Tuesday, 27 September 2016

அரிதாக வளரும் தாளிபனை, அழியாமல் காப்போம்


அரிதாக வளரும் தாளிபனை, அழியாமல் காப்போம்

     கொடிப்பள்ளம் சாலையில் உள்ள, #உடையான்மேடு என்ற சிற்றூரில் #தாளிப்பனை [Corypha umbraculifera] பூத்துக்குலுங்குகிறது. இதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனை சாலையில் உள்ள   #சிதம்பரநாதன்பேட்டையிலும் தாளிப்பனை பூத்துக்குலுங்குகிறது. உலகிலேயே பூக்கும் தாவர வகைகளில் மிகப்பெரிய மஞ்சரி பெற்றுள்ள தாவரம் தாளிப்பனையாகும். பனை மரத்தைவிட இரண்டுமடங்கு உயரமாக, வானுயர்ந்து நின்று, அவ்வழியே போவோர் வருவோரை உற்றுநோக்க செய்கின்றன. இதுவும் ஊருக்கு ஒரு பெருமைதானே ! இதனை குடைப்பனை என்றும் அழைக்கின்றனர். தாளிப்பனை ஒரே ஒருமுறைதான் பூக்கும், அதன்பிறகு அழிந்துவிடும். தாளிப்பனையில் மலர்கள் தோன்றுவதற்கு முப்பது ஆண்டிற்கு மேலாகும், சிலவற்றில் எண்பது ஆண்டுகள்கூட ஆகும் என கருதப்படுகிறது. மலர்ந்த பிறகு கனிகள் தோன்றுவதற்கு ஓராண்டாகும். ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றன. அவசியம் இவைகளை சேகரித்து கன்றுகளை உற்பத்தி செய்யவேண்டும். அரிதாக வளரும் தாளிபனை, அழியாமல் காப்போம்


வடரங்கம் கோயில்


''வடரங்கம் கோயில்'' 


         மணல்மேட்டிலிருந்து சிதம்பரம் திரும்புகிறபோது, பாப்பாகுடி வழியாக கொள்ளிடக் கரையிலேயே சுமார் 27 கி.மீ. வந்தால் துளசேந்திரபுரம்[கொள்ளிடம் ஊர்] வந்துவிடலாம் என அறிந்து பயணம் செய்தேன். வரும் வழியில் கொள்ளிடக் கரையில் ''வடரங்கம் கோயில்'' கண்ணைக் கவர்ந்தது.

     சிறிது நாட்களுக்கு பின்பு, தென்னூரிலிருந்து சித்தப்பா பிச்சமுத்து வந்தார். குடும்பத்தின் பூர்வீக தகவல்களை நிரல்பட சொன்னார். தென்னூருக்கும் வக்காரமரிக்கும் ஜந்தாறு தலைமுறையாக இருந்த கொள்வினை-கொடுப்பினை உறவுத் தொடர்பை விவரித்தார். அப்போது சொன்ன தகவல் - ''நூறு வருஷமாவது இருக்கும், அப்போது மிகப்பெரிய வெள்ளம், கொள்ளிடத்தில் தண்ணீர் கரைபிறண்டு ஓடியது. வக்காரமரியில உள்ள நம்ம கோபாலகிருஷணன், கணேசன் இவங்க பூர்வீக குடும்பம் முட்டத்திலிருந்தது. இவங்க கொள்ளுதாத்தாவோ, அவுங்க அப்பாவோ தெரியல, அவர் பேரு ''சேமபடையாட்சி''. இவர் தனது காசு, நகையெல்லாம் வீட்டுல ஒரு அண்டாவுல போட்டு நல்லா மூடி வைத்திருந்தார். வீடு கரையோரமா இருந்ததுல, வெள்ளத்துல எல்லாம் அடிச்சிக்கிட்ட போச்சு, கண்ணு முன்னால அண்டா ஆத்துல அடிச்சிகிட்டு போறத பாத்தும் ஒன்னும் செய்யமுடியல. அப்புறமாதான் தெரிந்தது, அண்டா வடரங்கத்துல கரையொதுங்கியதுன்னு. அத வித்துதான் வடரங்கம் கோயில் கட்டினாங்க.''

