Wednesday, 2 March 2016

கொடியம்பாளையம் நோக்கி.......

கொடியம்பாளையம்  நோக்கி.......

                நடைப்பயிற்சிக்காக, காலை ஐந்தரை மணிக்கு [28.02.2016] மேம்பாலம் அருகிலுள்ள மோகன் [தலைமையாசிரியர், அமேநிப, கிள்ளை] வீட்டிற்கு முன்பு நானும் மணிவாசகனும் [தலைவர், தமேநிபமுகஆ சங்கம்]  வண்டியை நிறுத்திவிட்டு, மூவருமாக புறப்பட்டோம். நடைப்பயிற்சிக்கு நிறைய நண்பர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தேன்.  பாண்டித்துரையும், சுப்ரமணியனும் தப்பித்துக் கொண்டார்கள் என்பது கடைசியாகத்தான் தெரிந்தது.
"தமிழினத்தின் வீழ்ச்சிக்கு பெரியாரும் திராவிட இயக்கங்களுமே காரணம்" என்றார் மணிவாசகன். ஈழவிடுதலையில் ஏற்பட்ட பின்னடைவு, அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, இவ்வளவிற்கு பிறகும் இனமீட்சிக்கு தமிழகத்தில் எவ்வித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமைக்கு காரணம் தேடுகையில், இ்ந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. இதனை மறுத்துப் பேசிக்கொண்டே வந்தேன். ஆனால், இ்வ்வளவும் பார்ப்பனியத்தால், இ்ந்திய ஆளும்வர்க்கத்தால் வந்தது என்பதை மறைப்பதற்காக பரப்பபடும் புரட்டுவாதம், இதற்கு மணிவாசகன் உள்ளாகிவிட்டாரா, அல்லது   வாயைக் கிண்டுவதற்காக சொன்னாரா என்று தெரியவில்லை. சூடான உரையாடல், டீகடை முன்பு வந்ததும் நின்றது. இராஜ முத்தையா மருத்துவமணை எதிரில் உள்ள கடையில் தேனீர் குடித்துவிட்டு  தொடர்ந்தோம்.
குமாரமங்கலம், நடராஜபுரம் கடந்து நடந்துக்கொண்டிருந்தோம். சாலையோரம் நெற்வயல் அருகில் பிராய் மரம் [Streblus asper] வளர்ந்திருந்தது. இது மிகவும் மெதுவாக வளரக்கூடியது, ஆகையால் இதன் வயது ஏழெட்டு ஆண்டுகள் இருக்குமென்றேன், இல்லை பத்தாண்டுகள் இருக்குமென்றார் மணி. ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், பாலைக்கரந்து அதில் இதன் இலையைப் போட்டவுடன் தயிர்போல் ஆகிவிடும், அதன் உண்பார்கள் என்றேன்.

பிச்சாவரம் பகுதியை நெருங்க நெருங்க கழிமுக நீர்நிலைகளில் நமுடு கூட்டமாக காணப்பட்டன. பிச்சாவரம் வனப்பகுதியில் கிட்டதட்ட 170 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் காணப்படுவதாக முனைவர். சம்பத் கணக்கெடுத்துள்ளார். திருவாசலடி, தெற்கு பிச்சாவரம் கடந்து சென்றுகொண்டிருந்தோம். சில இடங்களில் வாய்காலில் நீரளவு தெரியாதபடி ஆகாயத்தாமரை [Eichhornia crassipes] வளர்ந்து மூடியிருந்தது. இது நம்முடைய தாவரமல்ல, ஆங்கிலேயரால் அறிமுகப்பட்டதாக கூறப்படுகிறது. சில இடங்களில் அல்லி பூக்கள் அழகாக பூத்திருந்தன. "படமெடுங்கள், கணினி திரைமுகப்பாக போடலாம்" என்றார் மோகன்.

வாய்க்கால் ஓரத்தில் நல்லகருப்பு நிறத்தில் மீன்கள் இறந்துகிடந்தன. அதன் மேற்தோல் சொரசொரப்பாக இருந்தது. தொலைவில் நாய் ஒன்றை கவ்விச்சென்றது.  இது  என்ன மீன் ? என்று கேட்டபோது, அவ்வழியே போன ஒருவர் மட்டும் "டேங்க் கிளினர்" என்றார். தொட்டிகளில் அழகு மீன்கள் வளர்ப்போர், தொட்டியில் உள்ள அழுக்கு, பாசிகளை உண்டு வாழும் இந்தவகை "டேங்க் கிளினர்" [Common Plecostomus] மீன்களை வளர்க்கின்றனர். தென்அமெரிக்காவிலிருந்து பல்வேறு ஆசிய நாடுகளுக்குள் அழகுமீன்கள் வளர்ப்போர்களால் இம்மீன் ஊடுருவியுள்ளது. 



