கொட்டிக்கிழங்கு
[Aponogeton
monostachyon]
நமக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும், கிடைப்பது
மிகவும் அரிது. நம்மோடு வளமையான காலத்தில் உடனிருந்து, இக்கட்டான நேரத்தில் பிரிந்து
விலகிச் செல்கின்ற உறவுகளையும் நண்பர்களையும் நிறைய சந்திக்கின்றோம். துன்பமான காலத்திலும்
உடனிருந்து ஒப்புரவு கொள்பவர்களே நல்ல நண்பர்கள் - உறவுகள். இதனை இயற்கை நிகழ்வோடு
ஒப்புமைப்படுத்தியுள்ளார் தமிழ்மூதாட்டி ஔவையார்.
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
- ஔவையார் (மூதுரை - 17)
[ நீர் அற்ற குளத்திலிருந்து பறந்து செல்கின்ற நீர்ப்பறவை போல், வறுமை வந்த போது நீங்குவோர் உறவு அல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல வறுமையான காலத்திலும் நீங்காமல் உடனிருந்து துன்பதை அனுபவிப்பவரே நல்ல உறவினராவர்” ]
சங்க
இலக்கியங்களில், கொட்டித் தாவரம் குறித்து குறிப்புகள் இல்லை, பிற்கால ஔவையார் பாடலில்
மட்டுமே "கொட்டி" குறிப்பிடப்பட்டுள்ளது. ஔவையார் ஒருவரல்லர், சங்கம் மருவிய
காலத்திலும் ஔவையார் என்ற பெயரில் புலவர்கள் இருந்துள்ளனர் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கவியரசர் கம்பரின் தனிப்பாடலிலும் "கொட்டிக் கிழங்கு" குறிப்பிடப்பட்டுள்ளது,
“இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய” – கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்”
[ முதலிரு வரிகள் அம்பிகாபதி பாடியதாகவும், தொடர்ந்து
கம்பர் பாடி முடித்ததாக கூறப்படுவது ஆய்வுக்குறியது. ]
நம்முன்னோர்கள் கொட்டிக்கிழங்கை வேகவைத்து உணவாகவே உண்டனர்,
இதில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. இப்போது இப்பழக்கம் வழக்கொழிந்துவிட்டது. இதுபோல் தமிழர்கள்
தொலைத்த பாரம்பரிய அறிவு எண்ணிலடங்காதவை... கொட்டிக்கிழங்கைப் பறித்து தோலைநீக்கி சுத்தம்செய்து பச்சையாகவே உண்ணலாம், மரவள்ளிக்கிழங்கு போன்று சுவையாக இருக்கும்.
கொட்டி, மருதநிலத்தின் ஆழமற்ற நீர்நிலைகளில்
குறிப்பாக, ஏரிகள் மற்றும் குளங்களின் கரையோரங்களிலும், நீர்தேங்கியுள்ள மணற்பாங்கான
வயல்களிலும் வளர்கிறது. கொட்டி தாவரம், கீழே மண்ணில் வேரூன்றி, நீர்மட்டத்தில் இலைகளை
பரப்பி, நீர்மட்டத்திற்கு மேல் மஞ்சரியை கொக்கிபோல்
நீட்டி வளர்ந்து காணப்படும். நீர்நிலைகள்
வற்றிப்போனாலும் மண்ணில் புதைந்திருந்திக்கும் கொட்டிக்கிழங்கு, மழைக்காலத்தில் நீர்நிறைந்ததும்
வளரத் தொடங்கும்.
கொட்டியில் பலவகைகள் உண்டு, அவை கருங்கொட்டி [Arum nympacifolia], காறற்கொட்டி [Arum minutum], தண்டற்கொட்டி [Arum trilobatum] என்று சாம்பசிவம்பிள்ளை சித்தமருத்துவ
அகராதியில் குறிப்பிட்டாலும், அவை கொட்டியின் [Aponogeton] சிற்றினங்கள் இல்லை. உலகில் கொட்டியின் [Aponogeton] சிற்றினங்கள் 57 உள்ளன எனவும், இந்தியாவில் 7 சிற்றினங்கள்
உள்ளதாகவும் ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கொட்டிக்கிழங்கு குளிர்ச்சி என்பார்,
தேமலுடன்
ஒட்டி நிறைமேகம் ஒழிக்கும்காண் -
வட்டமுலை
மானே ! அகக்கடுப்பும் வந்த அழலும்
தணிக்குந்
தானே, இதை அறிந்து சாற்று !
[கொட்டிக் கிழங்கு தேமல், பிரமேகம், உட்சூடு ஆகிய
இவைகளை நீக்கும். இதனை குளிர்ச்சி என்பார் என்க.] என அகத்தியர் பாடல் தெரிவிப்பதாக
குணபாடமும், பதார்த்த குண சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. கொட்டிக் கிழங்கை உலர்த்தி
பொடித்து சூரணமாக உட்கொண்டால் பிரமேகம், தேகச்சூடு குணமாகும்.
வெட்டுகாயங்களை
ஆற்றும் தன்மை கொட்டியின் இலைகளுக்கு உண்டு, பூஞ்சை கொல்லியாக பயன்படும் வேதிப்பொருள்
கிழங்கின்சாற்றில் உள்ளது. கொட்டிக்கிழங்கு, உடலில் சர்க்கரை அளவை குறைக்கும் குணம்
உடையது என்பதை இக்கால நவீன ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
தமிழ்மண்ணோடு வாழும் கொட்டிக்கிழங்கின் பயன்பாட்டை,
வழக்கொழியாமல் கெட்டியாய் பிடித்துக்கொள்வோம்.
நன்றி அய்யா.
ReplyDeleteஎங்கள் ஊர் சாயல்குடிக்கும் ஏர்வாடிக்கும் இடையே கோட்டையேந்தல் என்ற ஊர் உள்ளது. என்அம்மா பிறந்த ஊர். அது கொட்டியேந்தல் என்பதன் திரிபு எனக்கண்டுள்ளேன்.
பலமுறை நான் கொட்டிக்கிழங்கு அவித்து உண்டுள்ளேன்.
அருமை
ReplyDeleteஐயா வணக்கம் என் ஊர் ஆண்டார்முள்ளிப்பள்ளம் எங்கள் ஊரில் நிறைய இருக்கின்றது .எனது அம்மா அவித்து தருவார் நன்றாக இருக்கும் ,ஆனால் அதன் மகிமை உங்களால் தான் அறிந்தேன் .நன்றி ஐயா
ReplyDeleteஐயா நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன் என் முன்னோர்களிடம் என் குலம் என்னவென்று கேட்டால் ஒருசிலர் மட்டும் கொட்டி கிழங்கான் என்று கூறினார்கள் ஏன் இந்த பெயர் என்று தேடினால் இந்த தகவல் கிடைக்கிறது இந்த கிழங்கு கிடைக்கும் இடம் எந்த பகுதி ? எந்த திணை சார்ந்த பகுதியில் இது கிடைத்தது?
ReplyDeleteநீங்கள் எந்த ஊர்?
Deleteஇராமநாதபுரம் மாவட்டம் சாலல்குடி அருகே கட்டாலங்குளம்... சிக்கல் அருகேயுள்ளதுதான் கொ(கோ)ட்டியேந்தல்
Delete