Monday, 26 September 2016

"சிறுவள்ளிக்கிழங்கு" [Dioscorea esculenta]



"சிறுவள்ளிக்கிழங்கு" [Dioscorea esculenta]

        கடலூரில் ஆற்றுத்திருவிழா. மஞ்சக்குப்பம் மணிகுண்டு அருகில், முதன்மைக் கல்வி அலுவலம் செல்லும் வழியில் நிறைய கடைகள் போடப்பட்டிருந்தன. இரண்டாண்டிற்கு முன்பு இதே நாளில் நண்பர் சீனுவை [கி.சீனுவாசன், தாவரவியல் ஆசிரியர்] பார்க்க வந்தபோது, அரிதாக விளையும் "சிறுவள்ளிக்கிழங்கு" விற்றதை பற்றி, நண்பர் ஆ.மோகனிடம் தெரிவித்தேன். தற்போது பள்ளி வளாகத்திற்கு எதிரில் நான்கைந்து "சிறுவள்ளிக்கிழங்கு" கடைகள் போடப்பட்டிருந்தன. "சிறுவள்ளிக்கிழங்கு" கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது. அதுவும் ஆற்றுத்திருவிழாவின் போதே கிடைக்கும் என்றார் கடைக்காரர்.  "சிறுவள்ளிக்கிழங்கு" [Dioscorea esculenta] உருளைக்கிழங்கு போல் நீள் உருண்டையாக, வெளிறிய நிறத்தில் உள்ளது. சிறு - வள்ளிக்கிழங்கு என அழைக்கப்பட்டாலும் இனிப்பு குறைவாகவே உள்ளது. இதை வேகவைத்து நேரிடையாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம். நீரிழிவு, முடக்குவாதம், மலச்சிக்கல், வீக்கம், களைப்பு போன்றவற்றை குணமாக்கும் என குறிப்பிடுகிறார்கள்.
       ஒரு கிலோ 40 ரூபாய் என விற்கப்பட்டது. "இன்னும் தள்ளிப்போனல் குறைவான விலைக்கு கிடைக்கும்" என்றனர், அருகில் நின்றோர். எனிலும், ஆளுக்கு இரண்டு கிலோ வாங்கிக்கொண்டோம். "அரிதாக கிடைப்பவைக்கு அதிகவிலை தரலாம்" என்றேன். வாங்குவோர் குறைந்தால் விளைவிப்போர் குறைந்து, அத்தாவரம் அரிதாகி அழியும்நிலைக்கு உள்ளாகிவிடும்.அந்தந்த பருவகாலங்களில் என்னென்ன பழங்கள், காய்கறிகள் கிடைக்கிறதோ அதனை உட்கொள்வதே உடலுக்கு மிகவும் நல்லது. இயற்கையின் ஓர் அங்கமாக உள்ள மனிதன், அந்தந்த பருவகாலங்களுக்கு ஏற்ப இயற்கை வழங்கும் உணவை ஏற்றுக்கொள்வதே பொருத்தமானது. மாம்பழம், பலாபழம், கொய்யாப்பழம், கோவைப்பழம், இலந்தைபழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், நுனாபழம், பனம்பழம், பனங்கிழங்கு, காரைப்பழம், களாபழம், நாவல்பழம், விளாம்பழம், ஈச்சம்பழம், நெல்லிக்காய் ......... என இயற்கை அந்தந்த பருவத்திற்கேற்ப பல காய்கறிகளை பழங்களை வழங்குகிறது. ஆனால் இவற்றை ஒன்றுவிடாமல் முறையாக எடுத்துக்கொண்டோமா ? என்றால் நம்மில் பலர் "இல்லை" என்றே சொல்லுவோம். போகும்வழியில் இவைகளை கண்டாலும் அலட்சியமாகவே கடந்து செல்கிறோம். சென்ற ஆண்டு காரைப்பழம், களாபழம், நுனாபழம், பனம்பழம் சாப்பிடவில்லை ! இந்த ஆண்டு பட்டியலிட்டு கொண்டு ஒவ்வொன்றாய் தேடித்தேடியாவது உண்ணவேண்டும்.

பூந்தாழை [Pandanus amaryllifolius]

பூந்தாழை [Pandanus amaryllifolius]
             தாழை என்றதும், மனதை மயக்கும் தாழம்பூ வாசம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இலையிலிருந்து நறுமணம் தரக்கூடிய பூந்தாழை என்பது தாழை இனத்தைச் சேர்ந்த குறுந்தாவரம். இது வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. தாழையைவிட உயரம் குறைவாகவும்; தாழையிலையைவிட சிறியதாக, முட்கள் இ்ல்லாத இலையைக் கொண்டுள்ளது. இதன் இலையில் முட்கள் இல்லை என்பதால் பூந்தாழை எனப்படுகிறது எனலாம்.

