Tuesday, 23 February 2016

காவள்ளிக் கிழங்கு [Dioscorea oppositifolia]


காவள்ளிக் கிழங்கு  [Dioscorea oppositifolia] 


    சென்ற வாரம் காட்டுமன்னார்குடி சென்று திரும்புகையில், குமராட்சியில் சந்தை நடைபெற்றுக்கொண்டிருந்து. குமராட்சி கிராமத்தில் புதன்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. சந்தை கூடுதல் என்பது கிராம பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறுவிவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்ததை இடைத் தரகர்கள் இடையீடு இன்றி விற்பதற்கு கிராமச்சந்தை பேருதவியாக உள்ளது. நுகர்வோரும் காய்கறிகளை பசுமையாகவும், மலிவாகவும் கிராமச்சந்தைகளில் வாங்கமுடிகிறது. மேலும் கிராம சந்தைகளில்தான் அருகி வரும் சில காய்கறி வகைகளை காணமுடிகிறது.
       தானிய வகைகளில் அரிசியையும், காய்கறிகளில் ஒரு சிலவற்றை மட்டுமே மாறி மாறி உணவாக கொள்கிறோம். ஆனால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் வெவ்வேறு விதமான சத்துப்பொருள்கள் தேவைப்படுகின்றன. நம் கிராமத்து வயல்களில், வரப்புகளில், சாலையோரங்களில், வேலிகளில், வாய்க்கால்களில், ஓடைகளில் என எல்லா இடங்களில் உணவாக உண்ணத்தக்க பலவித கீரைகள் காய்க்கறிகள் கிழங்குகள் விளைகின்றன. ஆனால் நாம் ஒரு சிலவற்றை மட்டுமே விளைவித்து உணவாக கொள்கிறோம். வியாபார நோக்கர்கள் நம் உணவுப் பொருள்களின் எண்ணிக்கையை மிகவும் சுருக்கிவிட்டனர். நகரிய தன்மை கிராமிய வாழ்வியலில் தாக்கத்தை ஏற்படுத்தி பல நல்லியல்புகளை, பழக்கவழக்கங்களை வழக்கொழிய செய்துவருகிறது.
    குமராட்சி சந்தையில் வயதான மூதாட்டி ஒருவர் கடையில் காவள்ளி கிழங்கை பார்த்தோம். கிலோ 20 ரூபாய் என்றார், அங்கிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 40 ரூபாய் தந்தேன். ‘’ இதனை உருளைக்கிழங்கு போல் வறுவலாக செய்யலாம், இதனை கறிக்குழம்பில், புளிக்குழம்பில் போட்டு சமைக்கலாம், நன்றாயிருக்கும்’’ என அந்த மூதாட்டி தெரிவித்தார். இதுபோல அரிதாகி வரும் காய்கறிகளோடு அதன் சமையல் முறைகளும் மறைந்துக் கொண்டிருக்கின்றன.
    நகரங்களில் இக்கிழங்கு கிடைப்பதில்லை. கிராமத்தில் விசாரித்தேன். " இது நமது தோட்டத்திலேயே ஒருகாலத்தில் இருந்தது, வெற்றிலைக் கொடிபோல படரும். காவள்ளி கிழங்கு கொடியிலும், வேர்களிலும் தோன்றுகின்றன. கொடியில் காய்போன்று தோன்றுவதால் இது "காய்வள்ளி கிழங்கு" என்றழைக்கப்படுவதாக" தெரிவித்தார் சித்தப்பா சின்னதுரை [வக்காரமரி].


     கொடியில் உள்ள கிழங்கு உருண்டையாக இருந்தது. இதன் மேல்தோலை உரித்தபோது பசுமையாக காணப்பட்டது, இது தண்டின் மாறுபாடக இருக்கலாம். கீழேதோன்றும் கிழங்கு சற்று நீள்வாட்டமாக பலவடிவங்களில் உள்ளது. "கிழங்கின் கணுவை வெட்டி கொஞ்சம் சாணியைப்பூசி மண்ணில் வைத்தால் நான்கு நாட்களில் முளைவிடத் தொடங்கிவிடும். கீழே தோன்றும் சில கிழங்குகள் குழந்தையைப் போன்று தோற்றமுடையதாகக் இருக்கும். தாய்மார்கள் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு முளைவிட்ட கிழங்கை நடுவார்கள், அப்போதுதான் அக்குழந்தையைப் போல் கிழங்கு உருண்டு திரண்டு வளரும் என்ற நம்பிக்கை இன்றும் கிராமங்களில் நிலவுகிறது" என்றார் சித்தப்பா. 


       காவள்ளிக் கிழங்கு [Dioscorea oppositifolia] மருத்து குணமிக்கது. செரிமான குறைபாடு, களைப்பு, இருமல், ஆஸ்துமா மாதவிடாய் குறைபாடு, பித்தபை பிரச்சனை, முடக்குவாதம், எலும்பு புரைநோய் போன்றவற்றை குணமாக்கும் பல சேர்மங்கள் இதில் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். இதில் உள்ள அல்லன்டோயின் [allantoin] என்ற சேர்மம் செல்களைப் புதுப்பிக்க தூண்டிகிறது. 
இதனை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க வேண்டும் என தேன்றியது. அருகில் உள்ள லால்பேட்டை கிராமத்தில் வெற்றிலைக் கொடிக்காலில் காவள்ளிக் கிழங்கு கிடைக்கும் என தெரிவித்தார் சித்தப்பா.

2 comments:

  1. மிக்க நன்றி அய்யா.
    காய்வள்ளி கிழங்கு கொடி ருமை.
    நான் இரா...மாவட்ட ஊராட்சிகளின் வரலாறு என்ற புத்தகம் 5ஆண்டாக எழுதுகிறேன். அதில் 90% ஊர்ப்பெயர்கள் தாவரங்களால் பெயர்பெற்றன என்று கண்டறிந்துள்ளதால் தாவரங்கள் பற்றி விரிவாக அறிய ஆவலுடையேன்.

    பேசுங்கள். பேசலாம்.
    வெ.கருப்பையா.DYBDO,சாயல்குடி
    9865551455

    ReplyDelete