Friday, 19 May 2017

கடம்பூர் களப்பயணம்


                                            கடம்பூர் களப்பயணம்

        சிதம்பரம் மேதினப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அய்யா ஆனைமுத்து அவர்கள், மறுநாள் [02.05.2017] காலை சி.பெரியசாமி, மாங்குடி மோகன் மற்றும் துரை சித்தார்த்தன், ஆகியோருடன் வீட்டிற்கு வந்தார்கள். உரையாடலின் நடுவே, "ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் நடைபெறும் அகழ்வாய்வுகள் மய்ய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. இதனை டில்லியிலுள்ள இயக்குநரிடம் நேரிடையாகவே தெரிவித்தேன்" என்றார் அய்யா. மேலும், "நமது தோழர்கள், குழுவாக சேர்ந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொல்லியல் இடங்களுக்கு தொடர்ந்தார்போல் பத்துப் பதினைந்து நாட்கள் களப்பயணம் மேற்கொண்டு மீளாய்வு செய்ய வேண்டும்" என்றார்.
       கடந்த ஒரு மாதமாகவே, குடும்பத்தில் அனைவரும் கல்கியின் "பொன்னின் செல்வம்" வரலாற்று நாவலைப் பற்றி அவ்வப்போது உரையாடிக் கொண்டிருந்தோம். தமிழர்கள் ஒருமுறையேனும் கல்கியின் "பொன்னின் செல்வம்" வரலாற்று நாவலைப் படிக்க வேண்டும். "படிக்க தொடங்கிவிட்டால், சோறு தண்ணி இல்லாமல் ஐந்து தொகுதிகளையும் படித்து முடித்தால்தான் நிம்மதியாக தூங்கமுடியம்." என்றார் ஆ.கலைச்செல்வன். படித்து முடித்தாலும், பல புதிர்கள் மனதிலேயே தேங்கி நிற்கும், அதில் மிகப்பெரிய புதிர் - "பாண்டிய மன்னனின் தலையைக்கொய்து வருமளவு போர்குணம் கொண்ட ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவராயர் மாளிகையில் சூழ்ச்சி செய்து கொன்றது யார் ? ஏன் கொன்றார்கள்?" என்பதுதான்.
"கோடைவிடுமுறையில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துபோக வேண்டும்" என்ற தமிழ்ச்சேரனின் விருப்பம், என எல்லாம் பொருந்திவர கடம்பூர் செல்ல திட்டமிட்டோம்.

வரலாற்றுப் பதிவுகள்
கிட்டதட்ட ஒன்பது நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சோழப்பேரரசை மீட்டுருவாக்கம் செய்யப்படுவதில் முக்கியப் பங்காற்றியவர் ஆதித்த கரிகாலச் சோழன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிபுரிந்த [கிபி 956 - 969] இரண்டாம் ஆதித்த கரிகாலச்சோழன் போரில் கொல்லப்படவில்லை, மாறாக அவரது ஆட்சி மண்டலத்தில் உள்ள கடம்பூர் சம்பூவராயர் மாளிகையில் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார், கொலைக்கான காரணங்கள் எவை என்ற புதிர் பல ஆண்டுகள் கண்டறியப்படாமலே இருந்தன.
ஆதித்த கரிகாலச்சோழன் கொலையுண்டதற்குபின், இவரின் தந்தை சுந்தரச் சோழர் இறந்துபட, சிறியதந்தை உத்தம சோழன் 15 ஆண்டுகள் சோழமண்டலத்தை ஆட்சி புரிகிறார். இதற்குப்பின் ஆதித்த கரிகாலச்சோழனின் தம்பியாகிய ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறார். இவருடைய ஆட்சிகால உடையார்குடிக் கல்வெட்டு, -- கொலைக்கு காரணமான துரோகிகள், வீர நாராயண நல்லூர் சதுர்வேதி மங்கலத்து [இன்றுள்ள காட்டு மன்னார் கோவில் அருகில் உள்ள உடையாளூர்] பார்ப்பனர்கள் என்பதும், இவர்களின் சொத்துக்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டதோடு இவர்களின் குடிகளை வெளியேற்றப்பட்டதையும் தெரிவிக்கிறது. இதைத் தவிர, ஆதித்த கரிகாலன் கொலை குறித்து வேறு கல்வெட்டுகளோ, பட்டையங்களோ இதுநாள் வரை கிடைக்கவில்லை.  
       ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடந்துவிட்ட நிலையில், இன்னும் கொலைக்கான காரணம் என்ன என்பது புதிராகவே உள்ளது. ஆதாரங்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
"ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு சோழப்படை, சம்புவராயர் மாளிகை மற்றும் வீர நாராயண நல்லூர் சதுர்வேதி மங்கலத்தில் [தற்போது, காட்டுமன்னார்குடி என்றழைக்கப்படுகிறது] உள்ள சம்புவராயர்களை தாக்கி வெளியேற்றியது. அதனால்தான் சிதம்பரம் வட்டத்திலும், கடலூர் மாவட்டத்திலும் சரி, சம்புவராயர்கள் இல்லை. எங்கள் ஊரில் எங்கள் வகையறாவைத் தவிர" என்று, தொன்றுதொட்டு வழிவழியாக சொல்லப்படுவந்த செய்தியைத் தெரிவித்தார், காட்டுமன்னார்குடி அருகில், சம்புவராயபுத்தூர் என்ற ஊரில் உள்ள முத்தைய சம்புவராயரின், இளவல் இரவி சம்புவராயர்.

