"சிறுவள்ளிக்கிழங்கு" [Dioscorea esculenta]
கடலூரில் ஆற்றுத்திருவிழா. மஞ்சக்குப்பம் மணிகுண்டு அருகில், முதன்மைக் கல்வி அலுவலம் செல்லும் வழியில் நிறைய கடைகள் போடப்பட்டிருந்தன. இரண்டாண்டிற்கு முன்பு இதே நாளில் நண்பர் சீனுவை [கி.சீனுவாசன், தாவரவியல் ஆசிரியர்] பார்க்க வந்தபோது, அரிதாக விளையும் "சிறுவள்ளிக்கிழங்கு" விற்றதை பற்றி, நண்பர் ஆ.மோகனிடம் தெரிவித்தேன். தற்போது பள்ளி வளாகத்திற்கு எதிரில் நான்கைந்து "சிறுவள்ளிக்கிழங்கு" கடைகள் போடப்பட்டிருந்தன. "சிறுவள்ளிக்கிழங்கு" கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது. அதுவும் ஆற்றுத்திருவிழாவின் போதே கிடைக்கும் என்றார் கடைக்காரர். "சிறுவள்ளிக்கிழங்கு" [Dioscorea esculenta] உருளைக்கிழங்கு போல் நீள் உருண்டையாக, வெளிறிய நிறத்தில் உள்ளது. சிறு - வள்ளிக்கிழங்கு என அழைக்கப்பட்டாலும் இனிப்பு குறைவாகவே உள்ளது. இதை வேகவைத்து நேரிடையாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம். நீரிழிவு, முடக்குவாதம், மலச்சிக்கல், வீக்கம், களைப்பு போன்றவற்றை குணமாக்கும் என குறிப்பிடுகிறார்கள்.
ஒரு கிலோ 40 ரூபாய் என விற்கப்பட்டது. "இன்னும் தள்ளிப்போனல் குறைவான விலைக்கு கிடைக்கும்" என்றனர், அருகில் நின்றோர். எனிலும், ஆளுக்கு இரண்டு கிலோ வாங்கிக்கொண்டோம். "அரிதாக கிடைப்பவைக்கு அதிகவிலை தரலாம்" என்றேன். வாங்குவோர் குறைந்தால் விளைவிப்போர் குறைந்து, அத்தாவரம் அரிதாகி அழியும்நிலைக்கு உள்ளாகிவிடும்.அந்தந்த பருவகாலங்களில் என்னென்ன பழங்கள், காய்கறிகள் கிடைக்கிறதோ அதனை உட்கொள்வதே உடலுக்கு மிகவும் நல்லது. இயற்கையின் ஓர் அங்கமாக உள்ள மனிதன், அந்தந்த பருவகாலங்களுக்கு ஏற்ப இயற்கை வழங்கும் உணவை ஏற்றுக்கொள்வதே பொருத்தமானது. மாம்பழம், பலாபழம், கொய்யாப்பழம், கோவைப்பழம், இலந்தைபழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், நுனாபழம், பனம்பழம், பனங்கிழங்கு, காரைப்பழம், களாபழம், நாவல்பழம், விளாம்பழம், ஈச்சம்பழம், நெல்லிக்காய் ......... என இயற்கை அந்தந்த பருவத்திற்கேற்ப பல காய்கறிகளை பழங்களை வழங்குகிறது. ஆனால் இவற்றை ஒன்றுவிடாமல் முறையாக எடுத்துக்கொண்டோமா ? என்றால் நம்மில் பலர் "இல்லை" என்றே சொல்லுவோம். போகும்வழியில் இவைகளை கண்டாலும் அலட்சியமாகவே கடந்து செல்கிறோம். சென்ற ஆண்டு காரைப்பழம், களாபழம், நுனாபழம், பனம்பழம் சாப்பிடவில்லை ! இந்த ஆண்டு பட்டியலிட்டு கொண்டு ஒவ்வொன்றாய் தேடித்தேடியாவது உண்ணவேண்டும்.
No comments:
Post a Comment