Tuesday, 23 April 2013

முள்ளிவாய்க்கால் நினைவூட்டிய கழிமுள்ளியும் நீர்முள்ளியும்



முள்ளிவாய்க்கால் நினைவூட்டிய

கழிமுள்ளியும் நீர்முள்ளியும்

     தாவரப் பெயர்களின் அடிப்படையில் மனிதர் உட்பட இடம், ஊர், நாடு, பண், பாடல், திணை ஆகியவற்றிற்கு பெயரிடுதல் தமிழ்மரபில் தொன்றுதொட்டு வழக்கதில் உள்ளது. 

முள்ளித் தாவரத்தின் அடிப்படையிலான ஊரின் பெயர்கள்

மலையும் காடும் சார்ந்த குறிஞ்சி மற்றும் முல்லைத் திணைகளில் முட்செடிகள் நிறைந்த  ஊர்களுக்கு முள்ளிக்காடு, முள்ளிப்பட்டு, முள்ளிப்பாடி என பெயரிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தர்மபுரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களில் இப்பெயர்களில் ஊர்கள் வழங்கப்படுகின்றன.  ஆனால் மருதம் மற்றும் நெய்தல் திணைகளில் முள்ளி என வழங்கப்படும் ஊர்கள், முறையே நீர்முள்ளி மற்றும் கழிமுள்ளிச் செடிகள் நிறைந்து வளர்ந்துள்ளதன் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டுள்ளன என்பதை அறியமுடிகிறது.

தமிழீழத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள முள்ளித்திடல், முள்ளிக்குளம், மற்றும் கிழக்குப் கடற்கரையில் உள்ள முள்ளிவாய்க்கால் போன்ற ஊர்கள் அனைத்தும் நெய்தற் திணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியங்களில், குறிப்பாக எட்டுத்தொகைப் பத்துப்பாட்டு செய்யுள்களில், மருதத்திணை சார்ந்து குறிப்பிடுகையில்  நீர்முள்ளி செடிகள் ''முள்ளி''  எனவும்நெய்தற்திணை சார்ந்து குறிப்பிடுகையில் கழிமுள்ளி செடிகள் ''முண்டகம்'' எனவும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விரு தாவரங்களைப் பற்றிய குறிப்புகள் எட்டுத்தொகை செய்யுள்களில் அதிகமாகவும், பத்துப்பாட்டுத் தாவரஙகளில் குறைவாகவும் காணப்படுகின்றன. மேலும் இவ்விருத் தாவரங்களை ஒப்பிடுகையில் முண்டகம் [கழிமுள்ளி] குறித்தே அதிகமாக கையாளப்பட்டுள்ளன.

நீர்முள்ளி பற்றி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் எங்கும் குறிப்புகள் இல்லை. ஆனால் முண்டகம் [கழிமுள்ளி] குறித்து, ஐந்திணை எழுபதில் [67.மூவாதியார்] ஒரு பாடலில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருதத்திணையின் நன்னீர்நிலைகளில் வளரக் கூடிய நீர்முள்ளியும் [Hygrophila auriculata], அதனையடுத்துள்ள நெய்தற்திணையின் உப்பங்கழி ஓரங்களில் வளரக்கூடிய கழிமுள்ளியும் [Acanthus ilicifolius] ''அக்காந்தேசி'' [Acanthaceae] எனும் ஒரே தாவரவியல் குடும்பதைச் சேர்ந்தவை. இவ்விரு தாவரங்களும் முட்களைப் பெற்றுள்ளதோடு, நீலநிறப் பூக்களையும் கொண்டுள்ளன. நீலநிறப்பூக்களைக் கொண்டுள்ள குறிஞ்சி தாவரமும் இதே தாவரவியல் குடும்பதைச் [Acanthaceae] சேர்ந்தது என்பதையும், நீலநிறப் பூக்களைக் கொண்டுள்ள இக்குறிஞ்சி தாவரத்தை அதிக அளவில் பெற்றுள்ள மலைத்தொடர் ''நீலகிரி'' என வழங்கப்படுவதையும் [கிரி=மலை]. இங்கு ஒப்பு நோக்கலாம்.