கடம்பூர் களப்பயணம்
       காட்டுமன்னார்குடி அருகில் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடம்பூர் [கீழக்கடம்பூர் மற்றும் மேலக்கடம்பூர்], நோக்கி குடும்பத்தோடு புறப்பட்டோம்எய்யலூர் நோக்கி செல்லும் சாலையில், இடதுபுறத்தில் "திருக்கடம்பூர்" என்ற கைக்காட்டிப் பலகை இருந்தது. உள்ளே சென்று வலப்புறம் திரும்பும் தெருவின் எல்லையில் கிழக்கு நோக்கியபடி "மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்" அமைந்துள்ளது. இக்கோயில் தமிழக இந்து அறநிலையத் துறையால் நிருவகிக்கப்படுகிறது. 


கடம்பூர் என்பதற்கான பெயர்க்காரணம் மேலக்கடம்பூரில் உள்ள கோயிலின் தலமரம் - கடம்பமரம் [Anthocephalus Cadamba] என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு புவனகிரி ஆசிரியர்களோடு வந்தபோது கோயில் வளாகத்தில் தலமரமாகிய கடம்பமரம் இல்லாதது குறித்து தெரிவித்தோம், ஆனால், தற்போது [04.05.2017] அங்கு சென்றபோது, கடம்பமரம் எனக்கருதி, மஞ்சக் கடம்பமரம் [Adina cordifolia] வளர்க்கப்பட்டு இருப்பதை பார்த்தேன்.
கோயில் குருக்களும், அவர் உதவியாளரும் வரவேற்றனர். மிகுந்த அக்கறையோடு விபரங்களை தெரிவித்தனர். தேர்வடிவிலான கடம்பூர் கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல், அவரது நாற்பத்திமூன்றாம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றதாக தெரிவித்தார்கள். நான்கு சக்கரங்களுடன் குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தேர் போன்று கோயிலை வடிவமைத்தவரின் திறமை பாராட்டாமல் இருக்க முடியாது. யார் சிந்தனையில் உதித்திருக்கும்? 


நடைபாதையில் கல்வெட்டுகள்
தேர்க்கோயிலைச் சுற்றிவந்தோம். கோயில் வளாகத்தின் நடைபாதையில், அடுத்தடுத்து மூன்று கல்வெட்டுகள் பதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தோம். சுற்றுச் சுவரில் இருந்த கல்வெட்டுகளை இப்படி சிதைத்து நடைபாதையில் புதைத்து புணரமைத்துள்ளார்கள். தமிழ்மாறன் இதனை புகைப்படமெடுத்து பதிவுசெய்தது பாராட்டக்குரியது. "இதுதான் கடம்பூர் மாளிகையா? இதில் என்ன செய்திகள் உள்ளதோ? ஒருவேளை, இந்த கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் கொலைப்பற்றிய செய்திகள் இருக்குமோ?" என்றார் பவானி. கல்வெட்டு செய்திகளை ஆய்வு செய்ய வேண்டும். தனியாக பெயர்த்தெடுத்து பாதுகாக்க வேண்டும்.





       தேர்போன்ற அமைப்பில் சிற்பங்கள் நிறைந்து காணப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு செய்தியை உள்ளடக்கியதாக, மிக நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 








 சமணர்கள் கழுவேற்றப்பட்டதன் குறியீடா ?
தெற்கே அமைந்துள்ள  "இருவர் முன்னிலையில், இருவர் கழுவேற்றப்படுவதாக" உள்ள ஒருசிற்பம் கவனத்தை ஈர்த்தது. கழுவேற்றப்படும் முறையும், நிலையும் வெவ்வேறு விதமான உள்ளன. இது சமணர்கள் கழுவேற்றப்பட்டதன் குறியீடா? ஆய்வு செய்யப்படவேண்டிய சிற்பம். ஐந்தாண்டுகளுக்கு முன்பு புகைப்படம் எடுக்க தவறியதை, இம்முறை தமிழ்மாறனால் நிறைவேற்றப்பட்டது.



  கீழக்கடம்பூரில்தான் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட சம்புவராயர் மாளிகை எங்கு உள்ளது என விசாரித்து விடைபெற்றோம்.

