்குமார் தீக்குளிப்பு..... ஈழப்படுகொலைகள்.. படுபாதக செயல்கள், பாலியல் வன்கொடுமைகள், பலர்கூடி அடித்தே கொல்லுதல், வறுமை தற்கொலைகள், விதண்டா வாதங்கள்  - இவை அடிக்கடி நினைவுக்கு வருகின்றன என்றேன் - கொஞ்சநாள் தினசரி நாளிதழ்களை படிக்காதீர்கள், தொலைக்காட்சி பார்க்காதீர்கள் என்றார். 

                உடற்பயிற்சி, உணவுமுறை என்று எந்த யோசனையும் உதவவில்லை. நன்றாக தூங்கி பல வாரங்கள் ஆகின்றன.......

                சுற்றியுள்ள எல்லா நண்பர்களை விசாரித்தேன்..... அவர்கள் எல்லோரும் நிம்மதியாகவே தூங்குகின்றனர். எல்லோருக்கும் கல்லு மனசு..........
-----------
"இரண்டு வாரத்திற்கு எல்லா நிகழ்சிகளையும் இரத்து செய்யுங்கள்.....உடம்பில் பெரிதா ஒன்னும் கோளாறு இ்ல்லை, நல்லா தூங்கினால் சரியாகிவிடும்...." மாத்திரையை எழுதினார் மருத்துவர். 
                மாத்திரைதான் ஒரே வழி என முடிவு செய்தார் மருத்துவர், ஆனால் மாத்திரையால் வரும் தூக்கம், நிறைவானதாக இல்லை. நடு இரவில் விழிப்பு வந்து அரைகுறை தூக்கம்; கனவும், கண்விழிப்புமாக இரவுப் பொழுது நீள்கிறது......
.................
கண்முன்னே இருந்த நாளிதழை பிரிக்கவே இல்லை.... சர்க்கரை இல்லாத தேனீர்.. குடித்து முடிக்கவில்லை..

" வணக்கம் அய்யா" - என்றவாறே ஐந்தாறு ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்....."ம்ம் என்ன செய்தி" ? - என்றேன்.

அய்யா, நேற்று நீங்க ஒரு பத்து நிமிடம்தான் பேசினீர்கள்.... அருமையான பேச்சு அய்யா,... - சொற்களை ஒன்று ஒன்றாக இடைவெளிவிட்டபடி சொன்னான் ஒருவன்.
எதை பற்றி சொல்கிறான்.? என்ன பேசினேன்.... நினைவு இல்லையே, எதாவது  உளறி கொட்டினேனா?  நலம் விசாரிக்க வந்திருக்கிறார்களா?  ஒன்றும் புரியவில்லை.- தயங்கியவாறே,
அப்படியா ? என்றேன்.

ஆமாம் அய்யா, நேற்று பேசும்போது, இலங்கையை அடிபணிய வைக்க இந்திய செய்த சூழ்ச்சிக்கு தமிழனம் பலிகிடா ஆனதையும், தமிழின அழிவு - இந்திய உளவுதுறை சதியைப் விரிவாக சொன்னீர்கள்.... அதற்கு இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டினீர்கள்.... அதான், அந்த"தவறி விழுந்த இடங்கள்"-னு ஒரு புத்தகத்தைப் பற்றி சொன்னீர்கள், அந்த புத்தகம் வேணும் அய்யா..... என்றனர்.....

யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தேன்..... புத்தகத்தின் தலைப்பு நன்றாக ஞாபகமுள்ளது, "தவறி விழுந்த இடங்கள்"  -  "உடைந்த சுக்கானோடு கடற்பயணம்". நீலமும் பச்சையும் கலந்த அட்டை போட்டது, கைக்கு அடக்கமான புத்தகம்,,....... எழுதியவர் பெயர்கூட "அய்ந்திரத்தார்".
நேற்று இதைப் பற்றியா பேசினேன்..?.....

வெகு நேரமாய் தேடிக்கொண்டிருகிறேன்..........தேடிக்கொண்டிருகிறேன்........ அய்ந்தாறு அலமாரிகளில் உள்ள புத்தகங்களை கீழே இறக்கியாயிற்று..... புத்தகம் கிடைத்தபாடில்லை........ வியர்த்து வியர்த்து கொட்டுகிறது.... வெகு நாட்கள் சுத்தம் செய்யப்படாத அலமாரி.... தூசி மூக்கிலேறி தும்மல் வந்து கொண்டேயிருந்தது....

