Thursday, 13 October 2016

முடவாட்டுக்கால் [Mudavattukal] - Drynaria quercifolia

முடவாட்டுக்கால் [Mudavattukal] - Drynaria quercifolia
மூலிகை சேகரிப்புக்காக கொல்லிமலை சென்றோம். "கொல்லிமலை இரகசியம்" என்றொரு பழமையான நூல், கொல்லிமலையில் காணப்படும் பல அரிய மூலிகைகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அதிலொன்றுதான் "முடவாட்டுக்கால்" என்னும் மூலிகைத் தாவரம். முடவாட்டுக்கால் எனப்படும் இந்த வேரி கிழங்கை புடம்போட்டு மருந்தாக பயன்படுத்துவது பற்றிய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. இதைப்பற்றி விசாரித்தபோது, கொல்லிமலையின் உச்சியில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயில் வாசலில் உள்ள கடைகளில், முடவாட்டுக்கால் கிழங்கு விற்கப்படுகிறது என்றனர். வாசலில் உள்ள கடைகள்  சிலவற்றில் முடவாட்டுக்கால்சூப் விற்கப்படுவதைக் கண்டு, அனைவரும் வாங்கிப்பருகினோம். மிகவும் நன்றாக இருந்தது. முடவாட்டுக்கால்சூப் மூட்டுவலிக்கு மிகவும் நல்லது என்றனர். முடவாட்டுக்கால் கிழங்கின்  மேல்தோல்  முழுவதும் தூவிகள் மூடப்பட்டு,  ஆட்டின்கால்போல் உள்ளதால், அதுவும் வளைந்தும் கிளைத்தும் உள்ளதால்  "முடவாட்டுக்கால்"  என்றழைக்கின்றனர் போலும்.   
முடவாட்டுக்கால், பாறைகளின் இடைவெளியில் இடுக்குகளில் மரப்பொந்துகளில் தொற்றிவளரும் பெரணி குடும்பத்தை சேர்ந்த தாவரம். முடவாட்டுக்கால் பெரணி [Drynaria quercifolia], மலைப்பகுதியில் குறிப்பாக தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளாகிய கொல்லிமலை, ஏற்காடு, கல்வராயன் மலைப்பகுதியில் காணப்படுகிறது. இம்மலைவாழ் மக்கள் இதன் வேரிகிழங்கை சேகரித்து, கிலோ ஐம்பது முதல் நூற்றைம்பது வரை விற்கின்றனர்.


முடவாட்டுக்கால்சூப்
முடவாட்டுக்கால் கிழங்கின் தூவிகளை நீக்கி, தோலை சீவி சிறுதுண்டுகளாக வெட்டி கொதிக்கவைத்து அதனோடு மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி சேர்த்து சூப்பாக செய்து  சாப்பிடலாம்.


            சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் "முடவாட்டுக்கால்" மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. நவீன மருத்துவ ஆய்வுகள் மூலம் கீழ்காணும் பண்புகள், முடவாட்டுக்கால்   உள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளன.
மேகவெட்டை நோயை குணமாக்கும்;
நீரிழிவு நோய் தணிக்கும்;
காய்ச்சலை குறைக்கும்;     
மனச்சோர்வுப் போக்கும்; 
வீக்கத்தை போக்கி, வலியை குறைக்கும்;
கீல்வாதம், முடக்குவாதம், மூட்டுவாதம், போன்றவற்றை தணிக்கும்;
சிறுநீர் எரிச்சலை போக்கும்;
கொழுப்பை [கொலஸ்ரால்  அளவை] குறைக்கும்;
நீர்க்கோவையை நீக்கும்;
பூஞ்சையினால் ஏற்டும் தோல் நோயை குணமாக்கும்.
வயிற்றுப் பூழுக்களை அகற்றும்; 
மேலும், ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள்; நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இத்தாவரம் பயிரிடப்படுவதில்லை, மலைவாழ் மக்கள் காடுகளில் தானாக வளர்வதை சேகரித்துதான் விற்பனை செய்கின்றனர். காலப்போக்கில் இத்தாவரம் அளவிற்கதிகமாக சேகரிக்கப்பட்டால் அழியும் நிலைக்கு தள்ளப்படும். எனவே, வனத்துறையினர் இதில் கவனம் செலுத்தி, இதன் பயனை உணர்ந்து, அதிகஉற்பத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.