எட்டுத்தொகை
முண்டகம் [கழிமுள்ளி ]
முள்ளி   [நீர்முள்ளி] 
நற்றிணை
207 /  245 / 311          [ நெய்தல்]
இல்லை
குறுந்தொகை
49 / 51                           [நெய்தல்]
இல்லை
ஐங்குறுநூறு 
108 / 121 / 177
21 / 22 / 23
பதிற்றுப்பத்து
இல்லை
இல்லை
பரிபாடல்    
இல்லை
இல்லை
கலித்தொகை
133
இல்லை
அகநானூறு
80 / 130                         [நெய்தல்]
26 / 236
புறநானூறு
24
இல்லை




பத்துப்பாட்டு
முண்டகம் [கழிமுள்ளி ]
முள்ளி   [நீர்முள்ளி] 
திருமுருகாற்றுப்படை
இல்லை
இல்லை
பொருநராற்றுப்படை
இல்லை
இல்லை
சிறுபாணாற்றுப்படை
148
இல்லை
பெரும்பாணாற்றுப்படை
இல்லை
215 - 216
முல்லைப்பட்டு
இல்லை
இல்லை
மதுரைக்காஞ்சி
96 - 97
இல்லை
நெடுநெல்வாடை
இல்லை
இல்லை
குறிஞ்சிப்பாட்டு
இல்லை
இல்லை
பட்டினப்பாலை
இல்லை
இல்லை
மலைபடுகடாம்
இல்லை
இல்லை

               
நீர்முள்ளி [Hygrophila auriculata]

நீர்முள்ளிச்செடி குறித்த செய்திகள்   அகநனூறு, ஐங்குறுநூறு, பெரும்பாணாற்றுப்படை பாடல்களில் இடம்பெற்றுள்ளன. கீழ்காணும் செய்திகளின் அடிப்படையில்முள்ளி என குறிக்கப்படும் தாவரம், தற்போது வழங்கப்படும் நீர்முள்ளி தாவரமே என அறியப்படுகிறது.    

மருதநில நன்னீர் நிலைகளின் ஓரங்களில் வளர்தல்
வளைந்த முட்களைப் பெற்றிருத்தல்
நீலநிற மலர்களைக் கொண்டிருத்தல்
முட்களையுடைய காம்புகளை பெற்றிருத்தல்
செடிகளின் கீழ் வளையில் புள்ளியுள்ள நண்டுகள் வாழ்தல்

வயலும் வயல்சார்ந்த பகுதியாகிய மருதத்திணையில் உள்ள நீர்நிலை ஓரங்களில் நீர்முள்ளி செடிகள் வளர்கின்றன.




ஐங்குறுநூறு - நீர்முள்ளி

''முள்ளி நீடிய முதுநீரடை கரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும் ''
                                                                - ஐங்குறுநூறு [21] - மருதம், ஓரம் போகியார்
[நீர்முள்ளி செடிகள் நீண்டு வளர்ந்திருக்கும், பழைய நீர்மிக்க அடைகரையில் புள்ளிகளை உடைய நண்டு ஆம்பல் தண்டை அறுக்கும்]

''அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்''
                                                                - ஐங்குறுநூறு [22] - மருதம், ஓரம் போகியார்
[சேற்றிலாடிய புள்ளிகளை உடைய நண்டு நீர்முள்ளி செடிகளின் வேரில் அமைந்துள்ள வளையில் புகும் ஊரினையுடையவன்]

''முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டி
பூக்குற்ற எய்திய புனல்அணி ஊரன்''
                                                                - ஐங்குறுநூறு [23] - மருதம், ஓரம் போகியார்
[நீர்முள்ளி செடிகளின் வேரில் அமைந்துள்ள வளையில் வாழும் நண்டை வருத்தியும், மலர்ளைப் பறித்தும் விளையாடும் புனலினை அணியாக கொண்ட ஊரினையுடையவன்]

அகநானூறு - நீர்முள்ளி

''கூன்முள் முள்ளி குவிகுலைக் கழன்ற
மீன்முள் அன்ன வெண்கால் மாமலர்''
                                                                -  அகநானூறு [26]- மருதம், உக்கிரப் பெருவழுதி
[வளைவான முட்களை உடைய நீர்முள்ளியின் குவிந்த குலையினின்று தாமே உதிர்ந்த மீனின் முட்களைப் போன்ற வெண்மையான காம்பினை உடைய கரும் மலர்]
''மணிமருள் மலர முள்ளி அமன்ற
துணிநீர், இலஞ்சிக் கொண்ட பெருமீன்''
                                                                - அகநானூறு [236]- மருதம், பரணர்
[நீலமணிப் போன்ற மலர்களையுடைய நீர்முள்ளிச்செடி நிறைந்த தெளிந்த நீரையுடைய மடுவில் உள்ள பெருமீன்]

பெரும்பாணாற்றுப்படை - நீர்முள்ளி

''முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு அவண''
                                                - பெரும்பாணற்றுப்படை [215-216], உருத்திரங்கண்ணனார்
[அரும்புகள் சூழ்ந்த, முள் பொருந்திய கொம்புகளை உடையனவான, மறித்த வாயை உடைய நீர்முள்ளியின் வளைந்த காம்பையுடைய கரிய பூவைப் பறிப்பர்]


கழிமுள்ளி [Acanthus ilicifolius]   
      
