வீராணம் ஏரிக்குள் நடைப்பயிற்சி
வீராணம் ஏரிக்கரையின் நடுவில் அமைந்துள்ள ஊர்தான் கந்தகுமாரன். இங்கிருந்து ஏரியின் பரப்பளவை ஓரளவு முழுமையாகப் பார்க்கலாம். கந்தகுமாரனில் மகிழுந்தை நிறுத்திவிட்டு, நடந்து காட்டுமன்னார்குடியை கடந்து இளஞ்செழியனின் சொந்த ஊராகிய குப்பங்குழி வரை செல்வது என்றுதான் திட்டம். அவர் காலை சிற்றுண்டியை அங்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார்.
வீராணம் ஏரிக் கரையின் நீளம் 16 கி.மீ. நடைப்பயிற்சிக்காக கராத்தே மாணவர்களை பலமுறை அழைத்து வந்திருக்கிறேன். தென்எல்லையிலுள்ள லால்பேட்டையில் மதிய உணவு, அதுவும் லால்பேட்டை பிரியாணி என்பதால் கூட்டத்திற்கு குறைவு இருந்ததில்லை.
கோடைகாலம் தொடங்குகிறது, ஏரியில் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கும் என்றிருந்தேன். ஆனால், ஏரியைப் பார்த்ததும் அனைவருமே அதிர்ந்துபோனோம். ஏரி முழுவதும் வரண்டு வெடிப்போடி கிடந்தது. இது ஓர் அரிதான காட்சி.
"இது ஓர் அரிய வாய்ப்பு, ஏரிக்குள் இறங்கி நடக்கலாம், எதிரிலுள்ள ஊருக்கு சென்று திரும்பலாம். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, மீண்டும் கிடைக்கும் என்று சொல்லவும் முடியாது." என்றேன். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
ஏரிக்குள் இறங்கி நடக்கத் தொடங்கினோம். இந்த ஏரியைப் பற்றிய வரலாற்றைச் சொல்லுங்கள் என்றார் குமார். " வீராணம்
ஏரி கி.பி. 907 முதல் 935 வரை உள்ள காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய இராஜதித்தன், தன் தந்தையாகிய பராந்தக சோழனின் வேறுபெயராகி வீரநாராயணன் பெயரைச்சூட்டினார். வீரநாராயணன் ஏரி என்பதுதான் மருவி வீராணம் ஏரி என்றாகிவிட்டது. வடக்கிலிருந்த இராஷ்டிர மன்னர்கள் சோழமண்டலத்தின் மீது படையெடுத்து வரக்கூடும் என்பதால் சோழமன்னர், பாதுகாப்பிற்காக இப்பகுதியில் படையை நிறுத்தி வைத்திருந்தனர். போர் வரும்வரை படைவீரர்களைப் பயன்படுத்தி இந்ந ஏரியை இராஜதித்தன் வெட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக கடலில் சென்று கலக்கும் நீரை, அணைக்கரையில் தடுத்து வடவாற்றின் வழியாக வீராணம் ஏரியில் சேமிக்கப்படுகிறது. சோழமன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.
மழைக் காலங்களில் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும். ஏரியைப் பார்வையிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், தண்ணீரை சென்னைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டார். இந்த திட்டம் கலைஞர் ஆட்சியில் தொடங்கி, எம்ஜியார் ஆட்சியில் நீண்டு, செயலலிதா ஆட்சியில் நிறைவேறியது. இதற்கு பின்னால் உள்ள அரசியல், ஊழல், பணவிரயம் எல்லாம் கடந்து, முப்போகம் விளைந்த இப்பகுதி ஒரு போகத்திற்கே திணறுகிறது" என்றேன்.
வீராணம் ஏரி கிட்டதட்ட 40 ச.கி.மீ பரப்பளவு உடையது.
