Tuesday, 24 September 2019



வயல் நத்தை கறி - மூலத்திற்கு நல்லது
Pila globosa [apple snail] 

               காடவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா. 11.09.2019 அன்ற காலை குறிப்பிட்டபடி சிதம்பரத்திலிருந்து ஆங்காங்கே காத்திருந்தவர்களை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு சேந்தன்மங்கலம் கிளம்பினார் மணிவாசகன். நண்பர்கள் மோகன், சீமான், உட்பட நானும் உடன் பயணமானோம்.  

         வழியில் வடலூர் இரயிலவேகேட் அருகில் இரண்டு மூதாட்டிகள் ஏதோ விற்பனை செய்துக்கொண்டிருந்தனர். பச்சை முந்திரியாக இருக்குமோ, என்று எண்ணி வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சொன்றோம்........அது வயல் நத்தை. விசாரித்தோம், லால்பேட்டை அருகில் உள்ள வெற்றிலை கொடிகால் வாய்க்காலில் இருந்து சேகரித்துக் கொண்டுவந்ததாக தெரிவித்தனர். அரிதாக கிடைப்பதை வாங்கிவிடுவது என முடிவு செய்தோம். "ஒருநாள் முழுவதும் தண்ணீரில் போட்டுவைத்தால், மண்ணை கக்கிவிடும், பிறகு வேகவைத்து ஓட்டை பிளந்து கறியை எடுத்து சமைக்க வேண்டும், மூலத்திற்கு நல்லது" என்று சமையல் குறிப்பை கூறினார் அந்த மூதாட்டி. ஆனால், மூலநோய் உள்ளவர், சுத்தம் செய்யும் வேலையை எண்ணி வேண்டாமென ஒதுங்கிகொண்டார். இதனை சுத்தம் செய்து சமைப்பது கொஞ்சம் சிரமம்தான் போலிருக்கு....யாரையாவது தேடவேண்டும். இருநூறு ரூபாய்க்கு இரண்டு பைகளில் வாங்கினோம், ஒன்று மணிவாசகத்திற்கு, ஒன்று எனக்கு. 

வீட்டிற்கு வந்ததும், மூன்றுமுறை அலசி கழுவிவிட்டு  ஒருவாளியில் போட்டு கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மூடிவைத்து விட்டேன். 

இதைப் பற்றி விபரம் தேட ஆரம்பித்தேன். இருக்கவே இருக்கு,  Google.......தேடினேன் இது Pila globosa [apple snail] போலிருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.இரா.திருமாவளவன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டபோது, "ஆமாம்" என உறுதி செய்தார். 

இரண்டுநாள் கழித்து, நண்பர் அன்பானந்தம் [தலைமையாசிரியர்-ஓய்வு] தற்செயலாக வீட்டிற்கு வந்தார். தனக்கு இதனை சமைக்க தெரியுமென்றார். வீட்டில் உள்ளோர் ஒதுங்கி கொண்டனர், சமைக்க தொடங்கினோம். நான்கைந்து முறை நன்றாக கழுவி, இட்லி பானையில் போட்டு, தண்ணீர் ஊற்றி வேக வைத்தோம். ஆறியவுடன் இடுக்கியால் வாய்ப்பகுதியை திறந்து கறியை வெளியே எடுத்தார். 




கறியை சுத்தம் செய்து நறுக்கி, வெங்காயம், தக்காளி, மசாலா சேர்த்து சமைத்து தந்தார் அன்பானந்தம்.... அருமையாக இருந்தது.        

