Monday, 26 September 2016

சில்லென்று பூத்த நெருஞ்சி ... !

நெருஞ்சி

       யாருக்கும் நெருஞ்சிமுள் தெரியாமல் இருக்க முடியாது. "உங்களை நெருஞ்சிமுள் தைத்திருக்கா?" என்று கேட்டுப்பாருங்கள். ஆம் என்றால், அவரது கிராமத்து வாழ்கையின் அடையாளத்தை உணர்ந்துக் கொள்ளலாம். நெருஞ்சித் தாவரம், எல்லா வெப்பமண்டல நாடுகளி லும் பரவி காணப்படுகிறது. இது வறண்ட நிலத்திலும், வளமற்ற மண்ணிலும் வளரும் தன்மையுடையது.


சில்லென்று பூத்த நெருஞ்சி
       சங்ககாலம் முதற்கொண்டே நெருஞ்சி தாவரம் தமிழர்களின் வாழிடத்தோடும், வாழ்வியலோடும் இணைந்தே உள்ளது. நெருஞ்சித் தாவரம் வளம் குறைந்த நிலத்தில், தரையோடு படர்ந்து வளர்பவை. சங்கப் புலவர்கள், வளம் குறைந்த நிலத்தைப் புன்புலம், பாழ்மனை, பாழ்நிலம் எனக் குறிப்பிடுகின்றனர். எங்கேனும் நெருஞ்சி அடர்ந்து வளர்ந்து, அதில் பொன்னிற மஞ்சள் மலர்களை கண்டால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அதனால்தான், கவிஞர் கண்ணதாசன், "மாலையிட்ட மங்கை" திரைப்படத்திற்கு "சில்லென்று பூத்த, சிறுநெருஞ்சிக் காட்டினிலே" என்று பாடல் எழுதினாரோ! இவ்வளவு அழகான மலரிலிருந்து தோன்றும் காய் முட்களை உடையதாக உள்ளது. இதனை கண்ணுற்ற சங்கப் புலவர் அள்ளூர் நன்முல்லையார், "இனியவை செய்த தலைவன் இன்னா செய்வதாக மாறியது, நெருஞ்சியின் கண்ணுக்கினிய புதுமலர், முள்ளாக மாறியதைப்போன்று" என உவமையாக கூறுகிறார். [குறு.202]. 

ஞாயிறு திசைநோக்கி. . . .
        நெருஞ்சிப்பூவுக்கு உள்ள இன்னுமொரு சிறப்பும் உண்டு! நெருஞ்சிப்பூ, சூரியன் செல்லும் திசைநோக்கி திரும்பும் பண்புடையது. இதனையறிந்த சங்கப் புலவர்கள் தங்கள் பாடல்களில் இச்செய்தியை உவமையாக பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர் மதுரை வேள்ஆதத்தனார், "தலைவன் ஞாயிறு போன்றவன், அவன் திசைநோக்கி திரும்பும் தலைவியின் பணைத்தோள் - நெருஞ்சிமலர் போல்வன!" என்று உவமையாக்கியுள்ளார் [குறு.315].  அதே போல், "சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, என்னொடு திரியச் செய்வேன் " என்று தலைவன் குறித்து தலைவிக் கூறுவதற்கு நெருஞ்சிப்பூவை உவமையாக்கியுள்ளார் சங்கப் புலவர் பாவைக் கொட்டிலார் [அக.336]. மேலும் சங்கப் புலவர் மோசிகீரனார், "நெருஞ்சியின் பொன்நிறப்பூ கதிரவனை நோக்கி மலர்வது போல், வறுமையுற்றோரது பாத்திரம், கொங்கானத்து கிழாரை நோக்கின" என உவமைபடுத்தியுள்ளார் [புற.155].

நெருஞ்சி முள்ளா ? நெருஞ்சிப் பழமா?
       சதைப்பற்று உள்ளதைத் தான் "பழம்" என்று சொல்வது வழக்கம்! ஆனால், நெருஞ்சிமுள் ளை, "நெருஞ்சிப்பழம்" என்று சுவைப்பட சொல்கிறார் திருவள்ளுவர்.

            அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
            அடிக்கு நெருஞ்சிப் பழம்

இது தாவரவியல் அடிப்படையில் மிகச்சரியானதே! நாம் நெருஞ்சிமுள் என்றழைப்பது, உண்மையில் பழம் தானே [FRUIT].

       ஒத்தையடிப் பாதையிலோ, திறந்தவெளியிலோ நடந்து செல்லும் போது காலில் நெருஞ்சிமுள் தைப்பது, கிராமப் பகுதிகளில் மிக பொதுவான நிகழ்வு.  இப்படித்தான் முதிய தமிழ்ப்புலவர் ஒருவரை நெருஞ்சிமுள் தைத்துவிட்டது. பாம்புக்கடி மருத்துவரிடம் சென்று, விடுகதைபோல் தனது புலமையை வெளிப்படுத்தி,

"முக்காலை கையில் எடுத்து,
மூவிரண்டு போகையிலே,
இக்காலில் ஐந்துதலை நாகம்,
அழுந்த கடித்தது....! " - என்றார் புலவர்.

பாம்புக்கடி மருத்துவர் தமிழ்ப்புலவரைக் காட்டிலும் புலமைப் பெற்றவர். அவரும்

"பத்து ரதன் புத்திரனின்,
மித்துருவின் சத்துருவின்,
பத்தினியின் கால் வாங்கி,
தேய்...!" என்று உடனடியாக மருத்துவம் சொன்னார். 

      தசரதனின் புத்திரன் இராமனின் நண்பன் சுக்ரீவனின் எதிரி வாலியின் பத்தினி தாரையின் காலை வாங்கி, அதாவது, தரையில் தேய்த்துவிட்டு செல்! என்று கூறியுள்ளார். நெருஞ்சிமுள் காலில் தைத்துவிட்டால், அதனை தரையில் மேலாக தேய்த்துவிட்டு செல்வது வழக்கம்.

மருத்துவத்தில் …..  
       நெருஞ்சி தாவரத்திற்கு சித்த மருத்துவத்தில், திரிகண்டம், திரிதண்டம், காமரசி, கோண்டம், சுதம், கிட்டிரம், கோகண்டம் என வேறு பெயர்கள் உண்டு. நெருஞ்சி, குறிப்பாக குளிச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, உள்ளழலாற்றி, உரமாக்கி, ஆண்மைப்பெருக்கி, துவர்ப்பி   என பல மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளது. சொட்டுநீர், சுரவெதும்பல், கல்லடைப்பு, நீரடைப்பு, முடவாய்வு, வெள்ளை, சிறுநீர் எரிச்சல், முக்குற்றம், நீர்வேட்கை, வெப்பம், ஆகிய நோய்கள் குணமாகும் என அகத்தியர் பாடல்கள் தெரிவிக்கின்றன. [குணபாடம், பதார்த்தகுண சிந்தாமணி]. 

நல்ல நெருஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை
வல்ல சிரமனலை மாற்றுங்காண் - மெல்லியளே
மானிலத்தில் கல்லடைப்பும், வாங்காத நீர்கட்டுங்
கூனுறு மெய்வாதமும் போக்கும்.

மேகவெட்டை நீர்ச்சுறுக்கு வீறுதிரி  தோஷம்புண்
வேகாசுர தாகவெப்பை விட்டொழியும் - போகந்
தருந்சின் மதலைமொழித் தையலே - நல்ல
நெருஞ்சிதனை நினை.

சொல்லவொண்ணா நீர்கட்டு துன்பமாமிச மருகல்
கல்லடைப் பெனும் பிணிகள் கண்டாக்கால் - வல்லக்
கருஞ்சின வேற் கண்மாதே காசினிக்குள் நல்ல
நெருஞ்சிநறும் வித்தை நினை.

         ஆண்தன்மையை அதிகரிக்கும் பண்பை, குறிப்பாக அதற்கு காரணமான ஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் [இயக்குநீர்] அளவை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பண்பு நெருஞ்சித் தாவரத்திற்கு உள்ளதாக கருதப்படுகிறது. உடல் வலுவேற்றுவதற்காக, குறிப்பாக விளையாட்டு வீரர்கள், நெருஞ்சித் தாவரத்தைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




No comments:

Post a Comment