"தொழிற்திமிர்"
"தொழிற்திமிர்", வேறு எப்படி சொல்ல முடியும், இப்படி தான் சொல்ல முடிகிறது. பயணத்தின் நடுவில் எப்போதெல்லாம் மகிழுந்தில் கோளாறு ஏற்படுகிறதோ
அப்போதெல்லாம், "தொழிற்திமிர்" கொண்ட ஒருவரை சந்தித்தது நினைவுக்கு வரும்.
ஒரு தொழிலில் ஈடுபடும் ஒவ்வோருவரும், அந்த தொழில் குறித்த அனைத்தும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம்..... ஆனால் அதே சமயம், தன் தொழிலில் தாந்தான் "பெரிய ஆள்" என்கிற அதீத தன்னம்பிக்கையின் வெளிப்பாட்டை "தொழிற்திமிர்", என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது, வேறு எப்படி சொல்ல முடியும் !
முதுகலை ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் [2009] மேட்டூரில், அதனால் முதல் நாளே மாநிலத் தலைவர் மணிவாசன், மோகன் சீனு பாண்டி ஜியெஸ் என எங்களை எல்லாம் "அள்ளிப் போட்டுக்" கொண்டு சிதம்பரத்திலிருந்து புறப்பட்டார். பின்னே, அரை மனதோடு இருந்த எங்களை அன்பினால் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போனால், இப்படிதான் சொல்ல வேண்டியுள்ளது.
ஏழுபேர் அமரக்கூடிய பெரிய மகிழுந்து, அவரே ஓட்டினார். பொதுவாகவே வேகமாகத்தான் ஓட்டுவார், யாராவது "கொஞ்சம் வேகத்தை குறையுங்கள்" என்று சொல்லிவிட்டால் .... அவ்வளவு தான்....ஆவேசமாகிவிடுவார், அப்புறம் அதிவேகம் தான். எல்லா சாகஸங்களையும் செய்வார். உள்ளே இருக்கும் எங்களுகெல்லாம் கதி கலங்கும். பழைய வேகமே பரவாயில்லை, பாதுகாப்பனது என தோன்றும்படி செய்வார். இப்போதெல்லாம் அவரோடு பயணம் போனால் வேகத்தைப் பற்றி பேசக்கூடாது என கூடி முடிவுகட்டி கொண்டுதான் போவது. அதுவும், ஓட்டும்போது அவரே தடுமாறினாலும் அதைப்பற்றி நாங்கள் யாரும் பேசுவதில்லை. யாராவது ஏதாவது சொல்லப்போக,
ஆவேசமாகி அதிவேகமாக ஓட்டினால் எல்லோரும் அதோகதி தான். என்ன செய்வது, உயிரை ஒப்படைத்துவிட்டோம்......
வடலூர் சபையைக் கடந்தபோதே வண்டி கொஞ்சம் திணறியது போல் உணர்ந்தோம்... நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். வாயைப் பொத்தி கையை எடுத்தார் சீனு...சைகையைப் புரிந்துக் கொண்டு, வேறு வேறு செய்திகளை பேசிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. விருதாசலத்திற்கு வெளியே புறவழிச்சாலையை கடந்தபின்பு ஒரு சாலையோர சிற்றுண்டி கடை அருகில் வண்டியை
நிறுத்தினார். மணிவாசனோடு பயணம் போனால் இப்படிதான், சாலையோர கடையில்தான் உணவு. எளிய உணவு என்பதற்காக மட்டுமல்ல, அவர்களுக்கும் வருமானாக இருக்கட்டுமே என்ற கரிசனமும் கூட. முன்பே தெரிந்த கடைபோல அங்கே அழைத்துப் போனார். சொல்லி வைத்ததுபோல் சிற்றுண்டி நன்றாகவே இருந்தது.