#சங்கஇலக்கியங்களில் .... 
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தாழை, கைதை, கண்டல் எனும் இம்மூன்றும் ஒன்றா ? வெவ்வேறா ?. சில ஆண்டுகளுக்கு முன் தாவரங்களுக்கு தமிழில் இருசொற்பெயரிடுதல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. "கபிலரின் குறிஞ்சிப்பாட்டு, தலைவியும் தோழியும் சேகரித்த நூறு மலர்களில் கைதையும் தாழையும் இருந்தாக குறிப்பிடுகிறது. எனவே கைதையும் தாழையும் வெவ்வேறு தாவரங்கள் என கருதலாம்" என்றார் தாவரத் தகவல் மையத்தலைவர் பஞ்சவர்ணம். இன்றும் மலையாளத்தில் தாழை, கைதை என்றே அழைக்கப்படுகிறது. "கண்டல் என்பது தாழையை குறிப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது பொருத்தமானதாக இல்லை. கண்டல் என்பது [வெண்கண்டல், கருங்கண்டல், அலையாத்தி] Avicennia marina, Avicennia officinalis என்பதையே குறிக்கும் என்றார்" முன்னாள் வனத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம். பேராசிரியர் மேத்தியூ தாழையில் மூன்று சிற்றினங்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளார். ஒரு சிற்றினம் தமிழ்ச் சொல்லையே [கைதை] பயன்படுத்தி Pandanus kaida என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேம்பெல் மற்றும் பிஷ்சர், தாழையில் நான்கு சிற்றினங்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் பூந்தாழை பற்றி எவ்வித குறிப்பும் சங்க இலக்கியங்களில் இல்லை. 

#பூந்தாழை என்ற ஊர் 
நாகை மாவட்டம் சீர்காழி - ஆக்கூர் இடையில் பூந்தாழை என்ற ஊர் உள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், நம்புதாளை என்ற கிராமம் முற்காலத்தில் பூந்தாழை எனப் பெயர் பெற்று விளங்கியது. இவ்விரு ஊர்களிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பூந்தாழையை வளர்ப்பதையும், தாங்கள் செய்யும் பிரியாணி உட்பட அனைத்து அசைவ உணவுகளில் பூந்தாழையை சேர்ப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால்தான் இவ்வூர்கள் பூந்தாழை என பெயர் பெற்றதாக கருதலாம்.

#உணவில் நறுமணமூட்டும் பூந்தாழை
இஸ்லாமியர்கள் தாங்கள் செய்யும் பிரியாணியில் பூந்தாழை இலையை சிறுதுண்டுகளாக்கி போடுவார்கள். இது பாசுமதி அரிசியில் உள்ள வாசனைப் போன்ற நறுமணத்தை உண்டாக்கி உண்ணத்தூண்டும். இதுவே லால்பேட்டை, பரங்கிப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்களால் செய்யப்படும் பிரியாணியின் தனிச்சிறப்புக்கு காரணம். பத்தாண்டுகளுக்கு முன்பு பஷீர் அகமது [வேதியியல் ஆசிரியர், அ.ஆ.மே.நி.பள்ளி, புவனகிரி] அவர்களின் வீட்டிற்கு விருந்துக்காக சென்ற போது, "தங்கள் வீட்டு பிரியாணியின் சுவையின் இரகசியம் பூந்தாழை" என்று சொல்லி கன்றுகளை தந்தார். வீடு மாற்றி குடியேறியபின் மீண்டும் இதனை தேடிக்கொண்டிருந்தேன். சென்றவாரம் பரங்கிப்பேட்டை சென்றபோது, நானும் மோகன் [அமேநி.பள்ளி, கிள்ளை], ஜீவானந்தம் [அஆமேநி.பள்ளி, பரங்கிப்பேட்டை] ஆகியோர் #பரங்கிப்பேட்டை "#மியான் #கடையில்" பிரியாணி சாப்பிட்டோம். நறுமணம்மிக்க பிரியாணியில், பூந்தாழை இலைத்துண்டுகளை கண்டு விசாரித்தேன். பூந்தாழை கன்றுகளை தருவதாக மியான் கடைபாய் தெரிவித்தார். 

