Friday, 25 March 2016

பெருமாள் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி

பெருமாள் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி

                 முன்பே திட்டமிட்டது போல் நானும், குமார், பாண்டிதுரை, சீனுவாசன் மற்றும் மோகன் ஆகியோர் 5-மணிக்கு சிதம்பரம் பெரியார் சிலை அருகில் கூடினோம். விடியற்காலைப் பொழுதில் வண்டியை மிகவும் கவனமாக ஓட்டவேண்டும், தூக்கம் கலையாத வேளை....ஓட்டுநர்களை நிலைதடுமாறச் செய்யும். மோகன் மகிழுந்தை புவனகிரி பெண்கள் பள்ளி எதிரில் நிறுத்தினார். மணிவாசன், தன் கிராமத்தில் இரவு முழுவதும் வேதியியல் ஆய்வை முடித்த கையோடு, புவனகிரி வந்தடைந்தார். மணிவாசனும் சுப்ரமணியனும் இருசக்கர வண்டியில் முன்செல்ல பின் தொடர்ந்தோம். சாத்தப்பாடி வழியாக பெருமாள் ஏரியின் தென்எல்லையில் உள்ள குண்டியமல்லூர் வந்தடைந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம்.


"வெகு தொலைவு என்னால் நடக்க முடியாது என்றாலும் நிறைய மூலிகையை பார்க்கலாம் என்பதற்காகவே வந்தேன்" என்றார் சீனுவாசன் [மூத்த தாவரவியல் ஆசிரியர்]. "உண்மைதான், நமது மாவட்டத்தில், நடந்து போகிறப் போக்கில் நிறைய மூலிகைகளை பார்ப்பதற்கு வாய்ப்பான இடம் பெருமாள் ஏரிக் கரைதான்" என்றேன். பெருமாள்ஏரிக்கு இதற்கு முன்பு, புவனகிரி மூலிகைக் குழுவுடன் நட்புடனும் நேசத்துடனும் வந்திருக்கிறேன்.
                பெருமாள் ஏரியை 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழன் வெட்டினான் என சிலர் குறிப்பிடுகின்றனர். பிற்கால பல்லவ பரம்பரையில் வந்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243-1279) இவ்வேரியை வெட்டுவித்த செய்தியை திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டு ‘’…….நெடுங்கரை வென்று மலை கொண்ட பெருமாளேரியுஞ் சுரர்தரு நெருங்கிய சோலையும்……. ‘’ என குறிப்பிடுகிறதாம்
                நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர், பரவனாறு வழியாக பெருமாள் ஏரிக்கு வந்தடைகிறது. ஆகையால் பெருமாள் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீரைக் காணலாம்.  பெருமாள் ஏரியில் நன்னீர் நண்டு, நத்தை, கிளிஞ்சல்கள் அதிகம். அதனால் தான் வீராணம் ஏரியைவிட அதிகமான பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன. பறவை பற்றாளர்கள், தங்கள் படம்பிடிக்கும் கருவியை எடுத்துக் கொண்டு இங்கு பயணிக்கலாம்.
சாலை இருமங்கிலும் ஆலமரம், வேப்பமரம், புளியமரம், பனைமரம் என நிழலாக இருந்த நெடிய சாலை அமைதியாக இருந்தது, ஒரு சில வண்டிகள் மட்டுமே கடந்து போயின.


