Monday, 26 September 2016

பூந்தாழை [Pandanus amaryllifolius]

பூந்தாழை [Pandanus amaryllifolius]
             தாழை என்றதும், மனதை மயக்கும் தாழம்பூ வாசம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இலையிலிருந்து நறுமணம் தரக்கூடிய பூந்தாழை என்பது தாழை இனத்தைச் சேர்ந்த குறுந்தாவரம். இது வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. தாழையைவிட உயரம் குறைவாகவும்; தாழையிலையைவிட சிறியதாக, முட்கள் இ்ல்லாத இலையைக் கொண்டுள்ளது. இதன் இலையில் முட்கள் இல்லை என்பதால் பூந்தாழை எனப்படுகிறது எனலாம்.

#சங்கஇலக்கியங்களில் .... 
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தாழை, கைதை, கண்டல் எனும் இம்மூன்றும் ஒன்றா ? வெவ்வேறா ?. சில ஆண்டுகளுக்கு முன் தாவரங்களுக்கு தமிழில் இருசொற்பெயரிடுதல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. "கபிலரின் குறிஞ்சிப்பாட்டு, தலைவியும் தோழியும் சேகரித்த நூறு மலர்களில் கைதையும் தாழையும் இருந்தாக குறிப்பிடுகிறது. எனவே கைதையும் தாழையும் வெவ்வேறு தாவரங்கள் என கருதலாம்" என்றார் தாவரத் தகவல் மையத்தலைவர் பஞ்சவர்ணம். இன்றும் மலையாளத்தில் தாழை, கைதை என்றே அழைக்கப்படுகிறது. "கண்டல் என்பது தாழையை குறிப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது பொருத்தமானதாக இல்லை. கண்டல் என்பது [வெண்கண்டல், கருங்கண்டல், அலையாத்தி] Avicennia marina, Avicennia officinalis என்பதையே குறிக்கும் என்றார்" முன்னாள் வனத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம். பேராசிரியர் மேத்தியூ தாழையில் மூன்று சிற்றினங்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளார். ஒரு சிற்றினம் தமிழ்ச் சொல்லையே [கைதை] பயன்படுத்தி Pandanus kaida என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேம்பெல் மற்றும் பிஷ்சர், தாழையில் நான்கு சிற்றினங்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் பூந்தாழை பற்றி எவ்வித குறிப்பும் சங்க இலக்கியங்களில் இல்லை. 

#பூந்தாழை என்ற ஊர் 
நாகை மாவட்டம் சீர்காழி - ஆக்கூர் இடையில் பூந்தாழை என்ற ஊர் உள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், நம்புதாளை என்ற கிராமம் முற்காலத்தில் பூந்தாழை எனப் பெயர் பெற்று விளங்கியது. இவ்விரு ஊர்களிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பூந்தாழையை வளர்ப்பதையும், தாங்கள் செய்யும் பிரியாணி உட்பட அனைத்து அசைவ உணவுகளில் பூந்தாழையை சேர்ப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால்தான் இவ்வூர்கள் பூந்தாழை என பெயர் பெற்றதாக கருதலாம்.

#உணவில் நறுமணமூட்டும் பூந்தாழை
இஸ்லாமியர்கள் தாங்கள் செய்யும் பிரியாணியில் பூந்தாழை இலையை சிறுதுண்டுகளாக்கி போடுவார்கள். இது பாசுமதி அரிசியில் உள்ள வாசனைப் போன்ற நறுமணத்தை உண்டாக்கி உண்ணத்தூண்டும். இதுவே லால்பேட்டை, பரங்கிப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்களால் செய்யப்படும் பிரியாணியின் தனிச்சிறப்புக்கு காரணம். பத்தாண்டுகளுக்கு முன்பு பஷீர் அகமது [வேதியியல் ஆசிரியர், அ.ஆ.மே.நி.பள்ளி, புவனகிரி] அவர்களின் வீட்டிற்கு விருந்துக்காக சென்ற போது, "தங்கள் வீட்டு பிரியாணியின் சுவையின் இரகசியம் பூந்தாழை" என்று சொல்லி கன்றுகளை தந்தார். வீடு மாற்றி குடியேறியபின் மீண்டும் இதனை தேடிக்கொண்டிருந்தேன். சென்றவாரம் பரங்கிப்பேட்டை சென்றபோது, நானும் மோகன் [அமேநி.பள்ளி, கிள்ளை], ஜீவானந்தம் [அஆமேநி.பள்ளி, பரங்கிப்பேட்டை] ஆகியோர் #பரங்கிப்பேட்டை "#மியான் #கடையில்" பிரியாணி சாப்பிட்டோம். நறுமணம்மிக்க பிரியாணியில், பூந்தாழை இலைத்துண்டுகளை கண்டு விசாரித்தேன். பூந்தாழை கன்றுகளை தருவதாக மியான் கடைபாய் தெரிவித்தார். 

இதன் இலைகளை பிரியாணி மட்டுமல்லாமல், மற்ற உணவிலும் சேர்க்கலாம். குறிப்பாக அரிசியோடு சிறு கற்றையாக இதன் இலைகளைப் போட்டு சமைத்தால் பாசமதியின் நறுமணமத்தை தரும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கலாம், அவ்வப்போது பறித்து உணவை மணக்கச் செய்யலாம்.
பூச்செடி விற்பனையகத்தில் "ரம்பா" செடி என்று கேட்டுப்பாருங்கள், சிலருக்கு பூந்தாழை எனில் தெரியவில்லை.. வேறு எங்கு பூந்தாழை கன்றுகள் கிடைக்கும் என விசாரித்த போது, தங்களுடைய #நித்யாநர்சரியில் [சிதம்பரம், புறவழிச்சாலையில், அண்ணாசிலை அருகில்] பூந்தாழை இருப்பதாக நண்பர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

2 comments:

  1. நன்றி அய்யா.

    பூந்தாழை நம் நாட்டு தாவரமா?

    நம்புதாளை என்பதை நான் நாம்புதளை (நாம்புகொடிகள் மிகுந்த வயல்) என எழுதியுள்ளேன்.ஊரின் பெயர் பகுதி விகுதி என இரு சொற்களால்தான் எப்போதும் அமைகிறது.
    பூந்தாழை ஊரும் அப்படி இருசொல் பெயரில் வந்திருக்கலாம் என்பதே என் கருத்து

    ReplyDelete
  2. நன்றி அய்யா
    பூந்தாழை குறித்து மேலும் தகவல் சேகரிக்கப்பட வேண்டும். இது இஸ்லாமியரோடு தொடர்புடையதாக உள்ளது, அதனால் வெளியில் இருந்து வந்திருக்கலாம் எனினும் நல்ல தமிழ்ப் பெயராக உள்ளதே !

    ReplyDelete