சமூகவியல் ஆய்வாளர் முனைவர் கனக.மனோகரன் அவர்கள், சித்த மருத்துவ குறிப்பை செயலி வழியே அனுப்பினார். "நத்தை வேகவைத்து ஓடுநீக்கி   பக்குவப்படுத்தி பாகப்படி [சமைத்து] உண்ண முளையொடு மூலம் அறும், தாதுவிருத்தி, சுக்கிலம் பெருக்கும், தினம் உண்டால் அஜீரண கோளாறு  உண்டாகும்...தேடரிய தாதுவிருத்தியாம்"   

இராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதியில் இதனை சமைத்து உண்கின்றனர், இது உடல் நலிவை போக்கும் என கருதுகின்றன். இதில் புரதம் உட்பட நமக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உணவகங்களில் கிடைப்பதில்லை. பாண்டிச்சேரியில் மதுபான உணவகங்களில் கிடைக்கிறது, அனேகமாக இது கழிமுகத்தில் கிடைக்கும் வேறு சிற்றினமாக இருக்கலாம்.   
விளிம்புநிலை ஏழைகளின் உணவு, சேகரிப்பதிலும் சுத்தம் செய்வதிலும் உள்ள சிரமம் ஆகியவை இதை உணவாக கொள்ளும் பழக்கம் வழக்கொழிந்து வருவதற்கும், சிலர்  புறக்கணிப்பதற்கும் காரணங்கள் என கருதுகிறேன்.
  

காடவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா
காடவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா – 11.08.09.2019 அன்ற காலை குறிப்பிட்டபடி ஆங்காங்கே காத்திருந்தவர்களை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு சேந்தன்மங்கலம் கிளம்பினார் மணிவாசகன். நண்பர்கள் மோகன், சீமான், உட்பட நானும், நேரிடையான அழைப்பு இல்லையென்றாலும் மணிவாசகன் சொல்லுக்கு உடன்பட்டு பயணமானோம்.  

சேந்தன் மங்கலம் கோட்டை
            தமிழகத்தை ஆண்ட அரசர்கள் தங்கள் வாழிடமாக கோயிலையே கொண்டிருந்தனர். [கோ - அரசன்; இல் - வீடு, வாழிடம்]. கோயிலையே தங்களின் பாதுகாப்பான கோட்டையாகவும், மக்களுக்கு வழிபாட்டுக்குரிய இடமாகவும்  அமைத்துக் கொண்டனர்
  


            விழுப்புரத்திற்கும் பண்ருட்டிக்கும் இடையில் கெடிலம் ஆற்றின் தென்கரையில் சேந்தன் மங்கலம் கோட்டை அமைந்துள்ளதுகோயிலுக்குள் நுழைந்தோம் நுழைவாயிலுக்கு அருகில் திறந்தவெளியில் கல்வெட்டு  ஒன்றிருந்ததுஅதனை இருவர் பார்த்து படியெடுத்துக் கொண்டிருந்தனர்அறிமுகம் செய்துக்கொண்டோம்இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் [திரு.சி.வீரராகவன் மற்றும் கவிஞர் கூ.பிச்சைப்பிள்ளை] வரலாற்று ஆய்வாளர்களாகி கோயில்களை வரலாற்று பார்வையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இருவரும் தாங்கள் எழுதிய . ["ஏமப்பூர் வேதபுரீஸ்வரர் கோயில்" - திரு.சி.வீரராகவன் / "கடலூர் மாவட்ட கோயில்கள்" - கவிஞர் கூ.பிச்சைப்பிள்ளைநூலை வழங்கினர்கல்வெட்டு மழையிலும் வெய்யலிலும் கிடந்து சிதிலமடைகிறதுஎனவே எடுத்து உள்ளே வைக்கச் சொன்னோம்......




சுமார்  200 X 300 மீட்டர் நீளம்  அகலமுடைய  பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தில், ஆபத்து காத்தருளிய நயனார் [ஆபத்சகாயீஸ்வரர்] கோயில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக அமைந்துள்ள ஆலயத்தின் நுழைவாயில் தென்புறம் கற்கிணறு ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒற்றைக் கல்லிலான கற்தொட்டியும் உள்ளது.   




           கோயிலின் மதிற்சுவர் உட்பட மண்டப அமைப்புகள் சிதிலமடைந்து காணப்படுகிறன. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் சில இடங்களில் நடைபெற்றுயிருந்தன. எனினும் பல ஆண்டுகளாக அதே நிலையிலேயே உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.




