Tuesday, 26 May 2020


தொலைந்த புத்தகம்

                "நீங்கள் பேசத் தொடங்கி பத்து நிமிடம்கூட இருக்காது, அதற்குள் பேச்சை முடித்துவிட்டீர்களே.....என்னா ஆச்சு ? உடல்நிலை சரியில்லையா ?" என்றார் புலவர் நல்லூர் கிழார். ஆனால் கைதட்டு மட்டும் ரொம்ப நேரம் ஒலித்து கொண்டேயிருந்தது...

அப்படியா ? ஏதோ நீண்ட நேரம் பேசிவிட்டது போல் உணர்ந்தேன்......."நேற்று இரவு சரியான தூக்கமில்லை" என்று மழுப்பலாக பதில் சொன்னேன்.

                நாலு நகைச்சுவை, ஆறு பாட்டு, ஏழெட்டு துணுக்கு என்று கோர்த்து வைத்துக் கொண்டுதான் மேடையேறினேன்...... எதை சொன்னேன், எதை விட்டேன்..... பேசியதை நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை.

"இன்று இரவே மருத்துவரைப் பார்த்துவிடலாமா? ஆவுடையாரை உடன் அனுப்பவா ?" என்றார் நல்லூர் கிழார்.

பல நாட்களாக சரியான தூக்கம் இல்லை என்று மருத்துவரைப் பார்த்தேன். எதையாவது கருத்துக்கோ மனதுக்கோ ஒவ்வாதவற்றை படித்துவிட்டால் அன்றிரவு முழுவதும் சரியா தூக்கம் இருப்பதில்லை என்றேன் - கொஞ்சநாள் புத்தகங்களைப் படிக்காமல் இருங்கள் என்றார்.

                   அனிதா தற்கொலை, இசைப்பிரியா வன்கொடுமை, முத்துக்குமார் தீக்குளிப்பு..... ஈழப்படுகொலைகள்.. படுபாதக செயல்கள், பாலியல் வன்கொடுமைகள், பலர்கூடி அடித்தே கொல்லுதல், வறுமை தற்கொலைகள், விதண்டா வாதங்கள்  - இவை அடிக்கடி நினைவுக்கு வருகின்றன என்றேன் - கொஞ்சநாள் தினசரி நாளிதழ்களை படிக்காதீர்கள், தொலைக்காட்சி பார்க்காதீர்கள் என்றார். 

                உடற்பயிற்சி, உணவுமுறை என்று எந்த யோசனையும் உதவவில்லை. நன்றாக தூங்கி பல வாரங்கள் ஆகின்றன.......

                சுற்றியுள்ள எல்லா நண்பர்களை விசாரித்தேன்..... அவர்கள் எல்லோரும் நிம்மதியாகவே தூங்குகின்றனர். எல்லோருக்கும் கல்லு மனசு..........
-----------
"இரண்டு வாரத்திற்கு எல்லா நிகழ்சிகளையும் இரத்து செய்யுங்கள்.....உடம்பில் பெரிதா ஒன்னும் கோளாறு இ்ல்லை, நல்லா தூங்கினால் சரியாகிவிடும்...." மாத்திரையை எழுதினார் மருத்துவர். 
                மாத்திரைதான் ஒரே வழி என முடிவு செய்தார் மருத்துவர், ஆனால் மாத்திரையால் வரும் தூக்கம், நிறைவானதாக இல்லை. நடு இரவில் விழிப்பு வந்து அரைகுறை தூக்கம்; கனவும், கண்விழிப்புமாக இரவுப் பொழுது நீள்கிறது......
.................
கண்முன்னே இருந்த நாளிதழை பிரிக்கவே இல்லை.... சர்க்கரை இல்லாத தேனீர்.. குடித்து முடிக்கவில்லை..

" வணக்கம் அய்யா" - என்றவாறே ஐந்தாறு ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்....."ம்ம் என்ன செய்தி" ? - என்றேன்.

அய்யா, நேற்று நீங்க ஒரு பத்து நிமிடம்தான் பேசினீர்கள்.... அருமையான பேச்சு அய்யா,... - சொற்களை ஒன்று ஒன்றாக இடைவெளிவிட்டபடி சொன்னான் ஒருவன்.
எதை பற்றி சொல்கிறான்.? என்ன பேசினேன்.... நினைவு இல்லையே, எதாவது  உளறி கொட்டினேனா?  நலம் விசாரிக்க வந்திருக்கிறார்களா?  ஒன்றும் புரியவில்லை.- தயங்கியவாறே,
அப்படியா ? என்றேன்.

ஆமாம் அய்யா, நேற்று பேசும்போது, இலங்கையை அடிபணிய வைக்க இந்திய செய்த சூழ்ச்சிக்கு தமிழனம் பலிகிடா ஆனதையும், தமிழின அழிவு - இந்திய உளவுதுறை சதியைப் விரிவாக சொன்னீர்கள்.... அதற்கு இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டினீர்கள்.... அதான், அந்த"தவறி விழுந்த இடங்கள்"-னு ஒரு புத்தகத்தைப் பற்றி சொன்னீர்கள், அந்த புத்தகம் வேணும் அய்யா..... என்றனர்.....

யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தேன்..... புத்தகத்தின் தலைப்பு நன்றாக ஞாபகமுள்ளது, "தவறி விழுந்த இடங்கள்"  -  "உடைந்த சுக்கானோடு கடற்பயணம்". நீலமும் பச்சையும் கலந்த அட்டை போட்டது, கைக்கு அடக்கமான புத்தகம்,,....... எழுதியவர் பெயர்கூட "அய்ந்திரத்தார்".
நேற்று இதைப் பற்றியா பேசினேன்..?.....

வெகு நேரமாய் தேடிக்கொண்டிருகிறேன்..........தேடிக்கொண்டிருகிறேன்........ அய்ந்தாறு அலமாரிகளில் உள்ள புத்தகங்களை கீழே இறக்கியாயிற்று..... புத்தகம் கிடைத்தபாடில்லை........ வியர்த்து வியர்த்து கொட்டுகிறது.... வெகு நாட்கள் சுத்தம் செய்யப்படாத அலமாரி.... தூசி மூக்கிலேறி தும்மல் வந்து கொண்டேயிருந்தது....

"அய்யா.... அய்யா......"வெளியிலிருந்து அழைப்பது கேட்டது. படிந்திருந்த தூசை தட்டிவிட்டுக் கொண்டே வெளியில் வந்தேன்.....

"வாங்க.. வேங்கையார்..... உட்காருங்கள், எல்லோரும் உட்காருங்கள்" -என்றேன். எதிரே மூன்று நாற்காலிகளே இருந்தன.... மூன்று பேர் உட்கார, பின்னால் மூன்று பேர் நின்றனர்......
ம்ம்ம்.... சொல்லுங்கள்....
அய்யா, நேற்று மன்றத்தில் பேசும்போது...
ம்ம்ம்.... சொல்லுங்கள்....

"மொழியை சிதைத்த சூழ்ச்சிகள், தொலைந்து போன ஓலைச்சுவடிகள், இனத்திற்குள் பரவிய பலவகை நஞ்சுகள்  - என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புத்தகத்தில் உள்ளதாக சொன்னீர்கள். அதை தந்தால் படித்துவிட்டு தருகிறோம்.... - என்றார் வேங்கையார்.

"அதைத் தான் ஒரு மணி நேரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்......- வேர்வையால் அரைகுறையாக  நனைந்த சட்டையில் படிந்திருந்த தூசை தட்டிவிட்டுக் கொண்டே சொன்னேன்.

"இதைக் கேட்டுதான் ஆராய்ச்சி மாணவர்கள் வந்தனர்".....என்று சொல்லிக் கொண்டே அவர்கள் எங்கே என தேடினேன்..... அவர்கள் எதிரே உள்ள வேப்பமரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்....

"இதோ கண்டுபிடித்துவிடுவேன்....இருங்கள்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தேன்.
.
தேடிக்கொண்டேயிருக்கிறேன்......... தேடிக்கொண்டிருகிறேன்....... கால் வைக்கக்கூட  இடமின்றி, அலமாரியிலிருந்து இறக்கிய புத்தகங்கள் ஆளுயரம் குவிந்து விட்டன......

"அய்யா.... அய்யா......"   மீண்டும் வெளியிலிருந்து அழைப்பது கேட்டது. சோர்ந்து போய் தட்டுதடுமாறி வெளியே வந்தேன்......

பெருங்கூட்டமே வாசலில் நின்றிருந்தது.... ஓரிருவர் முகங்கள்தான் தெரிந்தன..... "பச்சையப்பனார்..... நீலமேகனார்...... வாருங்கள், என்ன புத்தகம்தானே... எதற்கு ? – என்றேன்.

"தமிழ் நாட்டின் மலை, ஆறு, கடல்; மேடு, பள்ளம், படுகுழி; பூசல், போர்; கரவு, சூது, சூழ்ச்சி; இரண்டாயிரமாண்டு பகையை வெல்லும் வழிகள்..... என்றெல்லாம் அதில் இருப்பதாக சொன்னீர்கள்..... அதான்"  

"இதைக் கேட்டுதான் தன் தோழர்களோடு வேங்கையார் வந்தார்" என்றவாறே அவர்களை தேடினேன். அவர்கள் எதிரே புங்கமர நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்......

"இதோ கண்டுபிடித்துவிடுகிறேன்" என்று உள்ளே வந்தேன்..........

எல்லா அலமாரிகளிலிருந்தும் புத்தகங்களை கீழே இறக்கியாயிற்று........ நான் புதையுண்டு போகுமளவு உயர்ந்து நிற்பது என்ன புத்தக குவியலா..... காகித குவியலா....... குப்பைக் குவியலா....... மணற் குவியலா... புத்தகம் கிடைக்கவில்லை..... புதையுண்டு போனேன்....

இனியாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது......இனியாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது......
……………………………………………………

யாரே கையை பிடித்து தூக்குவது போலிருந்தது.....கண்விழித்தேன்.... மருத்துவர் நாடி பார்த்துக் கொண்டிருக்கிறார்........ சுற்றமும், நட்பும் சூழ நின்றிருந்தன.....