Tuesday, 24 September 2019



வயல் நத்தை கறி - மூலத்திற்கு நல்லது
Pila globosa [apple snail] 

               காடவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா. 11.09.2019 அன்ற காலை குறிப்பிட்டபடி சிதம்பரத்திலிருந்து ஆங்காங்கே காத்திருந்தவர்களை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு சேந்தன்மங்கலம் கிளம்பினார் மணிவாசகன். நண்பர்கள் மோகன், சீமான், உட்பட நானும் உடன் பயணமானோம்.  

         வழியில் வடலூர் இரயிலவேகேட் அருகில் இரண்டு மூதாட்டிகள் ஏதோ விற்பனை செய்துக்கொண்டிருந்தனர். பச்சை முந்திரியாக இருக்குமோ, என்று எண்ணி வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சொன்றோம்........அது வயல் நத்தை. விசாரித்தோம், லால்பேட்டை அருகில் உள்ள வெற்றிலை கொடிகால் வாய்க்காலில் இருந்து சேகரித்துக் கொண்டுவந்ததாக தெரிவித்தனர். அரிதாக கிடைப்பதை வாங்கிவிடுவது என முடிவு செய்தோம். "ஒருநாள் முழுவதும் தண்ணீரில் போட்டுவைத்தால், மண்ணை கக்கிவிடும், பிறகு வேகவைத்து ஓட்டை பிளந்து கறியை எடுத்து சமைக்க வேண்டும், மூலத்திற்கு நல்லது" என்று சமையல் குறிப்பை கூறினார் அந்த மூதாட்டி. ஆனால், மூலநோய் உள்ளவர், சுத்தம் செய்யும் வேலையை எண்ணி வேண்டாமென ஒதுங்கிகொண்டார். இதனை சுத்தம் செய்து சமைப்பது கொஞ்சம் சிரமம்தான் போலிருக்கு....யாரையாவது தேடவேண்டும். இருநூறு ரூபாய்க்கு இரண்டு பைகளில் வாங்கினோம், ஒன்று மணிவாசகத்திற்கு, ஒன்று எனக்கு. 

வீட்டிற்கு வந்ததும், மூன்றுமுறை அலசி கழுவிவிட்டு  ஒருவாளியில் போட்டு கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மூடிவைத்து விட்டேன். 

இதைப் பற்றி விபரம் தேட ஆரம்பித்தேன். இருக்கவே இருக்கு,  Google.......தேடினேன் இது Pila globosa [apple snail] போலிருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.இரா.திருமாவளவன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டபோது, "ஆமாம்" என உறுதி செய்தார். 

இரண்டுநாள் கழித்து, நண்பர் அன்பானந்தம் [தலைமையாசிரியர்-ஓய்வு] தற்செயலாக வீட்டிற்கு வந்தார். தனக்கு இதனை சமைக்க தெரியுமென்றார். வீட்டில் உள்ளோர் ஒதுங்கி கொண்டனர், சமைக்க தொடங்கினோம். நான்கைந்து முறை நன்றாக கழுவி, இட்லி பானையில் போட்டு, தண்ணீர் ஊற்றி வேக வைத்தோம். ஆறியவுடன் இடுக்கியால் வாய்ப்பகுதியை திறந்து கறியை வெளியே எடுத்தார். 




கறியை சுத்தம் செய்து நறுக்கி, வெங்காயம், தக்காளி, மசாலா சேர்த்து சமைத்து தந்தார் அன்பானந்தம்.... அருமையாக இருந்தது.        

சமூகவியல் ஆய்வாளர் முனைவர் கனக.மனோகரன் அவர்கள், சித்த மருத்துவ குறிப்பை செயலி வழியே அனுப்பினார். "நத்தை வேகவைத்து ஓடுநீக்கி   பக்குவப்படுத்தி பாகப்படி [சமைத்து] உண்ண முளையொடு மூலம் அறும், தாதுவிருத்தி, சுக்கிலம் பெருக்கும், தினம் உண்டால் அஜீரண கோளாறு  உண்டாகும்...தேடரிய தாதுவிருத்தியாம்"   

இராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதியில் இதனை சமைத்து உண்கின்றனர், இது உடல் நலிவை போக்கும் என கருதுகின்றன். இதில் புரதம் உட்பட நமக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உணவகங்களில் கிடைப்பதில்லை. பாண்டிச்சேரியில் மதுபான உணவகங்களில் கிடைக்கிறது, அனேகமாக இது கழிமுகத்தில் கிடைக்கும் வேறு சிற்றினமாக இருக்கலாம்.   
விளிம்புநிலை ஏழைகளின் உணவு, சேகரிப்பதிலும் சுத்தம் செய்வதிலும் உள்ள சிரமம் ஆகியவை இதை உணவாக கொள்ளும் பழக்கம் வழக்கொழிந்து வருவதற்கும், சிலர்  புறக்கணிப்பதற்கும் காரணங்கள் என கருதுகிறேன்.
  

1 comment:

  1. மிக்க நன்றி அய்யா.............நத்தையின் ஓடுதான் அதன் வீடுபோல அதை பாதுகாக்கிறது..... அப்படியெனில், உலகிலேயே வளரும் வீடு அல்லது அறை இதுவாகத்தானே இருக்கும். அதனால்தான் நந்து +அறை = நந்தறை= நத்தறை =நத்தை என மிக பொறுத்தமாக பெயர் வைத்துள்ளான் ஆதித்தமிழன்......

    ReplyDelete