சில இடங்களில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். "மதுரையிலிருந்து கடலூர் மாவட்டம் வரை வாத்துமுட்டைகளை சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன" என்றார் மோகன். "அது மட்டுமா, ஒரு நாளில் பலநூறு சுமையுந்துகளில் "மத்தி மீன்கள்" இங்கிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன" என்றேன். "நல்ல சத்துள்ள உணவை எல்லாம் கேரளாவிற்கு அனுப்பிவிடுகிறார்கள் நம்மவர்கள்" என்றார்.
வழிநெடுகிலும் உள்ள மூலிகைகளை அடையாளம் காட்டி சொல்லிக்கொண்டே நடந்தேன்......."வேலிப்பருத்தியின் வேறுபெயர் உத்தாமணி, பெருமருந்துக் கொடியை ஈசுவரமூலி என்றும் தராசுக் கொடியென்றும் கூறுவார்கள்

தண்ணீர்விட்டான் கொடியை ஆயுர்வேதத்தில் சதாவேரி என்கின்றனர்,....செருப்படை, சர்க்கரைவேம்பு, சிவனார்வேம்பு, தழுதாழை, ஆதண்டை, விழுதி, பேராமுட்டி, பாம்புக்களா,.....,". கைப்பேசியில் படமெடுத்தும், கையேட்டில் குறிப்பெடுத்தும் கொண்டார் சீனு.            
                வழியில் அரிய காட்சியொன்றைக் கண்டோம். பரந்து விரிந்த ஆலமரத்தின் நடுவிலிருந்து பனைமரம் உயர்ந்திருந்தது. ஆலமரத்தின் மீது பனங்கொட்டை விழுந்து முளைத்திருக்குமோ! பனைமரத்தின் அடிப்பகுதியைத் தேடி மோகனும் சீனுவும் சென்றனர், ஆனால் காணவில்லை

எங்கள் சந்தேகத்திற்கு விடை அருகிலேயே கிடைத்தது. பனைமரத்தின் மீது ஆலமரம் முளைத்திருப்பதை கண்டோம். ஆலமரம் விரைவாக வளர்ந்து பனைமரத்தின் அடிப்பகுதியை சுற்றி வளைத்து, மூடிமறைத்து, பரந்து விரிந்து காணப்படுவது, வியப்பாக இருந்தது
ஆலம்விதைகள் நேரிடையாக மண்ணில் விழுந்தால் முளைப்பதில்லை. பறவைகள் பழத்தை உண்ணும்போது, விதைகள் உணவுப்பாதையை கடந்து பறவையின் எச்சத்தோடு வெளியே வருகிறது. இவ்வாறு பறவையின் எச்சம் மரக்கிளைகளில் பொந்துகளில் பட்டைகளில் விழுந்து, அதிலிருக்கும் விதை முளைக்கிறது. ஆலும் பனையும் கூட்டாளிகளா ! கூட்டுயிரியா ! பொருமாள் ஏரிக்கரையில் ஒன்றாய் வாழ்கின்றன, ஒன்றியும் வாழ்கின்றன.
"ஐந்தாறு கிராமங்களை கடந்துவிட்டோம், சாதியக் குறியீடுகள் எதையுமே காணவில்லையே" என்றார் மோகன். வழியில் பெரியவர் ஒருவரை [கே.ஆர்.ரங்கநாதன், கருவேப்பம்பாடி] சந்தித்தோம், பெருமாள்ஏரிப் பற்றி விசாரித்தோம்.

"தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு, யாருக்கு உங்கள் வாக்கு" என்றோம். இது குறிஞ்சிப்பாடித் தொகுதியைச் சேர்ந்தது, வெள்ளத்தின் போது மிகுந்த பாதிப்பு, ஏரிநிரம்பி உடைந்து விடுமோ என்று பயமாயிருந்தது. சொரட்டூரார் இந்த பக்கமே வரல, எம்.ஆர்.கே ரொம்ப செய்திருக்கிறார்" என்றார். ‘’எப்போதும் தண்ணீர் இருக்கும், மீன்கள் நிறைய இருக்கும். ஏலம் விடப்படுவதில்லை, யார் வேண்டுமானாலும் மீன்பிடித்துக் கொள்ளலாம்.
"வீராணம்ஏரி முப்போகம் விளைஞ்சாலும்,
பெருமாள்ஏரி நண்டு நத்தைக்கு,
பொரிமாவுக்குக்கூடபோதாது "  - என்ற பழமொழியும் உண்டு’’ என்றார்.
பல இடங்களில் ஈச்சங்செடியில் காய்கள் கொத்துக்கொத்தாய் காணப்பட்டன. எல்லாம் செங்காய் பதத்தில் இருந்தன. களா செடிகளில் பூக்கள் நிறைந்திருந்தன. "அடுத்த மாதம் வந்தால் ஈச்சம்பழமும், களாக்காயும் கிடைக்கும்" என்றார் ஜி.எஸ். ஏரியில் அல்லியும் தாமரையும் மலர்ந்திருந்தன. ஊர் குளங்களில் அரிதாகிவரும் தாமரைப்பூ, இங்கு கண்கொள்ளாக் காட்சியாக நிறைய காணப்பட்டன

