மதுரை அமெரிக்கன் கல்லூரியில், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் கல்வெட்டு பயிற்சிப் பட்டறை
தமிழ்க்
கல்வெட்டு எழுத்துகளைக் கற்றுக்கொள்வதில் 1986 முதல் 1989 வரை நான்காண்டுகள் ஆர்வமாக
ஈடுபட்டிருந்தேன். தமிழி [அசோக பிராமி] எழுத்துக்கள் முழுமையானதாகவும் தெளிவானதாகவும்
அமைந்திருப்பதை கண்டு அதனை பயன்பாட்டில் கொண்டுவர முயன்றேன். நண்பர்களுக்கும் பயிற்சித்து நடைமுறையில் பயன்படுத்தவும்,
கடிதங்களை தமிழி எழுத்துக்களில் எழுதவும் செய்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்
கல்வெட்டு குறித்து சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கேற்றாற் போல் முகநூலில்
"தமிழ் மரபு அறக்கட்டளை" யின் பதிவு, கல்வெட்டு பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள ஒரு வாய்ப்பை தந்தது.
16.12.2016
அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் கல்வெட்டு பயிற்சிப் பட்டறை மற்றும் கண்காட்சியும் நடத்தப்பட்டது. காலை கண்காட்சி, மாலை பயிற்சிப்பட்டறை என்பதாக நிகழ்சி நிரல். இரண்டிற்குமே நேரம் போதவில்லை என்று தோன்றுமளவிற்கு உள்ளடக்கம் இருந்தன. குறிப்பாக மாலையில் நடைபெற்ற கல்வெட்டுப் பயிற்சிப் பட்டறை, கருத்தரங்கு போன்றே அமைந்தது. கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் பத்மாவதி, [தொல்லியல் துறை - ஓய்வு], அவர்களின் கருத்துரை ஆற்றொழுக்குபோல் தடையில்லா சொல்லோட்டமாக அமைந்தது, அனைவருரையுமே வியப்படையச் செய்தது. தமிழெழுத்தின் வரலாற்றை தமிழகத்தின் வரலாற்றோடு இணைத்து சொல்லோவியமாக தீட்டி ஆங்காங்க தமிழினத்தின் மீட்சிக்கான கருத்துக்களை பதித்து வழங்கியது மிகவும் போற்றுதற்குரியது.
கண்காட்சியினை பேராசிரியர் பாண்டியராஜன், [தமிழ்த்துறை-ஓய்வு] அவர்கள் திறந்து வைத்தார். கண்காட்சியில் தமிழ் ஓலைச்சுவடிகள் மற்றும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நூல்கள் போன்றவற்றை பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றை தொட்டுப்பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்காமல், புதையலைப் போல் பாதுகாக்கும் கல்லூரியின் நூலக இயக்குநர் வசந்தக்குமார் அவர்களை அனைவருமே பாராட்டினர்.
கல்வெட்டில் உள்ள குறியீடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அறிஞர் சந்திரபோஸ் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டதோடு கருத்துகளையும் தெரிவித்தனர். பெருமளவில் மாணவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொண்டது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கல்லூரியின் முதல்வர் & செயலர், முனைவர் தவமணி கிறிஸ்டோபர் அவர்கள் தமிழ்வளர்ப்பதில் காட்டும் ஈடுபாடும் ஒத்துழைப்பும் போற்றுதலுக்குரியது.
அயலகத்தில் [ஜெர்மனி] இருப்பினும் தாயகத்தில் "தமிழ் மரபு அறக்கட்டளை"
அமைப்பைத் தொடங்கி, தமிழ் மரபின் பண்டைய அடையாளங்களை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் முனைவர் சுபாஷிணி அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் பாராட்டுகள், நன்றிகள் உரித்தாகுக !