Saturday, 5 November 2016

கொட்டிக்கிழங்கு [Aponogeton monostachyon]

கொட்டிக்கிழங்கு
[Aponogeton monostachyon]

நமக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும், கிடைப்பது மிகவும் அரிது. நம்மோடு வளமையான காலத்தில் உடனிருந்து, இக்கட்டான நேரத்தில் பிரிந்து விலகிச் செல்கின்ற உறவுகளையும் நண்பர்களையும் நிறைய சந்திக்கின்றோம். துன்பமான காலத்திலும் உடனிருந்து ஒப்புரவு கொள்பவர்களே நல்ல நண்பர்கள் - உறவுகள். இதனை இயற்கை நிகழ்வோடு ஒப்புமைப்படுத்தியுள்ளார் தமிழ்மூதாட்டி ஔவையார்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
- ஔவையார் (மூதுரை - 17)

[ நீர் அற்ற குளத்திலிருந்து பறந்து செல்கின்ற நீர்ப்பறவை போல்,  வறுமை வந்த போது நீங்குவோர் உறவு அல்லர்அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல வறுமையான காலத்திலும் நீங்காமல் உடனிருந்து துன்பதை அனுபவிப்பவரே நல்ல உறவினராவர்” ]


சங்க இலக்கியங்களில், கொட்டித் தாவரம் குறித்து குறிப்புகள் இல்லை, பிற்கால ஔவையார் பாடலில் மட்டுமே "கொட்டி" குறிப்பிடப்பட்டுள்ளது. ஔவையார் ஒருவரல்லர், சங்கம் மருவிய காலத்திலும் ஔவையார் என்ற பெயரில் புலவர்கள் இருந்துள்ளனர் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கவியரசர் கம்பரின் தனிப்பாடலிலும் "கொட்டிக் கிழங்கு" குறிப்பிடப்பட்டுள்ளது,      

இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய” – கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்

[ முதலிரு வரிகள் அம்பிகாபதி பாடியதாகவும், தொடர்ந்து கம்பர் பாடி முடித்ததாக கூறப்படுவது ஆய்வுக்குறியது. ]

நம்முன்னோர்கள் கொட்டிக்கிழங்கை வேகவைத்து உணவாகவே உண்டனர், இதில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. இப்போது இப்பழக்கம் வழக்கொழிந்துவிட்டது. இதுபோல் தமிழர்கள் தொலைத்த பாரம்பரிய அறிவு எண்ணிலடங்காதவை... கொட்டிக்கிழங்கைப் பறித்து தோலைநீக்கி சுத்தம்செய்து  பச்சையாகவே உண்ணலாம்,  மரவள்ளிக்கிழங்கு போன்று சுவையாக இருக்கும்.


கொட்டி, மருதநிலத்தின் ஆழமற்ற நீர்நிலைகளில் குறிப்பாக, ஏரிகள் மற்றும் குளங்களின் கரையோரங்களிலும், நீர்தேங்கியுள்ள மணற்பாங்கான வயல்களிலும் வளர்கிறது. கொட்டி தாவரம், கீழே மண்ணில் வேரூன்றி, நீர்மட்டத்தில் இலைகளை பரப்பி, நீர்மட்டத்திற்கு மேல்  மஞ்சரியை கொக்கிபோல் நீட்டி வளர்ந்து காணப்படும். நீர்நிலைகள் வற்றிப்போனாலும் மண்ணில் புதைந்திருந்திக்கும் கொட்டிக்கிழங்கு, மழைக்காலத்தில் நீர்நிறைந்ததும் வளரத் தொடங்கும்.
கொட்டியில் பலவகைகள் உண்டு, அவை  கருங்கொட்டி [Arum nympacifolia],  காறற்கொட்டி [Arum minutum], தண்டற்கொட்டி [Arum trilobatum]  என்று சாம்பசிவம்பிள்ளை சித்தமருத்துவ அகராதியில் குறிப்பிட்டாலும், அவை கொட்டியின் [Aponogeton] சிற்றினங்கள் இல்லை. உலகில் கொட்டியின் [Aponogeton] சிற்றினங்கள்  57 உள்ளன எனவும், இந்தியாவில் 7 சிற்றினங்கள் உள்ளதாகவும் ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கொட்டிக்கிழங்கு குளிர்ச்சி என்பார், தேமலுடன்
ஒட்டி நிறைமேகம் ஒழிக்கும்காண் - வட்டமுலை
மானே ! அகக்கடுப்பும் வந்த அழலும் தணிக்குந்
தானே, இதை அறிந்து சாற்று !

 [கொட்டிக் கிழங்கு தேமல், பிரமேகம், உட்சூடு ஆகிய இவைகளை நீக்கும். இதனை குளிர்ச்சி என்பார் என்க.] என அகத்தியர் பாடல் தெரிவிப்பதாக குணபாடமும், பதார்த்த குண சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. கொட்டிக் கிழங்கை உலர்த்தி பொடித்து சூரணமாக உட்கொண்டால் பிரமேகம், தேகச்சூடு குணமாகும்.