"அய்யா.... அய்யா......"வெளியிலிருந்து அழைப்பது கேட்டது. படிந்திருந்த தூசை தட்டிவிட்டுக் கொண்டே வெளியில் வந்தேன்.....

"வாங்க.. வேங்கையார்..... உட்காருங்கள், எல்லோரும் உட்காருங்கள்" -என்றேன். எதிரே மூன்று நாற்காலிகளே இருந்தன.... மூன்று பேர் உட்கார, பின்னால் மூன்று பேர் நின்றனர்......
ம்ம்ம்.... சொல்லுங்கள்....
அய்யா, நேற்று மன்றத்தில் பேசும்போது...
ம்ம்ம்.... சொல்லுங்கள்....

"மொழியை சிதைத்த சூழ்ச்சிகள், தொலைந்து போன ஓலைச்சுவடிகள், இனத்திற்குள் பரவிய பலவகை நஞ்சுகள்  - என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புத்தகத்தில் உள்ளதாக சொன்னீர்கள். அதை தந்தால் படித்துவிட்டு தருகிறோம்.... - என்றார் வேங்கையார்.

"அதைத் தான் ஒரு மணி நேரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்......- வேர்வையால் அரைகுறையாக  நனைந்த சட்டையில் படிந்திருந்த தூசை தட்டிவிட்டுக் கொண்டே சொன்னேன்.

"இதைக் கேட்டுதான் ஆராய்ச்சி மாணவர்கள் வந்தனர்".....என்று சொல்லிக் கொண்டே அவர்கள் எங்கே என தேடினேன்..... அவர்கள் எதிரே உள்ள வேப்பமரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்....

"இதோ கண்டுபிடித்துவிடுவேன்....இருங்கள்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தேன்.
.
தேடிக்கொண்டேயிருக்கிறேன்......... தேடிக்கொண்டிருகிறேன்....... கால் வைக்கக்கூட  இடமின்றி, அலமாரியிலிருந்து இறக்கிய புத்தகங்கள் ஆளுயரம் குவிந்து விட்டன......

"அய்யா.... அய்யா......"   மீண்டும் வெளியிலிருந்து அழைப்பது கேட்டது. சோர்ந்து போய் தட்டுதடுமாறி வெளியே வந்தேன்......

பெருங்கூட்டமே வாசலில் நின்றிருந்தது.... ஓரிருவர் முகங்கள்தான் தெரிந்தன..... "பச்சையப்பனார்..... நீலமேகனார்...... வாருங்கள், என்ன புத்தகம்தானே... எதற்கு ? – என்றேன்.

"தமிழ் நாட்டின் மலை, ஆறு, கடல்; மேடு, பள்ளம், படுகுழி; பூசல், போர்; கரவு, சூது, சூழ்ச்சி; இரண்டாயிரமாண்டு பகையை வெல்லும் வழிகள்..... என்றெல்லாம் அதில் இருப்பதாக சொன்னீர்கள்..... அதான்"  

"இதைக் கேட்டுதான் தன் தோழர்களோடு வேங்கையார் வந்தார்" என்றவாறே அவர்களை தேடினேன். அவர்கள் எதிரே புங்கமர நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்......

"இதோ கண்டுபிடித்துவிடுகிறேன்" என்று உள்ளே வந்தேன்..........

எல்லா அலமாரிகளிலிருந்தும் புத்தகங்களை கீழே இறக்கியாயிற்று........ நான் புதையுண்டு போகுமளவு உயர்ந்து நிற்பது என்ன புத்தக குவியலா..... காகித குவியலா....... குப்பைக் குவியலா....... மணற் குவியலா... புத்தகம் கிடைக்கவில்லை..... புதையுண்டு போனேன்....

இனியாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது......இனியாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது......
……………………………………………………

யாரே கையை பிடித்து தூக்குவது போலிருந்தது.....கண்விழித்தேன்.... மருத்துவர் நாடி பார்த்துக் கொண்டிருக்கிறார்........ சுற்றமும், நட்பும் சூழ நின்றிருந்தன.....