Tuesday, 23 February 2016

பண்டைய தமிழர்களின் வணிக நகரம் – அரிக்கமேடு


தொன்மையைத் தேடி பயணம் ........1

பண்டைய தமிழர்களின் வணிக நகரம் – அரிக்கமேடு 

                         நானும் நண்பர் ஆ.மோகனும் [தலைமையாசிரியர், அமேநி பள்ளி, கிள்ளை] ஒரு வேலையாக கடலூருக்கு வந்த நாங்கள், அப்படியே பாண்டிக்கு புறப்பட்டோம். சென்றவாரம் அய்யா ஆனைமுத்து அவர்களை பாண்டியில் சந்தித்தது பற்றியும், அவர் "தொல்லியல் மற்றும் சூழலியல் ஆய்வு மையம்" அமைக்க வரைவுதிட்டம் ஒன்றை தந்ததையும் மோகன் அவர்களிடம் தெரிவித்தேன். தொல்லியல் ஆய்வில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதையும், பூம்புகாரில் ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதையும் பற்றி பேசினோம். தொல்லியலில் ஆர்வமுள்ள நண்பர்களை குழுவாக அமைத்து தமிழகத்திலுள்ள தொல்லியல் இடங்களை பார்வையிட வேண்டும் என்றேன். அரிக்கமேடு, இதோ அருகில்தான் உள்ளது, இப்போதே போகலாம் என்றார் மோகன் . 

          "அரியாங்குப்பத்திலிருந்து வீரணாம்பட்டினம் செல்லும் வழியில் காக்கையந்தோப்பு அருகில் அரிக்கமேடு உள்ளது" என தெரிந்துக்கொண்டு பயணப்பட்டோம். வழியில் எவ்விடத்திலும் தகவல் பலகையோ, வழிகாட்டிமரமோ இல்லை. விசாரித்துக் கொண்டிருந்த போதே, பெட்டிக்கடையில் துணைப்பொருள்களை வாங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், " நாங்களும் அங்கேதான் போகிறோம், எங்கள் பின்னாலேயே வாங்க" என்று சொல்ல, அவர்களின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்தோம். சின்ன மகிழுந்தை திறமையாக செலுத்தும்படியான, மிக குறுகிய சந்துவழியாக நுழைந்து ஒரு குறுகிய தெருவையும் கடந்தோம். "அதிகாரிகள் எப்படி இவ்விடத்தை வந்தடைவார்கள்" என்று யோசித்தபடியே ஆள்அரவமற்ற, கம்பிவேலி விடப்பட்டிருக்கும் ஒரு மாந்தோப்பை வந்தடைந்தோம். வழிகாட்டிகள் முதல்பொருள் துணைப்பொருள் சகிதமாக, எங்களுக்கு கையசைத்துவிட்டு தோப்பிற்குள் நுழைந்தனர். உடைந்து தனித்து நின்றிருந்த இரண்டு முகப்பு தூண்கள் இடையில் நுழைந்து, சிதிலமடைந்த பெரிய கட்டிடத்தை படமெடுத்தோம். 



        அங்கு இருவரை எதிர்கொண்டோம்,ஒருவர் இவ்விடத்தின் பாதுகாப்பாளர் எனவும், மற்றவர் தொல்லியல் தன்னார்வலர் திரு. இரமேஷ் என அறிமுகமாயினர். [www.arikamedu.net/www.facebook.com-arikamedu.in/mohanramesh85@gmail.com] திரு. இரமேஷ் அவர்கள் பல ஆண்டுகளாக தொல்லியல் பொருள்களை சேகரித்தல், பாதுகாத்தல், ஆய்வு செய்தலில் ஈடுபட்டுவருகிறார். 


       சுமார் 35 ஏக்கர் அளவிலான இந்த மாந்தோப்பு தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இங்கு. இந்திய தொல்லியல் துறைக்கான அலுவலகமோ, அரங்கமோ இ்ல்லை. பார்வையாளர்களோ அல்லது தொல்லியல் ஆய்வாளர்களோ இங்கு வந்தால் அமர்வதற்கோ அல்லது மழைவந்தால் ஒதுங்குவதற்கோகூட இடம் இல்லை. சுற்றுலா வழிகாட்டியாக செயலாற்றிய இரமேஷ் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்ட இடங்களை சுற்றிக் காட்டினார். அகழ்வாய்வு நடத்தபட்ட இடங்கள், தடயம் ஏதுமில்லாதபடிக்கு பாதுகாப்பாக மூடப்பட்டிருந்தன. அகழ்வாய்வுகள் குறித்து பல செய்திகளை இரமேஷ் விவரித்தார்.

