Tuesday, 23 February 2016

திருமுட்டம் - ஆண்டிமடம் நடைப்பயிற்சி

திருமுட்டம் - ஆண்டிமடம் நடைப்பயிற்சி

வாரக்கடைசியில் நடைப்பயிற்சிக்காக வெகு தொலைவில் உள்ள எதாவது ஒர் ஊருக்கு செல்வது வழக்கம்." திருமுட்டத்திலிருந்து ஆண்டிமடம் போகும்வழியில் சாலை யோரங்களில் நிறைய மூலிகைகளை பார்த்தேன், ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சிக்கு அந்த வழியில் போகலாம்" என்று இரண்டு வாரத்திற்கு முன்பே நண்பர் வே.மணிவாசகன் [தலைவர், தமேநிபமுகஆ சங்கம்] சொன்னார். நடைப் பயிற்சிக்கு தனியாக செல்வதோடு, இப்படி நண்பர்களோடு [நண்பர் .மோகன் - தலைமையாசிரியர், அமேநிப, கிள்ளை, நண்பர் தி.பாண்டிதுரை - மூத்த முதுகலையாசிரியர், அமமேநிப, சிதம்பரம்] செல்வதால் கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல் எனப் பேசிக் கொண்டே வெகுதூரம் நடக்கலாம்
                                          காலை 5 மணிக்கு சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு, 6 மணிக்கு திருமுட்டம் சென்றடைந்தோம். மகிழுந்தை த.வீ.செ.பள்ளியின் முன்நிறுத்தி, தெரு முனையில் உள்ள கடையில் தேனீர் குடித்துவிட்டு நடக்கத் தொடங்கினோம்.  

ஊரைக் கடந்து நடந்தோம், பல வீடுகளுக்கு முன்னால் முருங்கை மரங்கள் பூத்துக் குலுங்கின. முருங்கைப்பூவை கூட்டு வைத்தோ, இரசமாக செய்து சாப்பிடலாம், "குடித்தனக்காரனுக்கு முருங்கைமரமும், கறவை மாடும் இருந்தால் போதும்" என்பார்கள் என்றேன்.
                வழிநெடுகிலும் சாலையோரங்களில் நிறைய மூலிகைகளைப் பார்த்தோம்... "செம்மண் பூமியில் எல்லா தாவரங்களும் செழித்துவளரும், இங்கு தண்ணீர்தான் தட்டுப்பாடு" என்றார் பாண்டிதுரை. விழுதி, விராலி, மருள், ஆவாரை, காரை, தெரணி, நொச்சி, பிரண்டை, பெருமருந்துக்கொடி, பேய்மிரட்டி, முடக்கொற்றான் என  பல மூலிகைகள் வேலியோரங்களில் காணப்பட்டன. வெண்புள்ளி நோய்க்கு விழுதி இலை தேவை என நண்பர் ஒருவர் அலைந்தது நினைவுக்கு வந்தது. இங்கு வழிநெடுகிலும் விழுதியில் பூக்கள் நிறைந்திருந்தன. வழியில் சந்தித்த மூதாட்டிகளிடம் விசாரித்தோம், "இதில் வரும் நீண்ட காய்களை மோரில் ஊறவைத்து வற்றலாக சாப்பிடுவோம்" என்றனர்


காதுவலிக்கு மருள் தண்டை நெருப்பில் வதக்கி சாற்றை காதில் விடுவார்கள் என நினைவூட்டினார் மோகன். பேய்மிரட்டியில் பூக்களைப் பார்த்தோம். அடையாறு புற்றுநோய் மருத்துவமணையில் "முடியாது" என படுத்தப்படுக்கையாக திருப்பி அனுப்பபட்டவரை அமுக்கராவையும் பேய்மிரட்டியையும் தந்து எழுந்து நடமாட வைத்து, அதன்பின் இரண்டாண்டு காலம் ஆயுளை நீட்டித்தார் வைத்தியரொருவர்

சில மூலிகைகள் சில இடங்களில் கிடைப்பதில்லை, அதுவே சில இடங்களில் களைகளைப் போல் பரவி காணப்படும். வீடுகளுக்கு முன்பு மருதாணி, நித்திய கல்யாணி, செம்பருத்தி, அலரி போன்றவற்றை காணமுடிந்தது. வயல்வெளியில் சதுரக்க்கள்ளியை, சப்பாத்துக்கள்ளியை புதர்களாக வளர்த்து வேலியாக இருந்தது. அவற்றினிடையே வெள்வேல், வாதநாராயணன், பிராய், சரக்கொன்றை போன்ற மரங்களும் வளர்ந்திருந்தன.
                நொடுஞ்சாலையில் கரும்பை ஏற்றிக்கொண்டு சரக்குந்துகளும் உழவை யுந்துகளும் சென்றுக்கொண்டிருந்தன. சந்தடி நிறைந்த அந்த சாலையில், ஆளில்லாமல் மாட்டுவண்டி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. போக்குவரத்து நிறைந்த சாலையில் எவ்வித இடையூறும் இல்லாமல் இடதுபக்கமாக சென்றுக் கொண்டிருப்பது வியப்பாக இருந்ததுஅந்த விவசாயி அப்படி பழக்கி வைத்திருக்கிறார் போலும். மாடு என்றாலே செல்வம் தான்.
                ஈரப்பசையே இல்லாத விராலி இலையை நுணுக்கிப் பார்த்தார் மணிவாசகன்.  "சென்ற மாதம் வந்தபோது விராலியில்  நிறைய பூக்களைப் பார்த்தேன்" என்றார். இப்போது உலர்ந்த விதைகள் நிறைந்த நிலையில் காணப்பட்டன. பெருமருந்துக் கொடியின்  இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தார் மோகன்