 வெட்டுகாயங்களை ஆற்றும் தன்மை கொட்டியின் இலைகளுக்கு உண்டு, பூஞ்சை கொல்லியாக பயன்படும் வேதிப்பொருள் கிழங்கின்சாற்றில் உள்ளது. கொட்டிக்கிழங்கு, உடலில் சர்க்கரை அளவை குறைக்கும் குணம் உடையது என்பதை இக்கால நவீன ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
தமிழ்மண்ணோடு வாழும் கொட்டிக்கிழங்கின் பயன்பாட்டை, வழக்கொழியாமல் கெட்டியாய் பிடித்துக்கொள்வோம்.



வள்ளைக் கொடி [ வள்ளைக்கீரை ] [Ipomoea aquatica]

வள்ளைக் கொடி [ வள்ளைக்கீரை ]
[Ipomoea aquatica]

வல்லாரைக் கீரை தெரியும் ! அதென்ன வள்ளைக் கீரை ? .... தெரியாது ! என்றார் நண்பர் சீனுவாசன். வாய்கால்களில் எங்கு பார்த்தாலும் வள்ளைக்கொடி படர்ந்து காணப்படுகிறது. வாடிக்கையாக வீட்டிற்கு காய்கறி கொண்டுவந்து விற்கும் மூதாட்டியிடம், அவ்வப்போது வள்ளைக்கீரையைப் பறித்துவரச் சொல்லி சமைப்பதுண்டு. "இவ்வளவு சுவையான கீரை எங்கு பார்த்தாலும் வளர்ந்துள்ளதே, இதனை ஏன் மக்கள் பறித்து சமைப்பதில்லை" என்று அங்கலாய்த்துக்கொண்டார் செல்வமாதவன். பள்ளி நிகழ்ச்சி ஒன்றின்போது, நகராட்சி கழிவுகள் கலக்காத வாய்காலைத்தேடி ஊருக்கு வெளியில் சென்று வள்ளைக் கீரையைப் பறித்துவந்து "சூப்" செய்து வழங்கி "நல்லபெயர்" வாங்கினார் ஆசிரியர் துரைராஜன். கவனிப்பாரற்று வளர்ந்து கிடக்கும் வள்ளைக்கொடியைப் பார்க்கும்போது, மறைந்து கொண்டிருக்கும் தமிழரின் பாரம்பரிய அறிவு நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, "வாழிடப்பற்று அற்றுபோய்விட்டதா நமக்கு ?" என்றும் தோன்றுகிறது.
  

சங்க கால தமிழர்கள் எதற்கு பெயர் சூட்டுவதென்றாலும், குறிப்பாக நிலைத்திணை, அகத்திணை - புறத்திணை நிகழ்வுகள், பண் மற்றும் பாட்டு வகைகள் என அனைத்திற்கும் மலரின் பெயரை சூட்டுவதை முதன்மையாக கொண்டிருந்தனர். அதனால்தான் தமிழர்களின் பண்பாடு மலர் சார்ந்தது என பெருமையாக கூறிக்கொள்கிறோம்.
வள்ளைப் பாட்டு - வள்ளைக்கூத்து
குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு என தமிழ்ப் பாட்டுவகைகளுக்கு மலரின் பெயரை சூட்டியது போல்,  “வள்ளை” என்பதும் மலரின் பெயரால் அழைக்கப்படும் பாட்டு வகையாகும். பெண்கள் உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும்போது, போரில் வென்ற அரசனைப் புகழ்ந்துப் பாடும் புறத்திணைப் பாட்டு “கொற்ற வள்ளை” [தொல்.] எனப்படுகிறது. இதனோடு இணைத்து நிகழ்த்தப்படும் கூத்து “வள்ளைக்கூத்து” எனப்பட்டது .

வள்ளைக்கொடி -
வள்ளைத் தாவரம் [Ipomoea aquatica] மருதநில நீர்நிலைகளில், அதிகமாக வாய்க்காலிலும், ஓடையிலும் கொடியாக படர்ந்து வளரும். வள்ளைக் கொடி நீண்ட தண்டினையுடையது. கணுக்களில் வேர்கள் தோன்றி ஆழமற்ற இடங்களில் வேரூன்றியும், தண்டில் துளையைப் பெற்றுள்ளதால் ஆழமான இடங்களில் மிதந்தும் காணப்படும். சற்று பெரிதான வள்ளைக் கொடியின் மலர், காலையில் மலரும் தன்மையுடையது [Swamp Morning Glory]. புனல்வடிவில் உள்ள மலரின் தொண்டைப் பகுதி அடர்ந்த ஊதா நிறமாகவும், பிற பகுதி வெளிறியும் காணப்படும். வள்ளைப்பூ கொள்ளை அழகுதான் !