இதில் சேமிக்கப்படும் 1.5. டி.எம்.சி தண்ணீரினை நம்பி
45,000 ஏக்கர் நிலமும், மூன்று
இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் வாழ்கின்றனர். வீராணம் ஏரியிலிருந்து 228 கி.மீ தொலைவிலுள்ள சென்னைக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக வீராணம் ஏரியில் 45 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிணறு, கேணி, ஊருணி, குட்டை, குளம், ஏரி, தாங்கல் என்பன நீர்நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.
ஏரியில் ஒரே வகை செடிதான் மிகுதியாக காணப்பட்டது. அது தைவேளை! கரையின் ஓரத்தில் சற்று நெருக்கமாகவும், உள்ளே செல்ல செல்ல பரவலாகவும் காணப்பட்டது. இதன் விதைகள் ஏரிமுழுவதும் சமமாக எப்படி பரவியது? இதன் விதைகள் நீரில் அழுகிடாமல், காய்ச்சலில் கருகிடாமல் எப்படி முளைத்தன? இந்த வரண்ட வெடிப்போடிய தரையிலும் எப்படி பசுமையாக வளர்ந்திருந்தன? சில செடிகளில் பூக்களும் காணப்பட்டன. இவையெல்லாம் ஆய்வுக்குரியன.
கரையை ஒட்டிய பகுதியில் புல்லினம் ஒன்றும்[பெயர் தெரியவில்லை] , செருப்படை, தொரா போன்றவையும் காணப்பட்டன.
வெடிப்பில் ஒழுங்கு முறை காணப்பட்டது.
"இந்த வெடிப்பில் உள்ள ஒருங்கமைவுக்கு காரணம் மண்ணின் தன்மையும் வெப்பமும்தான்
காரணம்" என்றார் குமார். கிளிஞ்சல்களும் நத்தைகளும் நகர்ந்து சென்ற தடங்கள் கோடுகளாக
காணப்பட்டன. இதனை உற்றுநோக்கிய மோகன், "இங்கு உயிர்பிழைப்பதற்காக மிகப் பெரிய
போரட்டம் நடந்துள்ளது, உயிர்பிழைப்பதற்காக நகர்ந்து சென்றுக் கொண்டிருக்கும் போதே,
நீர் வற்றி அந்தந்த இடத்திலேயே அப்படியே இறந்து கிடப்பதை பாருங்கள்" என்றார்.
நான்கூட இதனை கவனிக்கவில்லை. மோகன் ஈடுபட்டிருந்த "இயற்கை நிறுமம்" என்ற
அமைப்பு செயலற்று போனாலும், இவரின் சூழலியல் உணர்வு வற்றவில்லை என்பதை உணர்த்திவிட்டார்.
நீர் வற்ற வற்ற நீர்வாழ் உயிரிகள் உயிர்பிழைப்பதற்கான முயற்சியை மேற்கொள்கின்றன. கோடுகளாக உள்ள அந்த தடங்களின் முடிவில் கிளிஞ்சல்கள் இறந்துகிடந்தன. ஒரு மரணப்போராட்டம் நடந்துள்ளதை உணரமுடிந்தது. ஏரியில் நீரை முழுவதுமாக வடித்தவர்களுக்கு இது பற்றியெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.
இயற்கையை கொஞ்சம் அசைத்தாலும் எதாவது இழப்பு ஏற்படும் என்பது உண்மை.
ஏரியை தூர் வாருவதற்காகத்தான் எல்லா நீரை வடித்துவிட்டார்கள். இக்கரையில் லால்பேட்டை அருகிலும், அக்கரையில் புடையூர் அருகிலும் தூர்வாரும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.
எதிர்கரையில் ஏறி நடந்தோம். இலைகள் குறைவாகி மலர்கள் பூத்துக்குலுங்கிய மரத்தைப் பார்த்து "இது அழிஞ்சில் மரம் தானே" என்றார்
ஜி.எஸ். “நுனா பூ நல்லா வாசனையாய் இருக்கு" என்றார் மோகன். விழுதி செடியில் பூக்களும் காய்களும் நிறைந்திருந்தன. காய்களை மோரில் ஊறவைத்து வற்றல் போடலாம் என்று சொன்னவுடன், கொஞ்சம் பறித்து வைத்துக்கொண்டார் மோகன்.