எட்டு கி.மீ. கடந்த பின்பு திரும்பி நடக்கத் தொடங்கினோம். ஏரிக்கரையை ஒட்டி ஏழு கிராமங்கள் உள்ளன. இளைஞர்கள் சிலர் ஆயித்துறை மதகுக் கட்டையில் உட்கார்ந்திருந்தனர். படமெடுத்தோம்.

 "இந்த மாதிரியான நடைப் பயிற்சியை, எதாவது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக செய்தாலென்ன ? துண்டறிக்கைகள் தயார் செய்து போகும் வழியில் தந்துக் கொண்டே போகலாமே!"என்றார், ஒவ்வொரு அசைவும் எதாவது ஆக்கவழியில் பயனளிக்கிறதா ? என்ற எப்பொழுமே சிந்திப்பவர் குமார்.  
உண்மைதான், இந்த ஏரியின் மூலம் ஆறாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலம் பயனடைகிறது. ஆனால் ஏரி தூர்ந்துக்கொண்டே வருகிறது, இதனை தூர்வார வேண்டும். கரையின் இருபுறத்தையும் மூலிகை தோட்டமாக பராமரிக்கலாம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தோன்றியது. மாவட்ட நிர்வாகமோ, தன்னார்வ அமைப்புகளோ மூலிகைகளை பராமரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பழுக்க வைக்கலாம் என்று செங்காய் பதத்திலிருந்த ஈச்சங்காய்களை பறித்துக் கொண்டனர். பிரண்டைக் கொடியிலிருந்து இளசுப் பகுதிகளை சேகரித்துக் கொண்டனர். "இனிமேல் நடைப்பயிற்சிக்கு வரும்போது கத்தி, கத்தரிக்கோல் என கருவிகளோடுதான் வரவேண்டும்" என்றார் பாண்டிதுரை.

"நீங்கள் குறைவான தூரம்தான் நடந்தீர்கள், நாங்கள்தான் அதிகதூரம் நடந்தோம் " . நடந்த தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டனர். "நமக்குள் சண்டை வேண்டாம், ஒற்றுமையாகத் தானே வந்தோம். நாம் சராசரியாக 8.5 கி.மீ நடந்துள்ளோம்". என்று நாட்டாண்மை [மணிவாசகன்] நல்லத் தீர்ப்பு சொன்னார்.

தொடங்கிய இடத்திற்கு வந்தடைந்தோம். முன்பே சொல்லிவைத்த கடையில் சிற்றுண்டி தயாராக இருந்தது. வீட்டிலிருந்த கொண்டு வந்திருந்த இனிப்பு உருண்டை [குலாப்ஜாமுன்] பரிமாறப்பட்டது. "இன்று சிட்டுக்குருவி தினம், அதனால் அனைவருக்கும் இனிப்பு" என்று சொல்வதற்குள் "இன்று இளங்கோவிற்கு பிறந்தநாள்" என்று அறிவித்தார் மணிவாசகன். வாழ்த்துகளுக்கு நன்றி, ஆனால் வயதை கேட்காதீர்கள் என்றேன். வந்த வழியிலேயே திரும்பினோம்.[20.03.2016]

No comments:

Post a Comment