கடம்பூர் சம்புவராயர் மாளிகை
        கீழக்கடம்பூரில் ஒரு குறுகிய தெருவில் உள்ளடங்கிய இடத்தில், சிறிய கோயிலொன்று மேல்கட்டுமானம் இன்றி சிதிலமடைந்த காணப்படுகிறது. "இப்பகுதியில்தான் மாளிகை இருந்திருக்கும். மேலக்கடம்பூர் மற்றும் கீழக்கடம்பூர் இரண்டையும் உள்ளடக்கிய இப்பகுதி முழுவதும், கடைசியாக பிற்கால சோழவாரிசாகிய உடையார்பாளையம் ஜெமீன் வசம் இருந்தது. எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த சிறிய இடம்தான் மீதமுள்ளது" என்றார் பொறுப்பாளர் இராஜேந்திரன். சுற்றி தனியார் தோப்புகளாகவும், வீட்டு மனைகளாகவும் மாறிவிட்ட சம்புவராயர் மாளிகை வளாகத்தில் எஞ்சிய இந்த கோயில் இடத்தை மட்டும் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. 


அடிக்கட்டுமானத்தை மட்டுமே கொண்டுள்ள இந்த கோயிலில் உள்ள சிற்பங்கள் பெரும்பான்மை சிதைந்துள்ளன. சிற்பங்களை தட்டி காண்பித்தார், உலோகத்தில் தட்டினாற்போல் இசையாக ஒலித்தது.  

எங்கள் ஆர்வத்தை உணர்ந்த பொறுப்பாளர் "கருவறையின் வலப்புறம் ஒரு சுரங்க வழி இருந்தது. ஓர் ஆள் நுழையும் அளவு இருக்கும், அதை கோயிலை புணரமைக்கும்போது அடைத்துவிட்டார்கள்." என்று கூறியதோடு உள்ளே அழைத்து சென்று காண்பித்தார்..

இன்னும் தரவுகள் தேவை
கொலை செய்தது பார்பனர்கள்தான் என்பதை கல்கி அவர்கள் மறைத்து எழுதியுள்ளார், நீலகண்ட சாஸ்திரி அவர்கள் பார்பனர்களை காப்பாற்ற திரித்து எழுதியுள்ளார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உள்ளன. சதாசிவப்பண்டாரத்தார் அவர்களும், நடன காசி நாதன் அவர்களும், குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களும், வரலாற்றை ஊடுருவி கருத்துக்களை பதிவு செய்கின்றனர். நமக்கு இன்னும் தரவுகள் தேவை.

வரலாற்றை தொலைத்த தமிழா ! வரலாறு என்பது ஒற்றைப் பிரதியல்ல! தடயங்களைத் தேடுவோம் !
       தமிழ் மன்னர்களின் வரலாறு யாவும் இலங்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகளின் மூலமாகவேதான் அறிய முடிகிறது. இலக்கியங்களில் இடைச்சொருகல், கோயில் கல்வெட்டுகளில் கடவுளர்கதை என வரலாற்றை அழிப்பதற்கான, மறைப்பதற்கான வேலைகளை பார்ப்பனர்கள் செய்துள்ளதை, செய்துவருவதை நாடறியும். பார்ப்பனர்களைப் பொருத்தவரையில், அவர்களுக்கு மண்பற்றோ, நாட்டுப்பற்றோ கிடையாது. அவர்களிடம் உள்ளவை, இனப்பற்று, வேதப்பற்று [மதப்பற்று] மட்டுமே. இதற்கு குந்தகம் ஏற்படுமாயின் எவ்வித துரோகச் செயலுக்கும் உட்படுவதை வரலாற்று திருப்பங்களில் காணமுடியும். ஆனால், வரலாறு என்பது ஒற்றைப் பிரதியல்ல! தடயங்களைத் தேடுவோம் !

கடம்பூர் தலபுராண கதை
தலபுராணம் என்பது கொஞ்சமும் அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதை ஆகும். இப்படி ஒரு கதையை திரிப்பதற்கு காரணம், உண்மை வரலாற்றை மறைப்பதற்கான திட்டம்தான். கோயிலை கட்டியது யார், வடிவமைத்தது யார், சிலை வடித்தது யார், எப்போது கட்டப்பட்டது, கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகின, அளவீடுகள் என்ன, என்பதை எல்லாம் மறைப்பதற்காக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிதான் தலபுராணம்.
       இப்படி சொல்வதால் யாரும் கோபப்பட வேண்டாம். நம் முன்னோர்களின் வரலாறும், திறமையும் அறிய முடியாமல் செய்து விட்டார்களே, அதற்குத்தான் கோபமும், வருத்தமும் கொள்ள வேண்டும். திருக்கடம்பூர் தலப்புராணம் என்பதும் பொருந்தா கதை தானே!
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.
இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான். தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.

துப்பறியும் புத்தி தூங்காது போலும் !
கீழக்கடம்பூரிலிருந்து புறப்பட்டோம். ஒரு நூற்றாண்டில் இல்லாத வறட்சியை தமிழகம் எதிர்கொள்கிறது. வயல்வெளிகள் வரண்டு காணப்பட்டன, எனினும் நீர்வற்றிய தாமரைக் குளத்தில் பசுமை மிச்சமிருந்தது.
சில ஆளுமைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்கள். அதுவும் அவர்களின் இறப்பில் மர்மம் நீடிக்கிறதெனில், வரலாற்றில் மட்டுமல்ல மனித மனங்களிலும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள், சுபாஷ் சந்திரபோஸ், மாவீரன் பிரபாகரன் போன்று........, ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், ஆதித்த கரிகாலன் போல் !