Friday, 8 April 2016

திருமுல்லைவாசல் நடைப்பயிற்சி

திருமுல்லைவாசல் நடைப்பயிற்சி

நடைப்பயிற்சியை உள்ளூரில், நடந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் நடப்பதைக் காட்டிலும், அருகாமையில் உள்ள போக்குவரத்து குறைந்த சிற்றூர் சாலையில் நடப்பது புத்துணர்ச்சியாக உள்ளது.
                சீனுவும் நானும், கொள்ளிடத்திற்கு அடுத்துள்ள புத்தூரில் இறங்கினோம். மணிவாசகன், பாண்டிதுரை, குமார், இளஞ்செழியன் ஆகியோர் எங்களுக்காக காத்திருந்தனர். புத்தூரின் தலவரலாறு தெரியாது, ஆனால் இங்கு அசைவ கடை ஒன்று உள்ளது. புத்தூர் ஜெயராமன் கடை, குறிப்பாக சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வரை அசைவ உணவுக்கு புகழ்பெற்ற கடை. இளைஞர்களிடையே விருந்து என்றால், "புத்தூர் ஜெயராமன் கடைக்கு போகலாமா?" என்றுதான் கேட்பார்கள். கடை என்னவோ கூரைக் கொட்டகையில்தான், ஆனால் உணவின் சுவை ஐந்துநட்சத்திர தரத்திற்கும் மேல். "நாக்கை கட்டுப்படுத்த தெரியனும்" என்று அறிவுரை சொல்பவர்களை, ஒருமுறையேனும் புத்தூர் ஜெயராமன் கடையில் சாப்பிட சொல்ல வேண்டும்
                முக்கூட்டு கடையில் தேனீரை குடித்துவிட்டு பழையாறு சாலையில் நடக்கத் தொடங்கினோம். இளஞ்செழியன் [தலைமையாசிரியர்,..பள்ளி,தொடுவாய்] கால்சட்டை டீ-சட்டையுடன் வந்திருந்தார். "அறைகுறை ஆடையுடன்" என்று சொல்லமுடியாது, அதற்கும் குறைவாகவே இருந்தது. நடையும் மிடுக்காக இருந்தது. "காணிக்கு ஏழு மூட்டை உளுந்து அறுவடை செய்துள்ளார், அதான் மிடுக்கான நடை" என்றார் மணிவாசகன். "ஆசிரிய நண்பர்கள் சிலர் தீவிரமாக விவசாயம் செய்துக்கொண்டிருப்பதை அறிவேன். நல்ல "அறுவடை" என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் விவசாயம் மட்டுமே அடிப்படையாக உள்ளவர்கள் புலம்புகிறார்களே ஏன்?" என்றேன். "காலகாலத்துக்கு போடவேண்டியதை போட்டு, செய்யவேண்டியதை செய்தால் விளையவேண்டியது விளையும்..,.மாத சம்பளம் இதற்கு தோதாக உள்ளது" என்றார் மணிவாசகன். "பார்க்காத பயிரும், கேட்காத கடனும் வீடுவந்து சேராது என்பார்கள், அதனால் ஓய்வுக்குப் பிறகு முழுமூச்சாக விவசாம்தான்" என்றார் மணி.
                படம் எடுப்பதற்காக பின்தங்கிய நானும் குமாரும், கடைசியாகத்தான் மற்றவர்களோடு சேர்ந்தோம். வெகுதொலைவு முன்னே சென்றுவிட்ட குழுவிலிருந்து மணி கைபேசியில் தொடர்புகொண்டார் "வழியில் பழங்கால ஓட்டுவீடு ஒன்றைப் பார்த்தேன், அதை படமெடுங்கள். பல வீடுகளுக்கு முன்பு உயிர்வேலி வைத்துள்ளார்கள், அதையும் படமெடுங்கள்"என்றார்

கிராமங்களில் உயிர்வேலி வைக்கிற வழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. "ஆடாதொடை, காட்டாமணக்கு, கிளுவை, நொச்சி, மருதாணி போன்றவற்றை வேலியாக வளர்திருப்பதை முன்பு கிராமங்களில் பார்த்திருக்கிறேன், இப்போதொல்லாம் வழக்கொழிந்துவிட்டது" என்றார் குமார். "தமிழர்கள் வீட்டிற்கு முன்பாக, வேரல்வேலி, தில்லைவேலி, நொச்சிவேலி, கண்டல்வேலி வைத்திருந்தை சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன" என்றேன்.  
கூத்தியம்பேட்டை கடந்து நடந்து கொண்டிருந்தோம், வெயில் ஏறிக் கொண்டிருந்தது. ஒருகாணி அளவில் சுற்றுகட்டு வீடு, ஓடுவேய்ந்த மாட்டுத் தொழுவம். மணிவாசன் உள்ளே நுழைந்தார்