                   மார்டிமர் வீலர் [1945], மேரி கஸால் [1947 – 1950], மற்றும் விமலா பெக்லி [ 1989 – 1992] ஆகியோர் தாங்கள் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின்படி ௮ரிக்கமேடு, இரண்டாயிரம் ஆண்டு முன்பு கிழக்கு கடற்கரையில் புகழ்பெற்ற வணிகத்தலமாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்கள். அகழ்வாய்வின் போது ரோமப் பேரரசனாகிய அகஸ்டஸ் சீசரின் [காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு] தலை உருவம் பொறித்த காசு, பிராமி எழுத்துகள் உள்ள பானை ஓடுகள், பல நிறத்திலான உருக்கு மணிகள், உறைகிணறுகள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், பொன்னாலான கழுத்தணிகள் காதணிகள் என பல பொருள்களை கண்டெடுத்துள்ளனர். ஒரு பெரிய வணிகநகரம் புதையுண்டு போனதை, அங்கு காணப்பட்ட கட்டிடங்களின் அடிச்சுவர்களின் மூலம் அறியமுடிகிறது. இங்கு புத்தர் சிலை ஒன்றை கண்டெடுத்துள்ளனர். மேலும் பறவையோடு நிற்கும் பெண் சிலையொன்றும் கிடைத்துள்ளது. அரிக்கமேடு அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள் மூலம், இவ்வணிகத்தலம் பர்மா மற்றும் கிரேக்க ரோமானியர்களோடு வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை அறியமுடிகிறது.
 
          தற்போது இங்கு சிதிலமடைந்து காணப்படும் கட்டிடம் பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் மிக பழைமை வாய்ந்தது என கருதப்படுகிறது. சில ஆண்டுகளாக இக்காட்டுப்பகுதிக்கு மயில்கள் வரத்தொடங்கியுள்ளன. அவை இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்யுமளவிற்கு இக்காட்டுப்பகுதி பாதுகாப்பாக உள்ளது. மேலும் இந்த உப்பனாற்றில் நீர்நாய்களும் உள்ளன. என்ற தகவலையும் சொன்னார். 

     இவை இரண்டுமே அழிந்துவரும் நிலையில் உள்ள உயிரினங்கள். மயில்கள் இடம்பெயர்வதை கடலோர மாவட்டங்களில் பரவலாக காணமுடிகிறது. திணை கடந்து பறவைகள் காணப்படுவதை "தொல்காப்பியம்" இயல்பு என குறிப்பிட்டாலும், மயில்கள் குறிஞ்சித்திணையை கடந்து நெய்தல்திணையை வாழிடமாக கொண்டு இனப்பெருக்கம் செய்வது, குறிஞ்சித்திணை சீர்கேடடைவதை நமக்கு தெரிவிக்கிறது. ஆற்றங்கரையில் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருந்த இடம் படகுத்துறையாக பயன்பாட்டில் உள்ளது. 


        இவ்விடத்திற்கு இறங்கும் வழியில் உறைக்கிணறு ஒன்றை இரமேஷ் தோண்டிக் காட்டினார். "இதுபோல் இன்னும் சில இடங்களில் உள்ளன, இவை மட்டுமல்லாமல் இன்னும் பல இடங்களில் தோண்டி ஆய்வு செய்யப்படவேண்டும்" என்றார் இரமேஷ். 


         இயங்கிக்கொண்டிருந்த நகரம் மெளனமாய் கிடப்பதை உணரமுடிந்தது. ‘’பின்பு ஒரு நாள் நண்பர்களோடு வருகிறோம்’’ ௭ன்று தெரிவித்துவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றோம். பண்டைய தமிழர்களின் வாணிப பண்பாட்டை பறைசாற்றும் அரிக்கமேட்டில் பல்வேறு ஆய்வுகள், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். அவை,

அ] அரிக்கமேட்டில் ஓர் அலுவலகமும், அருங்காட்சியகமும் அமைக்கப்படவேண்டும். அங்கு கிடைக்கும் பொருள்களையும் [இரண்டுக்கு மேற்பட்ட தரவுகள் எனில் ஒன்றை], ஆவணங்களையும் அவ்விடத்திலேயே பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். 

ஆ] அரிக்கமேட்டில் மேலும் முழுமையான அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் பகுதியாதலால், மண் அரிமானத்தினால் பழைமைப் பொருள்களை இழக்க நேரிடலாம்.

இ] தொல்லியல் துறையும், சுற்றுச்சூழல் துறையும் இணைந்து இவ்விடத்தை "தொல்லியல் மற்றும் சூழலியல் சுற்றுலா மையமாக" உருவாக்க வேண்டும்.

ஈ] ஆற்றின் கரையை ஒழுங்குபடுத்தி சதுப்புநில வனமாக இதனை பராமரிக்க வேண்டும். இக்கழிமுகத்தில் வெண் கண்டல் [Avicennia marina], மூக்குற்றி சுரப்புன்னை [Rhizophora mucronata] ஆகியவை அடர்ந்து வளர்ந்துள்ளன. பிச்சாவரம் வனத்திலுள்ள அனைத்து தாவர வகையினங்களையும் இவ்விடத்தில் அறிமுகம் செய்து வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

உ] அரிதாகிவரும் நீர்நாய்கள் [ Sea Otter] இங்கு காணப்படுவதால், அரியாங்குப்பம் கழிமுகத்தை நீர்நாய்கள் வளர்ப்பிடமாக உருவாக்கலாம்.

No comments:

Post a Comment