            சுற்றுபட்டு கிராமங்களிலருந்து மக்கள் கோயிலை நோக்கி திரண்டனர், ஊர் வாரியாக தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களும் மஞ்சள், சிகப்பு, பச்சை புடவையணிந்து மேளதாளத்தோடு பால்குடமேந்தி படையலுக்காக வந்தவண்ணமிருந்தனர்.




                        தமிழர்களின் தொல்லியல் மற்றும் வரலாற்று கட்டமைப்புகளை மைய அரசும், மாநில அரசும் புறக்கணித்தே வருகின்றன. சுதந்திரம் பெற்று 73- ஆண்டுகளாயினும் தொல்லியல் மற்றும் வரலாற்று கட்டமைப்புகளை கண்டறிதல், புணரமைத்தல், பராமரித்தல் பணிகளில் பாதியளவிற்குக்கூட முடிக்கப்படவில்லை என்பது கேவலம், வரலாற்ற அழிக்கும் அரசியல் உள்நோக்கம் உடையது.   

வரலாறு
            தமிழகத்தில் கி.பி. 3 -ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் ஆட்சி நடத்தினார்கள். பல்லவ பேரரசின் கடைசி மன்னன் அபராஜித வர்மனை முதலாம் ஆதித்த சோழன் [871-907] தேற்கடித்ததால் பல்லவ பேரரசு முடிவுற்றது. பல்லவர்கள், சம்புவராயர்கள் காடவராயர்கள் என இரண்டு பிரிவுகளாக இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் சோழர்களின் மேலாதிக்கத்தின்கீழ் சிற்றரசர்களாக இருந்து சம்புவராயர்கள் திருவண்ணாமலையைத் தலைநகராக கொண்டும், காடவராயர்கள் சேந்தன்மங்கலத்தை தலைநகராகவும் கொண்டும் சிறுபகுதிகளை ஆட்சிபுரிந்தனர். சோழர்களின் அரசியலிலும் துணைபுரிந்தனர்.
            சோழ மன்னன் ஆதித்த கரிகாலன் [957-969], வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனை வென்று பாண்டிய நாட்டிலும் சோழர்களின் ஆதிக்கத்தை நிறுவினார். ஆனால் வீரம் பொருந்திய ஆதித்த கரிகாலன் சோழமண்டலத்தில் உடையார்குடி அருகில் கடம்பூரில் சம்புவராயர் மாளிகை இருந்தபோது கொலை செய்யப்பட்டார்.

            தமிழ்மரபு மன்னர்களான இராஜராஜ சோழன் [985-1014], இராசேந்திர சோழன்[1012–1044], இராசேந்திர சோழனின் வழித்தோன்றல்கள் [1054–1070] காலத்தில் விரிந்து பரந்திருந்த சோழப் பேரரசுநேரிடை வாரிசு இன்றி சாளுக்கிய சோழர்கள் தமிழகத்தை ஆளத்தொடங்கினர். இவர்களுக்குப் பிறகு சோழப் பேரரசு மெல்ல சரிவைக் காண தொடங்கிற்று.

காடவராயர்கள் ஆட்சி

            காடவ மன்னன் மணவாளப்பெருமான் கி.பி 1195-ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தார் என்று அவரது 5-ம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவருக்குப் பின் இவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயர் ஆட்சிக்கு வந்தார்.