இதன் இலைகளை பிரியாணி மட்டுமல்லாமல், மற்ற உணவிலும் சேர்க்கலாம். குறிப்பாக அரிசியோடு சிறு கற்றையாக இதன் இலைகளைப் போட்டு சமைத்தால் பாசமதியின் நறுமணமத்தை தரும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கலாம், அவ்வப்போது பறித்து உணவை மணக்கச் செய்யலாம்.
பூச்செடி விற்பனையகத்தில் "ரம்பா" செடி என்று கேட்டுப்பாருங்கள், சிலருக்கு பூந்தாழை எனில் தெரியவில்லை.. வேறு எங்கு பூந்தாழை கன்றுகள் கிடைக்கும் என விசாரித்த போது, தங்களுடைய #நித்யாநர்சரியில் [சிதம்பரம், புறவழிச்சாலையில், அண்ணாசிலை அருகில்] பூந்தாழை இருப்பதாக நண்பர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

சில்லென்று பூத்த நெருஞ்சி ... !

நெருஞ்சி

       யாருக்கும் நெருஞ்சிமுள் தெரியாமல் இருக்க முடியாது. "உங்களை நெருஞ்சிமுள் தைத்திருக்கா?" என்று கேட்டுப்பாருங்கள். ஆம் என்றால், அவரது கிராமத்து வாழ்கையின் அடையாளத்தை உணர்ந்துக் கொள்ளலாம். நெருஞ்சித் தாவரம், எல்லா வெப்பமண்டல நாடுகளி லும் பரவி காணப்படுகிறது. இது வறண்ட நிலத்திலும், வளமற்ற மண்ணிலும் வளரும் தன்மையுடையது.


சில்லென்று பூத்த நெருஞ்சி
       சங்ககாலம் முதற்கொண்டே நெருஞ்சி தாவரம் தமிழர்களின் வாழிடத்தோடும், வாழ்வியலோடும் இணைந்தே உள்ளது. நெருஞ்சித் தாவரம் வளம் குறைந்த நிலத்தில், தரையோடு படர்ந்து வளர்பவை. சங்கப் புலவர்கள், வளம் குறைந்த நிலத்தைப் புன்புலம், பாழ்மனை, பாழ்நிலம் எனக் குறிப்பிடுகின்றனர். எங்கேனும் நெருஞ்சி அடர்ந்து வளர்ந்து, அதில் பொன்னிற மஞ்சள் மலர்களை கண்டால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அதனால்தான், கவிஞர் கண்ணதாசன், "மாலையிட்ட மங்கை" திரைப்படத்திற்கு "சில்லென்று பூத்த, சிறுநெருஞ்சிக் காட்டினிலே" என்று பாடல் எழுதினாரோ! இவ்வளவு அழகான மலரிலிருந்து தோன்றும் காய் முட்களை உடையதாக உள்ளது. இதனை கண்ணுற்ற சங்கப் புலவர் அள்ளூர் நன்முல்லையார், "இனியவை செய்த தலைவன் இன்னா செய்வதாக மாறியது, நெருஞ்சியின் கண்ணுக்கினிய புதுமலர், முள்ளாக மாறியதைப்போன்று" என உவமையாக கூறுகிறார். [குறு.202]. 

ஞாயிறு திசைநோக்கி. . . .
        நெருஞ்சிப்பூவுக்கு உள்ள இன்னுமொரு சிறப்பும் உண்டு! நெருஞ்சிப்பூ, சூரியன் செல்லும் திசைநோக்கி திரும்பும் பண்புடையது. இதனையறிந்த சங்கப் புலவர்கள் தங்கள் பாடல்களில் இச்செய்தியை உவமையாக பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர் மதுரை வேள்ஆதத்தனார், "தலைவன் ஞாயிறு போன்றவன், அவன் திசைநோக்கி திரும்பும் தலைவியின் பணைத்தோள் - நெருஞ்சிமலர் போல்வன!" என்று உவமையாக்கியுள்ளார் [குறு.315].  அதே போல், "சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, என்னொடு திரியச் செய்வேன் " என்று தலைவன் குறித்து தலைவிக் கூறுவதற்கு நெருஞ்சிப்பூவை உவமையாக்கியுள்ளார் சங்கப் புலவர் பாவைக் கொட்டிலார் [அக.336]. மேலும் சங்கப் புலவர் மோசிகீரனார், "நெருஞ்சியின் பொன்நிறப்பூ கதிரவனை நோக்கி மலர்வது போல், வறுமையுற்றோரது பாத்திரம், கொங்கானத்து கிழாரை நோக்கின" என உவமைபடுத்தியுள்ளார் [புற.155].