ஐந்தடிவரை நிமிர்ந்தும் அடர்ந்தும் வளரக்கூடிய முட்புதற்செடி. இலைப்பரப்பு வளைந்தும் நெளிந்தும் பிளவுற்றும், விளிம்பில் முட்களையும் பெற்றுள்ளது.  நுனியிலும் இலைக்கோணத்திலும் பெரிய அளவில் நீலநிறப் பூக்களை தோற்றுவிக்கும். கடலும் கடல்சார்ந்த பகுதியாகிய நெய்தற்திணையில் உப்பங்கழியின் ஓரங்களில் முண்டகம்  வளர்கின்றன. இத்தாவரத்தின் பண்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி சங்க இலக்கிய பாடற்குறிப்புகள் பொருந்திவரக்கூடிய இன்றைய  கழிமுள்ளி தாவரம், முன்பு முண்டகம் என வழங்கப்பட்டதை அறியலாம்.

பண்புகள்

1. உப்பங்கழியில்   வளர்தல்
2. உப்பங்கழியில் கண்டல் மரங்களுடன் காணப்படுதல்
3. உப்பங்கழியில் தில்லை மரங்களுடன் வளர்தல்
4. அணில் பற்களை போன்று முட்களை பெற்றிருத்தல்
5. நீலநிற மணிகளைப் போன்று மலர்கள்  பெற்றிருத்தல்
6. மீன் முட்களைப் போன்று முட்கள்  கொண்டிருத்தல்
7. வளைந்த முட்கள் [கூன் முள்] கொண்டிருத்தல்


பயன்பாடுகள்

1. முண்டக செடிகளைக் கூரை வேய்தல்
2. முண்டக மலர்களை மகளிர் சூடிதல்

கழிமுள்ளி செடிகள் முட்களடர்ந்து இருப்பதனால், இதனை உலர்த்தி படியவைத்து கூரை வேய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது வழக்கொழிந்துவிட்டது. மலர்கள் நீலநிறத்தில் சூடிக்கொள்வதற்கு அழகாக இருப்பினும் தற்போது இதுவும் வழக்கொழிந்துவிட்டது.    







நற்றிணை - முண்டகம்

''கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை''
                                                                - நற்றிணை [207] - நெய்தல், - பாடியவர் தெரியவில்லை
[கண்டல் மர வேலியையுடைய உப்பங்கழி சூழ்ந்த கொல்லை, கழிமுள்ளி செடிகளால் வேயப்பட்ட கூரையை உடைய சிறுமனைகள் கொண்ட கடற்கரைப் பாக்கம்]

''நகையாகின்றே தோழி ! தகைய
அணிமலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇ''
                                                                - நற்றிணை [245] - நெய்தல், அள்ளங்கீரனார்
[தோழி ! இசைக்கும் வண்டுகளை மருள செய்யும் நீலமணியை போன்ற அழகிய கழிமுள்ளி மலர்ளைக் கொண்ட பூங்கொத்தை சூடியிருக்கிறாய்]

''வறப்பின், மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள்உப்பு விளையும்''
                                                                - நற்றிணை [311] - நெய்தல், உலோச்சனார்
[மழை வறப்பின், நெடுநீரிலிருக்கும் கழிமுள்ளியின் மலர்கள் உதிர்த்து, உப்பங்கழி காய்த்து வெள்ளை உப்பு விளையும்]

குறுந்தொகை - முண்டகம்

''அணிற் பல்அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக் கேழ்அன்ன மாநீர் சேர்ப்ப''
                                                                - குறுந்தொகை [49] -நெய்தல், - அம்மூவனார்
[அணிலின் பல்லையொத்த முட்களையுடைய தாதுமுதிர்ந்த கழிமுள்ளியும், நீலமணியன் நிறமொத்த நெடுநீரினை உடைய தலைவா !]

''கூன்முள் முண்டகத் கூர்ம்பனி மாமலர்
நூல்அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூமணற் சேர்ப்பனை''
                                                - குறுந்தொகை [51] -நெய்தல், - குன்றியனார்
[வளைவான முட்களையுடைய கழிமுள்ளியின் மிக்க குளிர்ச்சியினை உடைய சிறந்த மலர்கள், நூலற்று உதிரும் முத்துக்கள் போல காற்றால் சிதறி நீர்துறைதோறும் பரவும் தூய மணலை உடைய தலைவனே]

புறநானூறு - முண்டகம்

''வண்டுபட மலர்த்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்''
                                                - புறநானூறு [24] - மாங்குடி மருதனார்
[வண்டுகள் வந்து மொய்த்தலால் மலர்கள் மலர்ந்த நறுமணமுடைய கடற்கரைச் சோலையிலே, கழிமுள்ளி மலர்க்கொத்தை சூடிக்கொள்ளும் மகளிர்]