இந்தியாவில் பீகார், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள  நீர்நிலைகளில் இம்மீன் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அளவுக்கதிகமான உற்பத்தியும் வளர்ச்சியும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தடையாக உள்ளது. தற்போது இந்த "டேங்க் கிளினர்" மீன் பிச்சாவரம் பகுதி நீர்நிலைகளிலும் ஊடுருவியுள்ளது.
      இப்படிதான் நம் இயற்கை சூழல் சீர்கேடு அடைந்துக்கொண்டிருக்கிறது. அயல்நாடுகளிலிருந்து நாம் விரும்பியோ விரும்பாமலோ, நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு உயிரினங்கள் ஊடுருவுகின்றன. இதற்கு எவ்வித கட்டுப்பாடுமில்லை, முன்னெச்சரிக்கை ஆய்வுகளுமில்லை. பல இடங்களில் அயல் கருவை [Prosopis juliflora] வளர்ந்திருந்தது. கேரளமாநிலம் அயல்கருவையை முழுவதுமாக அழித்துவிட்டது. இன்னும் நம் மாநிலம் அயல் கருவையை அழிக்கும் பணியை தொடங்கவேயில்லை.
"எல்லோரும் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள், நாமும் எடுத்துக்கொள்வோம்" என கைபேசியை சொடக்கினார் மோகன். 

தொலைபேசியில் பேசிகொண்டே நடந்தார் மணிவாசகன், "விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு முகாம் உதவி அலுவலராக, தலைமையாசிரியர்களில் மூத்தோர் ஒருவரைத் நியமிக்க வேண்டும், இல்லையேல் பணியை புறக்கணிப்போம் " என்று அழுத்தமாக பேசினார்.
இப்பகுதிகளில் நிறைய வண்ணத்துப்பூச்சிகளை காணமுடிந்தது.  இவ்வளவு நாட்களாக இதனை உற்று நோக்கவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் கண்முன் அழகாக பலவண்ணங்களில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லை, ஒன்றுக்குக் கூட தமிழில் பெயரிடப்படவில்லை என்பது மிக குறையாகவேபட்டது. நம் இயற்கை வளம் பற்றி நமக்கு தெரிவதில்லை. 


வலைதளத்தில் தேடி, ‘’கிரியா’' வெளியீடான முனைவர்.ஆர்.பானுமதி அவர்களின் "வண்ணத்துப்பூச்சிகள் - அறிமுகக்கையேடு" நூலை வரவழைத்தேன். அதில் 90 வண்ணத்துப்பூச்சிகள் குறித்து வண்ணப்படங்களுடன் தமிழில் அழகாக பெயர் சூட்டி விளக்கியுள்ளார்.  
சில இடங்களில் வாய்க்கால் முழுவதும் கொறுக்கையும் [Arundo donax] சம்புவும் [Typha angustifolia] வளர்ந்திருந்தன. பிச்சாவரம் சதுப்புநிலக்காடு வடக்கில்  வெள்ளாற்றிற்கும், தெற்கில் கொள்ளிடம் ஆற்றின் இடையில் 1330 ஹெக்டேர் அளவில் பரவியுள்ளது. இதன் தெற்கெல்லையில் உள்ள ஊர்தான் கொடியம்பாளையம். சதுப்புநிலத் தாவரமாகிய கண்டல், உயரமான மரமாக வளராமல் பல ஏக்கர் அளவில் புதராகவே வளர்ந்து உள்ளது. "இதற்கு என்ன காரணம் என்பதை இன்னுமா கண்டறியப்படவில்லை" என்று மாவட்ட வன அலுவலர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வினவியது நினைவுக்கு வந்தது. 


அமுரி [Suaeda maritima ]இலையை பறித்து மென்றுபார்த்துவிட்டு "மிகவும் உப்பாயிருக்கிறது" என்றார்  மோகன்உப்பை [உயிரி-உப்பு,Bio-salt ] இதிலிருந்து பிரித்தெடுக்கும் ஆய்வை பல ஆண்டுகளுக்குமுன் செய்தார்கள் என்றேன்.  
பன்னெடுங்காலமாக தனித்தீவாக இருந்த நாகைமாவட்ட கடற்கரை ஊராகிய கொடியம்பாளையம், தற்போது புதிதாக கட்டப்பட்ட பாலத்தினால் தரைவழியாக                 இணைக்கப்பட்டுவிட்டது.



கிட்டதட்ட 16 கி.மீ நடந்து விட்டோம். கடினமாகவே இருந்தது, "எங்கும் நிற்காமல் வீம்பாக நடத்திக் கொண்டு வந்துவிட்டார் மணிவாசகன்" என்று முனவினார் மோகன். ஊரின் முனையில் சிறிய கடையின் முன்பு, நண்பர் ஹரி எங்களுக்காக காத்திருந்தார். தன்னை நோக்கிதான் கைகாட்டுவார் என்று தெரியாமல் ஹரியின் நண்பரிடம் கேட்டார் மணி" எங்களில் யார் மிகவும் சோர்வாக இருக்கிறது ? ".சோர்வாக இருந்தாலும் புன்னகையோடு இருந்தார் மோகன். சூடான தோசை, சுவையான மீன் குழம்பு - ஏற்பாடு செய்திருந்தார் ஹரி




                எங்களை அழைத்துச் செல்வதற்காக நண்பர் நமச்சிவாயம் [தலைமையாசிரியர், மஞ்சக்கொல்லை] மகிழுந்துடன் வந்தார். நடக்க  கூப்பிடாதீர்கள், அழைக்க கூப்பிடுங்கள் வருகிறேன்" என்று சிரித்துக்கொண்டே எங்களோடு கடற்கரைவரை நடந்தார். அமைதியான நீண்ட கடற்கரை ! ஆனால் தூய்மையின்றி காணப்படுகிறது. "இதற்கு சாலையமைத்து அழகுபடுத்தினால் மிகச்சிறந்த சுற்றுலா இடமாக அமையும்" என்றார் நமச்சிவாயம்

No comments:

Post a Comment