நெருஞ்சி முள்ளா ? நெருஞ்சிப் பழமா?
       சதைப்பற்று உள்ளதைத் தான் "பழம்" என்று சொல்வது வழக்கம்! ஆனால், நெருஞ்சிமுள் ளை, "நெருஞ்சிப்பழம்" என்று சுவைப்பட சொல்கிறார் திருவள்ளுவர்.

            அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
            அடிக்கு நெருஞ்சிப் பழம்

இது தாவரவியல் அடிப்படையில் மிகச்சரியானதே! நாம் நெருஞ்சிமுள் என்றழைப்பது, உண்மையில் பழம் தானே [FRUIT].

       ஒத்தையடிப் பாதையிலோ, திறந்தவெளியிலோ நடந்து செல்லும் போது காலில் நெருஞ்சிமுள் தைப்பது, கிராமப் பகுதிகளில் மிக பொதுவான நிகழ்வு.  இப்படித்தான் முதிய தமிழ்ப்புலவர் ஒருவரை நெருஞ்சிமுள் தைத்துவிட்டது. பாம்புக்கடி மருத்துவரிடம் சென்று, விடுகதைபோல் தனது புலமையை வெளிப்படுத்தி,

"முக்காலை கையில் எடுத்து,
மூவிரண்டு போகையிலே,
இக்காலில் ஐந்துதலை நாகம்,
அழுந்த கடித்தது....! " - என்றார் புலவர்.

பாம்புக்கடி மருத்துவர் தமிழ்ப்புலவரைக் காட்டிலும் புலமைப் பெற்றவர். அவரும்

"பத்து ரதன் புத்திரனின்,
மித்துருவின் சத்துருவின்,
பத்தினியின் கால் வாங்கி,
தேய்...!" என்று உடனடியாக மருத்துவம் சொன்னார். 

      தசரதனின் புத்திரன் இராமனின் நண்பன் சுக்ரீவனின் எதிரி வாலியின் பத்தினி தாரையின் காலை வாங்கி, அதாவது, தரையில் தேய்த்துவிட்டு செல்! என்று கூறியுள்ளார். நெருஞ்சிமுள் காலில் தைத்துவிட்டால், அதனை தரையில் மேலாக தேய்த்துவிட்டு செல்வது வழக்கம்.

மருத்துவத்தில் …..  
       நெருஞ்சி தாவரத்திற்கு சித்த மருத்துவத்தில், திரிகண்டம், திரிதண்டம், காமரசி, கோண்டம், சுதம், கிட்டிரம், கோகண்டம் என வேறு பெயர்கள் உண்டு. நெருஞ்சி, குறிப்பாக குளிச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, உள்ளழலாற்றி, உரமாக்கி, ஆண்மைப்பெருக்கி, துவர்ப்பி   என பல மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளது. சொட்டுநீர், சுரவெதும்பல், கல்லடைப்பு, நீரடைப்பு, முடவாய்வு, வெள்ளை, சிறுநீர் எரிச்சல், முக்குற்றம், நீர்வேட்கை, வெப்பம், ஆகிய நோய்கள் குணமாகும் என அகத்தியர் பாடல்கள் தெரிவிக்கின்றன. [குணபாடம், பதார்த்தகுண சிந்தாமணி]. 

நல்ல நெருஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை
வல்ல சிரமனலை மாற்றுங்காண் - மெல்லியளே
மானிலத்தில் கல்லடைப்பும், வாங்காத நீர்கட்டுங்
கூனுறு மெய்வாதமும் போக்கும்.

மேகவெட்டை நீர்ச்சுறுக்கு வீறுதிரி  தோஷம்புண்
வேகாசுர தாகவெப்பை விட்டொழியும் - போகந்
தருந்சின் மதலைமொழித் தையலே - நல்ல
நெருஞ்சிதனை நினை.

சொல்லவொண்ணா நீர்கட்டு துன்பமாமிச மருகல்
கல்லடைப் பெனும் பிணிகள் கண்டாக்கால் - வல்லக்
கருஞ்சின வேற் கண்மாதே காசினிக்குள் நல்ல
நெருஞ்சிநறும் வித்தை நினை.

         ஆண்தன்மையை அதிகரிக்கும் பண்பை, குறிப்பாக அதற்கு காரணமான ஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் [இயக்குநீர்] அளவை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பண்பு நெருஞ்சித் தாவரத்திற்கு உள்ளதாக கருதப்படுகிறது. உடல் வலுவேற்றுவதற்காக, குறிப்பாக விளையாட்டு வீரர்கள், நெருஞ்சித் தாவரத்தைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.