கலித்தொகை - முண்டகம்

''மாமலர் முண்டகம் தில்லையோடு ஒருங்குடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்''
                                                - கலித்தொகை [133],- நல்லந்தவனார்
[கரிய மலர்கள் உடைய கழிமுள்ளி, தில்லை மரங்களோடு செறிந்து வளர்ந்திருக்கும் உயர்ந்த மணற்மேட்டினை உடைய கடற்கரைச் சோலை]
                               
ஐங்குறுநூறு - முண்டகம்

''அன்னை வாழி ! வேண்டன்னை கழிய
முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்''
                                                - ஐங்குறுநூறு [108] - நெய்தல், - அம்மூவனார்
[தாயே ! உப்பங்கழியல் உள்ள கழிமுள்ளி மலரும் குளிர்ந்தகடற் தலைவன்]

''முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே''
                                                - ஐங்குறுநூறு [121] - நெய்தல், - அம்மூவனார்
[கழிமுள்ளி மலரை அணிந்த கூந்தல் நனையும் வண்ணம் தெளிவான திரையை உடைய கடலில் படிந்து விளையாடினாள்]

''முண்டக நறுமலர் கமழும்
தொண்டியனோள் தோள் உற்றோரே''
                                                - ஐங்குறுநூறு [177] - நெய்தல், - அம்மூவனார்
[கழிமுள்ளி மலரின் நறுமணம் கமழும் தொண்டிநகர் போன்றவளின் தோள் கண்டோரே]
                                                                               

அகநானூறு - முண்டகம்

''பல்மீன் உணங்கற் படுமுள் ஒப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை''
                                                - அகநானூறு [80]- நெய்தல், மருங்கூர் கிழார்
[உலர்ந்த மீன்களின் நிறைந்த முட்களை ஒத்த முண்டகம் தழைத்திருக்கும் நெடுநீர் கடற்கரை]

''முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரை
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை''
                                                - அகநானூறு [130] - நெய்தல், வெண்ணாகனார்

சிறுபாணாற்றுப்படை - முண்டகம்

''கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்''
                                                - சிறுபாணற்றுப்படை [148], இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
[முதற் சூலினை உடைய கழிமுள்ளி செடியின் நீலமணி போல் மலரும்]

மதுரைக் காஞ்சி - முண்டகம்

''மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப''
                                                - மதுரைக் காஞ்சி [96-97], மாங்குடி மருதனார்

[நீலமணிப் போன்ற மலர்களை உடைய கழிமுள்ளி செடிகளை உடைய கடற்கரைச் சோலையில், பரதவரோடு மகளிரும் குரவைக் கூத்தின் ஓசையெழுப்பினர்] 

ஐந்திணை எழுபது -  முண்டகம்

''பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலில் கண்டேன் எனத் தெளிந்தேன்''
                                                                                                - ஐந்திணை எழுபது [67],மூவாதியார்

[பொருள்களை கொண்டு நாவாய் செலுத்தும் கடற்கரைத் தலைவனை முண்டகம் நிறைந்து வளர்ந்திர்கும் கானலில் கண்ணுற்றேன்]

முண்டகம் என்பதற்கு நெற்றி, முள்ளுடைமூலம், நீர்முள்ளி, தாமரை, கள்வகை என பல்பொருள் விளம்புகிறது திவாகரம் நிகண்டு. நிகண்டுகளிலேயே மிகப்பழைமையானது திவாகரம்  என்பதனால் இதனையே பிற நிகண்டுகளும் வழிமொழிகின்றன. சங்க இலக்கியங்களில் வரும் முண்டகம் என்ற சொல்லிற்கு  நெற்றி, முள்ளுடைமூலம், நீர்முள்ளி, தாமரை, கள்வகை என பலபொருள்கள் எவ்வாறு ஏற்றப்பட்டன என அறிய இயலவில்லை. காளமேகம் பாடலில் [71] வரும் ''முண்டகத்தின் மீது முழுநிலம் பூப்பதுண்டு'' என்பது கூட கழிமுள்ளின் [முண்டகத்தின்]  நீலமலரை குறித்ததற்குதான் பொருத்தமாக உள்ளது, எனினும் உரையெழுதுவோர்கள், முண்டகம் என்பது தாமரையை குறிப்பதாக கொண்டு, தாமரைத் திருமேனி சிவபொருமானின் முடியில் நீலநிற உமையாளை குறிப்பிட்டதாக விளக்கமளிக்கிறார்கள்.

       சங்க காலம் முழுமையும் முண்டகம் என்பது கழிமுள்ளியே குறிப்பதாக உள்ளது என்பதும், பிற்காலத்தில்தான் குறிப்பாக காளமேகப்புலவர் காலத்திற்கு பின்னர் அது தாமரையை குறிப்பதாக கொள்ளப்பட்டது என அறியமுடிகிறது.


                கழிமுள்ளி முண்டக மலர், உலகத் தமிழர்கள் அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய மலராகிவிட்டது.