கோப்பெருஞ்சிங்கன் ஆட்சி

            கோப்பெருஞ்சிங்கன் கி.பி 1229 முதல் 1278 வரை சேந்தன்மங்கலத்தை தலைநகராக கொண்டு காஞ்சிபுரத்திலிருந்து காவிரிக்கரை வரை ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சிக்குட்ட பகுதி, தொண்டைமண்டலத்தில் திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது.  கோப்பெருஞ்சிங்கன் கன்னட ஹொய்சாளா மன்னர்களுடன் தொடர்ந்து போரட்டு வந்துள்ளார்.
            தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் இவரது கல்வெட்டுகள் மிகுதியாக கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் இடர்க்கரம்பை  ஊரிலுள்ள கல்வெட்டுகளும் இவரைப் பற்றி குறிப்பிடுகின்றன. கோப்பெருஞ்சிங்கன் சிறந்த புலவனாகவும் விளங்கினார். வாயலூர்ச் சாசனப் பாடல்கள் இவரால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இதில் சோழனைச் சிறையிலிட்ட செய்திகள் உள்ளன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 'சீயன்' என்பது 'சிம்மவர்மன்' என்னும் பல்லவர் பெயர் வழியில் வந்த பெயர்.
சோழனைச் சிறையிலிட்ட செய்தி
மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் [1216–1256] குறு நில மன்னனாக விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் வீரமும் சூழ்ச்சியும் மிக்கவன். பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் கி.பி 1231-ல் நடந்த யுத்தத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 3-ம் ராஜராஜனை வென்று முடிகொண்ட சோழபுர்த்தில் வெற்றிவிழா கொண்டாடினான். தோல்வியுற்ற 3-ம் ராஜராஜசோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231-ல் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து 3-ம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான்.
இது சோழ மன்னர்கள் மீதுள்ள பகையாகவே இதனை கருதலாம்.
            மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும், கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான். இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மூலம் அறியலாம். மீண்டும் ராஜராஜனின் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான். மீண்டும் கி.பி 1253-ல் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான். கி.பி 1255-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டான். இதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.

            கி.பி.1279-ல் மாறவர்மன் குலசேகர பாண்டியன்  சோழநாடு, திருமுனைப்பாடி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது. மூன்றாம் ராஜராஜனுக்குப் பிறகு மூன்றாம் இராசேந்திர சோழனோடு [1246–1279] சோழர்களின் ஆட்சியும் முடிவுற்றது.

விழாவும் அரசியல் பின்புலமும்

வடதமிழ்நாடு முன்னேற்ற முன்னனி என்ற அமைப்பினர் புதிதாக ஓர் அரசியல் திட்டத்தை முன்மொழிகின்றனர். தமிழகத்தின் வடபகுதியும் தென்பகுதியும் தொன்றுதொட்டு அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு கூறுகளில் வேறுபட்டும், தனித்தன்மையோடும் இருந்துவருகிறது. மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு  வடதமிழ்நாடு சமூக, பொருளாதார வளர்ச்சியில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் தமிழ்நாட்டை இரண்டாக -  வடதமிழ்நாடு மற்றும் தென்தமிழ்நாடு என பிரித்து தனித்தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற அரசியலை முன்னெடுக்கின்றனர்.








வடதமிழ்நாடு முன்னேற்ற முன்னனி அமைப்பினர், பல்லவர்கள் சோழர்கள் மற்றும்  பிற்கால சோழர்களின் வரலாற்று கட்டமைப்புகளை, தேடி கண்டறிந்து, புத்துயிர் ஊட்டும் வகையில் ஆண்டுதோறும் கட்சிசாரா கோயிற்விழாவாகவும் சடங்காகவும் கொண்டாட முன்னெட்டுப்பு வேலையை செய்கின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், படையல் செய்தல் என தொடங்கி வைத்துவிட்டால் மக்களை ஒருங்கிணைத்து வரலாற்றை மீட்டெடுத்தலுக்கு உதவும் என கருதுகின்றனர். வரலாற்றில் அரசியல் உள்ளது, ஆனால் வரலாற்றை வைத்த அரசியல் செய்தல் ஏற்புடையதல்ல..... இதுபோன்ற உட்பிரிவு அரசியல் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ........

இந்திய தொல்லியல் துறைக்கான அலுவலகம் ஏதும் அங்கில்லை, காவலர் ஒருவர் மட்டுமே பணியிலிருந்தார். வரலாற்று சிறப்புள்ள இடம், சுதந்திரம் பெற்று 73- ஆண்டுகளாயினும் ஓரளவிற்குகூட சீரமைக்கப்படவில்லை. தமிழக அரசும் இதனை புறக்கணித்து வருகிறது. சேந்தன் மங்கலம் கோயிலுக்கென்று 40-ஏக்கர் நிலம் உள்ளது, அனைத்தையும் கோயிற் பார்ப்பனர் ஒருவரே அனுபவித்து வருகிறார் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.