அறிமுகம் இல்லாத இடத்திலும் எளிதில் நுழைந்துவிடுவார். முகஅமைப்பு அப்படி, நானெல்லாம் நுழைந்தால், கூடவந்தவருக்கும் தரும அடிதான். உள்ளே இருந்த வயதான தம்பதியர் இருவருமே இயல்பாக பேசினர்.


 "இப்பகுதியில் கோவிந்தசாமிநாயுடு தான்பெரிய பண்ணை, தன் ஆறுமகன்களுக்கும் ஆளுக்கு முப்பதுகாணி, ஒருகாணி அளவில் சுற்றுக்கட்டு வீடு கொடுத்தார்ஆறுபேருல நாங்க ஒரு குடும்பம், விவசாயம் முழுவதும் நின்னுபோச்சு" என்றார் மூதாட்டி.
வீடும், தோட்டமும், தொழுவமும் வெறிச்சோடி கிடந்தது. "நீங்கள் இருவர் மட்டும்தான் இருக்கின்றீர்களா ? உதவிக்கு யாரும் இல்லையா ?" என்றார் மணி.
"மிகப்பெரிய வீடு, முப்பதுகாணி நிலம் இருந்தும் பயனென்ன?   தங்கள் ஒரே மகன் எங்களை பார்க்க ஐந்தாண்டுகளாக வரவில்லை" என்று நாயுடு தம்பதியினர் கண்கலங்கினர். முதியோர்களின் மனதை கலங்க செய்துவிட்டோம் என்று தோன்றியது. மொல்ல விடைபெற்று நகர்ந்தோம், பேசிக்கொண்டே நடந்தோம்.
                "இதற்கெல்லாம் காரணம், விவசாயம் பொய்த்துப் போய் பிழைப்புத்தேடி வெளியூருக்கு புலம்பெயர்ந்ததே" என்றார் பாண்டிதுரை. "செயற்கை முறை விவசாயத்தை பின்பற்றியதும், காவிரி நீர் தடைபட்டு போனதும் தான் காரணம். காவிரி நீர் பிரச்சனையில் இரண்டு திராவிடக் கட்சிகளுமே நமக்கு துரோகம் இழைத்துவிட்டன." என்றார் மணிவாசகன். "திராவிடக் கட்சிகள் மீது குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, உலகமயமாக்கல் நுகர்வுகலாச்சாரம் நம் வாழ்வியலை சிதைத்துவிட்டன" என்றேன்.
                ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, என் மாமா [.சண்முகசுந்தரம், முன்னாள் வனத்துறைத் தலைவர்], தமிழ்ப் பேராசிரியர் சாரங்கபாணி அவர்களை  நலம் விசாரிக்கப் போயிருந்தபோது அவர் சொன்னதாக  சொன்ன செய்தி - பேராசிரியர் சாரங்கபாணியும் அவரோடு சிலரும் பெரியரை சந்திக்கச் சென்றிருந்தனர். பேசிக்கொண்டிருந்த போது "அய்யா, நீங்கள் நூறு வயது வாழவேண்டும்" என்றாராம் பேராசிரியர். பெரியார் சிரித்துக்கொண்டே, "இருந்து பாத்தா தெரியும்" என்றாராம். "பெரியார் சொன்னதை இப்போதுதான் உணரமுடிகிறது, முதுமை எவ்வளவு சிரமமானது என்று. பெரியார் சாதாரணமாக பேச்சுவாக்கில் சொன்னதுகூட தத்துவம்தான்" என்றார் பேராசிரியர் மாமாவிடம்