சிற்றுண்டிக்குபின் தண்ணீரை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். மணிவாசன் வண்டியை முடுக்கினார், அதிகமாகவே திணறியது, ஆனால் கிளம்பிவிட்டது. இதற்கு மேலும் வாயைப் பொத்தி இருக்க முடியாமல் "என்ன ஆச்சி" என்றேன். "ஒன்றுமில்லை, நேற்று தான் என் மெக்கானிக் பழுதுபார்த்து கொண்டுவந்து விட்டான் ". "மேட்டூர் போய் வரலாம்,
பிரச்சனை வராது, எதாவது கோளாறு என்றால் எனக்கு பேசுங்கள்" என்று மெக்கானிக் சொல்லியிருக்கிறான் என்றார் மணி. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எது எப்படியோ வேகத்தை பற்றி மட்டும் பேசக்கூடாது என்பதுதான் மௌன உரையாடல் தீர்மானம். அவருக்கு, காலதாமதம் ஆகிவிட்டது என தோன்றியிருக்கலாம், வண்டி சீறிபாய்ந்தது.......
வேப்பூர் கூட்டுசாலை வரை, இடையில் ஊர்கள் ஏதுமில்லாத காட்டுவழி. போக்குவரத்து குறைவான, ஆள் அரவமில்லாத நெடிய சாலை. வண்டி மீண்டும்
பெருமூச்சோடு திணறியது...... சாலையிலிருந்து ஒதுங்கி நிழற்பாங்கான இடம்பார்த்து மரத்தடியில் வண்டியை நிறுத்தினார் மணி. இரண்டு பக்கமும் கண்ணுக்கெட்டிய வரையில் யாரும் இல்லை. வேப்பூர் முக்கூட்டுக்கு இன்னும் ஐந்து கி.மீ உள்ளது. வண்டியை விட்டு எல்லோரும் இறங்கினோம். மணி தொலைபேசியில் தன் மெக்கானிக்கை தொடர்பு கொண்டார்... மணி, தொலைபேசியை காதில் வைத்துக் கொண்டே மெக்கானிக் சொல்ல சொல்ல எதையதையோ திருகினார், கழட்டி மாட்டினார், பயனில்லை. சாலையின் இரண்டு பக்கத்தையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தோம். அருகாமையில் உள்ள ஆசிரிய சங்க பொறுப்பாளர்களின் தொலைபேசி எண்களை தேட தொடங்கினார்
மணி. என்னயிருந்தாலும், அவர்கள் ஒரு மெக்கானிக்கை தேடி அழைத்துவர பல மணிநேரம் ஆகும். வண்டியை தள்ளுவதற்காகவே அழைத்து வந்ததுபோல நாங்கள் வாட்டசாட்டமான ஆட்கள்தான். வண்டியை ஐந்து கி.மீ தள்ள வேண்டுமே.......
எதிர்பாராத விதமாக இருசக்கர வண்டியில் ஒருவர் வேகமாக வருவது தெரிந்தது. ஆள் அரவமில்லா சாலையில் யாராக இருந்தாலும் வேகமாகத்தான் வண்டியை ஓட்டுவார்கள். எல்லோருமாக அவரைப் பார்த்து கையை அசைத்தோம். ஏதோ எங்களைப் பார்த்தால் "நல்ல மாதிரியாக" தோன்றியிருக்கும், என்பதுபோல் அருகில் வந்து வண்டியை நிறுத்தினார். நடுத்தர வயதிருக்கும் அவர், இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போல் தோன்றியது. வேறு யாரும் இப்படிபட்ட இடத்தில் வண்டியை நிறுத்தமாட்டார்கள்....
.
அவரிடம் விபரத்தை கூறினோம். "நான் வேப்பூர் முக்கூட்டுதான் செல்கிறேன், அங்கே மகிழுந்து பழுது பார்க்கும் கடைகள் இல்லை... ஆனால், பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர பழுதுபார்க்கும் கடை ஒன்றுள்ளது. நல்ல வாய்ப்பாக கடையிருந்தால் மெக்கானிக்கை அனுப்பி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினார் அந்த நபர்.
எங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. மணிவாசனின் மகிழுந்து
பல்வேறு புதிய வசதிகளைக் கொண்ட உயர்தரமான மகிழுந்து,
அதுவும் புதிதாக வாங்கியது. மணி சாதாரண இடங்களிலெல்லாம் வண்டியை பழுது பார்க்க மாட்டார். மணி ஒரு முடிவுக்கு
வந்ததுபோல் தெரிந்தது...