.
சங்க இலக்கியம் -
வள்ளைக் கொடியின் தண்டு துளையுடையது. இச்சிறப்பு பண்பினை அடைமொழியாகக் கொண்டு "அம்தூம்பு வள்ளை" [தூம்பு - துளையுடையது] என்று சங்கப்புலவர்கள் பரணரும், அள்ளூர் நன்முல்லையாரும் [அக.16 & அக.46]. குறிப்பிடுகின்றனர். “வள்ளைத்தண்டில் உள்ளதுபோல் துளையிட்டு அணி செய்யப்பட்ட காதுகள்” - என  வள்ளைத்தண்டின் துளையை எடுத்துக்காட்டுகிறார் சீத்தலைச் சாத்தனார் [மணிமே.109].
நீர்நிலைகளில் படர்ந்துள்ள வள்ளைக்கொடியின் கீழ்ப்பகுதி, மீனினங்களின் பாதுகாப்பான வாழிடமாக திகழ்கிறது. வள்ளைக் கொடி படர்திருக்கும் பொதும்பில் ஆமை துயில்வதாக மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன்மள்ளனாரும்,[அக.256], வலை வீசுவோர் வள்ளைக்கொடிகளை நீக்கி மீன் பிடித்ததாக மாங்குடி மருதனாரும் [மது.255] குறிப்பிடுகின்றனர். வேடர் மீன்பிடி தூண்டிலிடுவதற்கு வள்ளைக் கொடி தடையாக இருப்பதை மதுரை நக்கீரர் குறிப்பிடுகிறார். பாலைக் கெளதமனார் [பதி.29], வளைக்கை மகளிர் வள்ளை கொய்வதை தெரிவிக்கிறார்.




வள்ளைக்கீரை                         
வள்ளைக்கொடியின் இலைகளை சமைத்துண்ணலாம். .[இலை என்பது பொது பெயர்ச்சொல். மனிதன் உட்கொண்டால் கீரை; விலங்கு தின்றால் தழை]. வள்ளைக்கீரை, பசலைக்கீரையைப் போன்று சமைத்துண்பதற்கு ஏற்றது. சில கிராமங்களில் வள்ளைக்கீரையை சமைத்துண்ணும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால் பெரும்பான்மையான கிராமங்களில் இப்பழக்கம் வழக்கொழிந்துவிட்டது. நம்மில் பலர் வள்ளைக்கொடியை மறந்துப்போனதும், நம்மிடையே அதன் பயன்பாடு வழக்கொழிந்து போனதும் வருத்தத்திற்குரியது. வேறு என்ன சொல்வது ?
சீனா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளாகிய தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில், இன்றளவிலும் முக்கிய கீரைவகைகளில் ஒன்றாக வள்ளைக்கீரை உள்ளது. குறிப்பாக, வியட்நாம் நாட்டில் ஏழைகளின் தினசரி உணவாகவே வள்ளைக்கீரை உள்ளது. சில நாடுகளில் வணிகப்பயிராக வள்ளைக்கொடி வளர்க்கப்படுகிறது.

வரலாற்றுப் பதிவுகள்
வள்ளைக்கொடி மிக விரைவாகவும், எளிதாகவும் வளர்கின்ற காரணத்தால் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மட்டுமல்லாது, உணவு தட்டுப்பாடு ஏற்படும் போர்காலத்தில்கூட  வள்ளைக்கீரை பயன்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன் - அமெரிக்கா போரின் [1899 – 1902] போது பிலிப்பைன் நாட்டில் வாய்க்கால்களில் வள்ளைக்கீரை வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், சிங்கப்பூரை ஆக்கமித்த போது [1942 – 1945] மக்களின் சிறந்த போர்கால உணவாக வள்ளைக்கீரை பயன்பட்டது

மருத்துவப் பயன்கள்
புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்தது. இலைச்சாறு மஞ்சக்காமலை மற்றும் நரம்புத் தளர்ச்சிக்கு மருந்தாக பயன்படுகிறது.இரத்த அழுத்தம் மற்றும் மூக்கில் இரத்தம்வடிதலை குணமடையச் செய்கிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலை போக்கும்.இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.“வள்ளைக்கீரை - வாயுபோம், பாலுண்டாம்” என்கிறது மூலிகை மருத்துவ அகராதி. "அதிமூத்திரம் குறையும், தாய்ப்பால் சுரக்கும்" என்கிறது அகத்தியர் குறிப்பு.


வள்ளைக்கீரை, வள்ளைப்பாட்டு, வள்ளைக்கூத்து ஆகியவை வழக்கொழிந்துவிட்டது என்று விட்டுவிடலாமா ? உயிரூட்டி வளர்த்தெடுக்க முயற்சிப்போமா ?