                "முதுமையில் கைவிடப்பட்ட பெற்றோர்களின் நிலை மிகவும் கொடுமைதான். இதில் வசதி அல்லது வசதியின்மை என்பதொல்லாம் பொருட்டல்லஎன் உறவினர் குடும்பம் ஒன்றில், நான்கு பிள்ளைகளிருந்தும் தன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். இது பரவாயில்லை, என் தூரத்து உறவுக்காரர் நோய்வாய்ப்பட்ட தன்தந்தைக்கு இளநீர் கொடுத்து விடுவிடுவென வேலையை முடித்ததாக சொன்னார்."  என்றேன்.
"கிராமங்களிலேயே இருந்தால், பல சொந்தங்கள் அருகிலேயே இருக்கும், ஒத்தாசைக்கு ஆட்கள் இருக்கும்" என்றார் மண்வாசனை குன்றாமல் வாழும் இளஞ்செழியன். பக்கவாதம் வந்து தேறிய என் தாத்தா, "இனிமேல் பிள்ளைகளுக்கு தொந்தரவு தரமாட்டேன், என் மகள்களும், மறுமகள்களும் மலம் அள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, தற்கொலை செய்துகொள்ள போகிறேன்" என்று சொன்னார். காவல் இருந்தும் முடியவில்லை.
சென்றவாரம் ஆசிரிய நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது, "என் தந்தைக்கு பக்கவாதம் வந்து படுத்தபடுக்கையாகி விட்டார், எட்டு ஆண்டுகளாக பணிவிடை செய்துவருகிறேன். மலசலம் சுத்தம் செய்வதில் உள்ள டயபர், வெட்கிளாத் என எளிமையான வழிகள் உள்ளன. டயபர், வெட்கிளாத், மருந்துகளுக்கு இலட்சுமி பார்மஸியில் பத்து சதவீதம் கழிவு உண்டு" என்றார் இயற்பியல் ஆசிரியர் செல்வகணபதி.
எட்டு ஆண்டுகளாகவா......,அவரது அர்ப்பணிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. அவர்மீது உள்ள மதிப்பு பன்மடங்கு கூடியது.      "என் மாமனாரு படுத்த படுக்கையாகி விட்டார், ஐந்தாறு வருடம் நான்தான் பணிவிடை செய்து பார்த்துக்கொண்டேன்" என்றார் நமச்சிவாயம். என்மனதில் மதிக்கதக்க மனிதராக உயர்ந்துவிட்டார்  நமச்சிவாயம். மேலும், "அந்தியகாலத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ, அவ்வளவு பாவம் செய்திருக்கிறோம், என்று அர்த்தம்." பிறருக்கு தொந்தரவு தராமல் அறுபது எழுபதுக்குள் கிளம்பிடனும்" என்றார் நமச்சிவாயம்.
"அந்தியகாலத்தில் பொற்றோரை பார்த்துக்கொண்டால் அவ்வளவும் புண்ணியம்" என்றார் விஜி. "எனக்கு பாவம் புண்ணியத்தில் நம்பிக்கையில்லை, பற்றுபாசம், மனிதாபிமானம், சகிப்புத்தன்மை என்பதைதவிர வேரொன்றும் இல்லை" என்றேன்.
வடபாதி பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில், நல்லிதயம் கொண்ட யாரோ ஒருவர் ஆலமரம் ஒன்றை நட்டுள்ளார். இளமையான ஆலமரத்தை காட்டி, "சாமுத்திரிகா இலட்சணத்தோடு இருக்கிற கன்னிப்பெண்ணைப் போல் நிற்கிறது, பாருங்கள்" என்றார் குமார். மெல்ல அதனை கடந்து சென்ற பின்பும் திரும்பிப் பார்த்தேன், உண்மைதான் நல்ல உவமை.

வடபாதி, நல்லநாயகபுரம் கடந்து வேட்டங்குடி சாலையில் நடக்கத் தொடங்கினோம். வெயில் ஏறிக்கொண்டேயிருந்தது, தமிழ்ச்செல்வன் [தலைமையாசிரியர், திருமுல்லைவாசல்] மகிழுந்தில் எங்களை அழைத்துக்கொண்டு தன் அலுவலம் வந்தடைந்தார். 


தாகம் தீர்த்தார், பேருண்டி வழங்கினார். “விருந்தோம்பல் திலகம் நம் தமிழ்ச்செல்வன்” என்றார் மணிவாசகன்.

"இ்ந்த முறை நான் நடைப்பயிற்சியில் கலந்துக்கொள்ளவில்லை, அப்படின்னு  என் பெயரைப் பதிவுசெய்யுங்கள்" என்று மோகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திரு.ஆ.மோகன் [தலைமையாசிரியர், அமேநிபள்ளி, கிள்ளை] அவர்கள் பணிநிமித்தம் காரணமாக  நடைப்பயிற்சியில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. [27.03.2016]

No comments:

Post a Comment