தொலைபேசி மூலமாக விருத்தாசலத்தில் சங்க பொறுப்பாளர் ஒருவரை பிடித்தார். மேட்டூருக்கு வாடகை வண்டியை எடுத்துக்
கொண்டு, இந்த வண்டியை எடுத்து செல்ல ஏதுவாக ஒரு மெக்கானிக்கையும் அழைத்துவர ஏற்பாடு செய்தார்.
கால்மணி நேரம் கடந்திருக்கும்.வேப்பூர் முக்கூட்டு திசையிலிருந்து இருசக்கர வண்டியில் ஒருவர் வருவதுபோல் தெரிந்தது.
கரியும் எண்ணெய்யும்
படிந்த உடையில், அருகில் வந்த பின்பு அவர் தான்
மெக்கானிக் என உறுதியானது. நடுத்தர வயது, நோயால் இளைத்து போன ஒல்லியான உடலமைப்பு,
அரைபோதையில் வேறு இருப்பது போல் தெரிந்தது.
அவர் வேறு எதுவும் கேட்கவில்லை,
"வண்டி சாவி" என்று கையை நீட்டினார்.
மணிவாசகன் தயங்கியபடியை வண்டிசாவியை நீட்டினார்.
அவர் என்ன செய்கிறார் என்று நோட்டமிட்டபடியே தனது மெக்கானிக்க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார், கிடைக்கவில்லை. பதட்டமாகி, மீண்டும் மீண்டும் தொலைபேசியை
அழுக்கிக் கொண்டேயிருந்தார். ஒருவழியாக அவரது மெக்கானிக் தொடர்பு கிடைத்தது...தொலைபேசியை
எடுத்துக்கொண்டு,
"ஆள பார்த்தா நல்லாயில்ல,
இருசக்கர மெக்கானிக்
வேற, போதையில இருக்கிற மாதிரி தோனுது........." பேசிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து சென்றார் மணி.
மெக்கானிக், எதுவும் கேட்காமல் மகிழுந்தின்
முன்பக்கத்தை திறந்து ஏதோ சரி செய்துக்கொண்டிருந்தார். மணி பதட்டாக திரும்பி வந்தார், தொலைபேசியை
அந்த மெக்கானிக்கிடம் நீட்டினார்.
"யாரு"
-.
"என் மெக்கானிக்கிடம் பேசுங்கள்"
-
"அவரிடம் நான் ஏன் பேச வேண்டும்,
நீங்கள் பேசுங்கள்"
என்றவர், சாவியை நீட்டி "ஸ்டார்ட் பண்ணுங்க" என்றார்.
மணிவாசகன் வண்டியை
"ஸ்டார்ட்" செய்தார். கிளம்பியது
வண்டி. அனைவரும் முகத்திலும் மகிழ்சி.
"எவ்வளவு"
என்றார் மணி-
..."இருநூறு" என்றார் மெக்கானிக்
..
மணி ஐநூறு ரூபாயை நீட்டினார்.
வேண்டாம் என்பதுபோல்
தலையை லேசாக ஆட்டி "..."இருநூறு" என்றார்.
இரண்டு நூறு ரூபாயை கொடுத்தார்.
வாங்கிய வேகம் திரும்பி புறப்பட்டார் அந்த மெக்கானிக்
...... தே...ங்....ஸ்......,
ந...ன்...றி
நாங்கள் சொன்னது அவர் காதில் விழுந்ததாக தெரியவில்லை.
வண்டியில் ஏறி அமர்ந்தோம், புறப்பட்டோம். சங்க பொறுப்பாளரை தொலைபேசியில் அழைத்துக் கொண்டே, "என் வாழ்நாளில் இப்படிபட்ட
மெக்கானிக்கை பார்த்ததில்லை" என்றார் மணி. "அவன் திமிர் பிடித்தவனாக
இருப்பானோ" என்றார் பாண்டிதுரை. "இல்லை, தொழிற்திமிர்" பிடித்தவர்
என்றேன்.
No comments:
Post a Comment