வழிநெடுக புளியமரங்களில் காய்கள் மிகவும் நிறைந்து காணப்பட்டன, வரும் ஆண்டில் புளியின் விலை மலிவாக இருக்கும் என நினைக்கிறேன். புளியங்காய்களை பறித்து தின்றுக்கொண்டே வந்தார் மோகன். பள்ளிப்பருவத்தில், புளியம் பிஞ்சுகளைப் பறித்து உப்பையும் மிளகாய்த் தூளையும் சேர்த்து தின்றது நினைவுக்கு வந்ததுவழியில் வேப்பங் கொழுந்துகளை பறித்தார் பாண்டித்துரை. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வேப்பங் கொழுந்துகளை சாப்பிட்டு வருகிறேன் என்றார் மணிவாசகன்.
வழியெங்கிலும் கள்ளிவேலிகளில் பிரண்டை படர்ந்திருந்தது. எங்கள் பகுதியில் பிரண்டை அரிதாகிவிட்டது என்று கூறிக்கொண்டே அவற்றை சேகரித்து எடுத்துக் கொண்டு நடந்தார் பாண்டிதுரை.. "பிரண்டையை துவையலாக செய்து வைத்துக்கொண்டால் பலநாட்கள் பயன்படுத்தலாம், செரிமான கோளாறு சரியாகும்என்றேன்.
                சுமார் பத்து கிலோமீட்டர் நடந்திருப்போம், இராங்கியம், தஞ்சாவூரான் சாவடி, கவரப்பாளையம், அன்னங்காரன்குப்பம், சூனாபுரி ஆகிய ஊர்களைக் கடந்து ஆண்டிமடம் வந்தடைந்தோம். பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது முதியவர் ஒருவர், பாண்டிதுரை கையில் வைத்திருந்த பிரண்டையைப் பார்த்துவிட்டு "எதற்காக இது ? " என்று வினவினார்.  "இது தெரியாதா, இதை துவையலாக அரைத்து சாப்பிடலாம்" என்றார் மணிவாசன்

"இதோடு உப்பை சேர்த்து அரைத்து ஆடு மாடுகளுக்குதான் உள்ளுக்கு கொடுப்போம், இதுமாதிரி மூன்று பட்டை உள்ள பிரண்டை இருக்கு அதைத்தான் துவையலாக செய்து சாப்பிடலாம் " என்றார் அந்த முதியவர்.  "நான்கு பட்டை உள்ள பிரண்டை அதிக காரமும் அரிப்பும் உடையது, மூன்றுபட்டை உடைய முப்பிரண்டை தான் சமையலுக்கு நல்லது என கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் முப்பிரண்டை அரிதாகத்தான் கிடைக்கும், மேலும் அது மிகவும் மெதுவாகத்தான் வளரும்" என்றேன்பாரம்பரிய அறிவை கொண்ட  முதியவரை அவசரத்தில் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் என்று தோன்றியது.
நாளைக்கு மகாமகம், கும்பகோணம் நோக்கி பேருந்துகளும் மகிழுந்துகளும் போய்க்கொண்டிருந்தன. "கும்பகோணம் மகாமக குளத்தில் குளித்தால் பாவம் தீருமா, போனமாதம் சேரும் சகதியாய் இருந்த குளத்தில் இப்போது தண்ணீரை நிரப்பி குளித்தால் பாவம் தீருமோ.....பக்தி என்பது மனநோய், பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட குறைபாடு" என்றேன்.
செய்தித்தாள் வாங்கிப் படித்தோம், பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா பதவிநீக்கம் செய்யப்பட்டார் -  "ஊடககருவிகள் படுக்கையறைவரை பாயும் என்பதை பால்வளத்துறை அமைச்சர் உணர்ந்திருப்பார்" -- "அமைச்சர் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு காலம் பாடுபட்டிருப்பார், எல்லாம் ஒரே ஒரு முகநூல் பதிவில், அமைச்சர் பதவியை காலி செய்து விட்டார்களே "----- "மக்கள் இதை விரைவில் மறந்துவிடுவார்கள், மீண்டும் அரசியல் பிழைப்பை தொடங்கிவிடுவார்கள்" ---- என ஆளுக்கொரு கருத்து. தொலைபேசியை கையிலெடுத்தார் மணிவாசன், "கோரிக்கைகளை வென்றொடுப்பதோடு சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பும் நலனும் முக்கியம்......." என்று பேசிக்கொண்டே நடந்தார். எதிர்முனையில் கூட்டமைப்பில் உள்ள வேறோரு சங்க பொறுப்பாளராக இருக்கும் எனத் தோன்றியது.


பேருந்திலேறி திருமுட்டம் திரும்பினோம். த.வீ.செ.பள்ளி ஆசிரியர்கள் திரு.கமலக்கண்ணன் மற்றும் திரு.இராமசாமி, இருவரும் எங்களுக்காக காத்திருந்தனர்திரு.கமலக்கண்ணன் வீட்டில் காலைச் சிற்றுண்டி [பேருண்டி எனலாம்] தயாராக இருந்தது. நடைபயிற்சியால் இழந்த சக்தியை இவர்களின் விருந்தோம்பலால் மீண்டும் பெற்றோம். நடைபயிற்சியால் பலன் கிடைத்ததோ என்னவோ, இட்லி தோசை கறிகுருமா சுவையை மறக்கவியலாது.

No comments:

Post a Comment