எல்லோரும் எதிர் கரையை கடந்துவிட்டனர், நானும் குமாரும் ஊர்ந்து சென்று புடையூரில், சென்னை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஏறினோம். மணிவாசகன் விசாரித்தார், கோவிந்தநல்லூரில் கிருஸ்துவ ஆசிரியைகள் விடுதி இருப்பிடத்தை கேட்டறிந்தார். செயின்ட் சேவியர் இல்லத்தில் தங்கியுள்ள ஆசிரியை சூசன் மற்றும் அவரது தோழிகள் அருமையான தேனீர் தந்தனர்.
மேலும் பச்சை நிலக்கடலையை பெரியப்பை ஒன்றில் போட்டுக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நன்றி தெரிவித்தோம்,. பையின் எடையை குறைப்பதற்காகவே நிலக்கடலையை வருந்தி வருந்தி எல்லோரும் கொடுத்தார் பாண்டிதுரை.
மீண்டும் ஏரியை கடக்க வேண்டும், எல்லோருக்கும் மலைப்பாக இருந்தது. "கந்தகுமாரனுக்கு ஏரியை குறுக்காக நடந்தால் நான்கு கி.மீ. இல்லையேல், பேருந்தில் போனால் முப்பது கி.மீ. சுற்றிக்கொண்டு செல்லவேண்டும், அதுவும் இரண்டு பேருந்துகள் பிடிக்கவேண்டும்" என்றார்
ஜி.எஸ்.
வெயில் ஏறிக்கொண்டேயிருந்தது. பசியும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. பேச்சு குறைந்தது, நடையும் தளர்ந்தது ! ஏரிக்குள் குறுக்காக நடக்கலாம் என்ற யோசனையை சொன்ன என்னை, மனதிற்குள் திட்டிக்கொண்டே நடக்கிறார்கள் என்பது புரிந்தது. "பேருந்தை பிடித்திருக்கலாம், பாதிதூரம் வந்து விட்டோமே !" என்றார்
குமார். குமாருக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்டது. தொலைவில் நீர் தெரிந்தது, கடந்து வந்த பாதை என்பதால், அது கானல் நீர் என்பதை புரிந்துக் கொண்டோம். போகப்போக போய்க்கொண்டேயிருந்தது
கரை !
ஒருவழியாய் கந்தகுமாரன் வந்தடைந்தோம். பள்ளி நாட்களில்
கோடைவிடுமுறையில் மீன் வாங்குவதற்காக சேதியூரிலிருந்து இங்கு வந்திருக்கிறேன். லால்பேட்டையில் மீன் வளத்துறையின் அலுவலகமும், மீன் வளர்ப்பிடமும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் பல இலட்சம் மீன்குஞ்சுகள் ஏரியில் விடப்படுவதாகவும், ஏரியில் மீன்பிடித் தொழிலை நம்பி இருநூறு குடும்பங்கள் உள்ளன எனவும் வழிப்போக்கர் ஒருவர் தெரிவித்தார்.
காட்டுமன்னார்குடி, முனியாண்டி விலாஸில் தயார் செய்திருந்த இட்லி கறிகுருமா எடுத்துவரப்பட்டது. கந்தகுமாரன் ஊராட்சி அலுவகத்தின் முன் அமர்ந்து உட்கொண்டோம். சுவையான கறிகுருமா….,முனியாண்டி விலாஸ் தனது பெயரை தக்கவைத்துக் கொண்டது. திரும்பும் வழியில் நெடுஞ்சேரி புத்தூரில் வாரச் சந்தை தொடங்கியது. [03.04.2016]